தவக்கால சிந்தனைகள் 19 : சேசுவின் மறையுரை தொடர்ச்சி... கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து..

ஆனால் புதுமை எவ்வளவு பெரிதோ, அவ்வளவிற்கு அதை ஆற்றியவருடைய மகிமை அதிக பெரிதாயிருக்கின்றது. கடவுளே இப்படிக் கூறுகிறார்:

“பாருங்கள், என் நேசர் அதை விரும்பினார். பெற்றுக் கொண்டார். அதை நான் அவருக்கருளினேன். ஏனென்றால் என் பார்வையில் அவர் மாண்பு பெரிதாயிருக்கின்றது. மேலும் இங்கே அவர் உரைக்கின்றார்:

அவரால் ஆற்றப்பட்ட இப்புதுமை அளவற்றதாயிருப்பது போல் அவருடைய மாண்பிற்கும் ஒரு அளவில்லை.” சர்வேசுரனிடமிருந்து இப்புதுமையை இயற்றியவருக்கு வருகிற மகிமையும், அவரிடமிருந்து பிதாவுக்குத் திரும்பும் மகிமையும் ஒன்றே. ஏனென்றால் சுபாவத்திற்கு மேலான எந்த மகிமையும் சர்வேசுரனிடமிருந்து வருவது போலவே அது தான் புறப்பட்ட இடத்தைச் சென்றடைகிறது. சர்வேசுரனின் மகிமையும், அது அளவற்றதாயிருந்தாலும் கூட, அர்ச்சிஷ்டவர்களுடைய மகிமையின் வழியாக அதிகரித்து மென்மேலும் பிரகாசிக்கிறது.

ஆதலால் நான் சொல்லுகிறேன்: மனித குமாரன் சர்வேசுரனால் மகிமைப்படுத்தப்பட்டது போல, சர்வேசுரனும் மனித குமாரனால் மகிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். சர்வேசுரனை நான் என்னில் மகிமைப்படுத்தியிருக்கிறேன். சர்வேசுரனும் தம் சுதனை தம்மிடத்தில் மகிமைப்படுத்துவார். சீக்கிரமே அவர் அவரை மகிமைப்படுத்துவார்.

இரண்டாம் ஆளாகிய சுதனாகிய சர்வேசுரனுடைய ஞானப் பொருண்மையே! களிகூர்ந்து அக்களிப்பாயாக! இதோ நீ உன்னுடைய ஆதீனத்திற்குத் திரும்பிச் செல்லவிருக்கிறாய்! இத்தனை நீண்ட காலமாய் சுய நாட்டை விட்டு கீழ்மைப்படுத்தப்பட்டபின் மீண்டும் மேலெழுந்து செல்லப் போகிற அவருடைய சரீரமே, மகிழ்ந்து ஆர்ப்பரிப்பாயாக! உன்னுடைய உறைவிடமாக ஆதாமின் மோட்சமல்ல, பிதாவின் உந்நத மோட்சமே உனக்கு இதோ கொடுக்கப்படவிருக்கிறது. சொல்லப்பட்டுள்ளபடியே, கடவுளின் ஆச்சரியத்துக்குரிய கட்டளை ஒரு மனிதனின் உதடுகளின் வழியாகக் கொடுக்கப்பட்டு, சூரியனை நிறுத்துமானால், மனிதரின் சரீரம் மேலே எழுந்து சென்று, அவருடைய மகிமைப்படுத்தப்பட்ட நிறை வடிவில், பிதாவின் வலது பாரிசத்தில் அமரும் ஆச்சரியத்தை நட்சத்திரங்கள் காணும்போது அவற்றின் மத்தியில் என்ன நடக்கும்!

என் சிறு பிள்ளைகளே! சிறிது காலம் நான் உங்களோ டிருப்பேன். அதன்பின் அநாதைக் குழந்தைகள் இறந்து போன தங்கள் பெற்றோரைத் தேடுவது போல நீங்கள் என்னைத் தேடுவீர்கள். அழுது கொண்டே அவரைப் பற்றிப் பேசிக் கொண்டு அலைவீர்கள். மவுனமாகி விட்ட அவருடைய கல்லறையை வீணில் போய்த் தட்டுவீர்கள். மோட்சத்தின் நீலக் கதவுகளையும் தட்டுவீர்கள். “எங்கள் சேசு எங்கே? அவர் எங்களுக்கு வேண்டும். அவர் இல்லாமல் உலகத்தில் ஒளியுமில்லை. மகிழ்ச்சியுமில்லை, அன்புமில்லை. அவரை எங்களுக்குத் தாருங்கள். அல்லது எங்களை உள்ளே வர அனுமதியுங்கள். அவர் எங்கே இருக்கிறாரோ, அங்கே நாங்கள் இருக்க வேண்டும்” என்று உங்கள் ஆன்மாக்களை அன்பைத் தேடி மன்றாடும் தேடுதலில் மேலே எழுப்புவீர்கள். ஆனால் இப்போதைக்கு நான் போகும் இடத்திற்கு நீங்கள் வர முடியாது. யூதேயர்களுக்கும் நான் இப்படிக் கூறினேன்:

“பின்னால் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகுமிடத்திற்கு உங்களால் வர முடியாது” என்று. அதையே நான் உங்களுக்கும் கூறுகிறேன்.

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479