மாதாவின் இரண்டாம் காட்சி

முதல் காட்சியில் நடந்ததுபோல், அந்த அஸின் ஹேரா மரத்தின்மேல் மாதா காணப்படுகிறார்கள். 

லூஸியா கேட்கிறாள்: “அம்மா! உங்களுக்கு நான் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?” 

"அடுத்த மாதம் 13-ம் நாள் நீங்கள் இங்கு வர வேண்டும். ஒவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்ல வேண்டும். நீ வாசிக்கக் கற்றுக்கொள். நான் வேறு என்ன விரும்புகிறேன் என்பதை பின்னால் தெரிவிப்பேன்.” 

அப்போது லூஸியா ஒரு குறிப்பிட்ட நோயாளியைக் குணமாக்கும்படி கேட்க, அதற்கு மாதா:

“அவள் தன் வாழ்க்கையைத் திருத்திக் கொண்டால் இந்த ஆண்டில் குணமடைவாள்.” 

"நீங்கள் என்னை மோட்சத்திற்குக் கொண்டு செல்லுங்களம்மா.”

"ஆம். ஜஸிந்தாவையும் பிரான்சீஸையும் சீக்கிரம் அங்கு எடுத்துக்கொள்வேன். ஆனால் நீ கூடக் கொஞ்ச காலம் இங்கே இருக்க வேண்டும். என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி சேசு உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார். உலகில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த சேசு ஆசிக்கிறார்.” 

"நான் தனியாகவா இங்கு இருக்க வேண்டும்?”

“இல்லை மகளே. அது உனக்குத் துன்பமாயிருக்கிறதா? திடமிழந்து போகாதே. உன்னை விட்டு ஒருபோதும் நான் செல்லமாட்டேன். என் மாசற்ற இருதயம் உன் அடைக்கலமாகவும் கடவுளிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும் வழியாகவும் இருக்கும்.”

… அதன்பின் “நம் அன்னையின் வலது உள்ளங்கையில் முட்களால் சூழப்பட்ட ஒரு இருதயம் இருந்தது. அம்முட்கள் அவ்விருதயத்தை ஊடுருவிச் சென்றன. மனுக்குலத்தின் பாவங்களால் நிந்திக்கப்படும் மரியாயின் மாசற்ற இருதயம் அது என்றும் அவற்றிற்குப் பரிகாரம் செய்யப்பட அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் நாங்கள் உணர்ந்தோம்” என்று லூஸியா எழுதியிருக்கிறாள்.

பிரான்சிஸ் காட்சியைக் கண்டான். ஆனால் மாதாவின் குரலைக் கேட்கவில்லை. அவன் லூஸியாவைப் பார்த்து: "மாதாவின் கரத்தில் ஒரு இருதயம் இருந்ததே, ஏன் லூஸியா? உலகத்தில் ஒளி வீசியதே, நிலத்தில் படிந்த ஒளியில் நீ இருந்தாய். நானும் ஜஸிந்தாவும் வானத்தை நோக்கிச் சென்ற ஒளியில் இருந்தோம். அதன் பொருள் என்ன?”

“அதன் பொருள் இதுதான். நீயும் ஜஸிந்தாவும் விரைவில் மோட்சம் செல்வீர்கள். மாதாவின் மாசற்ற இருதயத்துடன் நான் கூடக் கொஞ்ச காலம் உலகத்தில் இருப்பேன்.”

“எத்தனை வருடம் இங்கிருப்பாய்?” 

"எனக்குத் தெரியாது. அநேக வருடங்கள்.” 

“நம் மாதாவா அப்படிச் சொன்னார்கள்?”

"ஆம். நம் இருதயத்தில் வீசிய அந்த ஒளியில் நான் அப்படிக் கண்டேன்.” 

 "ஆமாம். அது சரிதான். நானும் அப்படித்தான் கண்டேன்' என்றாள் ஜஸிந்தா.

"நான் சீக்கிரம் மோட்சம் செல்வேன்... நானும் ஜஸிந்தாவும் சீக்கிரம் மோட்சத்திற்குப் போவோம். மோட்சம்! மோட்சம்!” என்று பிரான்சிஸ் அடிக்கடி கூறி வந்தான்.