பரிசுத்தம்

1. மெய்யான திருச்சபையின் இரண்டாம் அடையாளம் என்ன? 

மெய்யான திருச்சபை பரிசுத்தமாயிருக்க வேண்டியது.

2. ஏன் பரிசுத்தமாயிருக்க வேண்டியது? 

(1) அதை ஸ்தாபித்தவராகிய சேசுநாதர் அது பரிசுத்தமாயிருக்கும்படி மன்றாடினார். “அவர்களைச் சத்தியத்தில் அர்ச்சித்தருளும்” (அரு.17:17).

(2) “கிறீஸ்துநாதர் கறை திரை இவை முதலியவைகள் ஒன்றுமில்லாமல், அர்ச்சிக்கப்பட்டதும், மாசற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் துலங்கப்பண்ணவும், தம்மைத் தாமே கையளித்தார்” என்று அர்ச். சின்னப்பர் வசனித்திருக்கிறார் (எபே. 5:27).

(3) மனிதர்களைப் பரிசுத்தராக்கவே சேசுநாதர் திருச் சபையை ஸ்தாபித்தார்.

91. மெய்யான திருச்சபை பரிசுத்தமாயிருக்கிறதெப்படி?

திருச்சபையை ஸ்தாபித்தவராகிய சேசுகிறீஸ்துநாதர் பரிசுத்தரும், திருச்சபை படிப்பிக்கிற போதனை பரிசுத்தமும், அந்தப் போதனையின்படி நடக்கிறவர்கள் பரிசுத்தர்களுமாயிருக்கிறதினாலே தான்.

1. இன்னும் மெய்யான திருச்சபையைப் பொய் மதங்களினின்று பகுத்தறியும்படி அதன் அர்ச்சியசிஷ்டதனத்தைக் காட்டும் விசேஷ அடையாளங்கள் எவை? 

திருச்சபையைச் சேர்ந்தவர்களுள் சிலரிடத்தில் விளங்கும் மகத்துவத்துக்குரிய அர்ச்சியசிஷ்டதனமும், புதுமை வரம், தீர்க்கதரிசன வரம் முதலிய இஸ்பிரீத்துசாந்துவின் சில அருமையான கொடைகளுமே.

புதுமை வரம் மெய்யான திருச்சபைக்கு மாத்திரம் உண்டு. ஏனெனில் சுவாமி புதுமை வரத்தை அர்ச்சியசிஷ்டவர் களுக்குக் கொடுப்பாரேயயாழிய மற்றவர்களுக்குக் கொடுக்கவே மாட்டார். ஆகையினாலே புதுமை வரம் மெய்யான சபையை மற்ற சபைகளினின்று பிரித்து, சுட்டிக்காட்டுகிறது.

2. பரிசுத்ததனத்தைக் காட்டும் மேற்சொன்ன அடையாளங்கள் கீழ்த்திசையிலிருக்கும் கிரேக்க சபை முதலிய பிரிவினை சபைகளுக்கு உண்டோ? 

(1) இந்தச் சபைகளை ஏற்படுத்தினவர்கள் அர்ச்சிய சிஷ்டவர்கள் அல்லவென்பது நிச்சயம். அவர்கள் ஒரு புதுமை யாகிலும் செய்யவேயில்லை.

(2) ரோமன் திருச்சபையோடு கூடியிருக்குமட்டும் கீழ்த்தேசத்துச் சபைகளில் அநேக அர்ச்சியசிஷ்டவர்களிருந்தார்கள். ஆனால் அவர்கள் பிரிந்த காலந்துவக்கி இதுவரையிலும், அவர் களுக்குள் மெய்யான அர்ச்சியசிஷ்டவர்கள் ஒருவருமில்லை.

3. பரிசுத்தம் என்னும் அடையாளம் புரோட்டஸ்டாண்டாருடைய மதங்களில் உண்டா? 

(1) புரோட்டஸ்டாண்ட் என்னும் மதங்களை உண்டாக்கினவர்கள் அர்ச்சியசிஷ்டவர்களல்ல.

(2) இவைகள் போதிக்கிற சில படிப்பினைகள் முழுதும் கண்டனத்துக்குரியதா யிருக்கின்றன.

(3) இவைகள் உன்னத புண்ணியங்களைச் செய்ததினிமித்தம் புதுமை வரம் அடைந்த அர்ச்சியசிஷ்டவர்களைப் பிறப்பிக்கிறதில்லை.

4. புரோட்டஸ்டாண்டு மதங்கள் உண்டாவதற்குப் பிரதான காரணமாயிருந்தவர்கள் இன்னாரென்று சொல்லு.

ஜெர்மனி தேசத்தில் “லூத்தர்” என்பவனும், இங்கிலாந்தின் அரசனான “எட்டாம் ஹென்றி” என்பவனும் ஆகிய இவ்விரண்டு பேர்களும் புரோட்டஸ்டாண்டு மதங்கள் உண்டாவதற்குப் பிரதான காரணமாயிருந்தார்கள்.

லூத்தர் என்பவன் யார்? 

நானூறு வருஷங்களுக்கு முன் புரோட்டஸ்டாண்டு மதம் உலகத்தில் இல்லை. அந்தச் சபையை முதன்முதல் உண்டு பண்ணினவன் யார் என்றால், ஜெர்மனி தேசத்தில் பிறந்த “மார்ட்டின் லூத்தர்” என்பவன். அவன் அர்ச். அகுஸ்தீனார் சபையைச் சேர்ந்து, நல்ல சந்நியாசியாக நடந்தான். ஆனால் ஒரு நாள் ஆங்காரத்தினாலே கெட்டுப்போய், தன் மடத்தை விட்டு, தேவ விசுவாசத்திற்கு விரோதமான கள்ளப் போதனைகளைப் போதிக்க ஆரம்பித்தான். அர்ச். பாப்பானவரால் திருச்சபைக்குப் புறம்பாய்த் தள்ளப்பட்டபிறகு, அவன் தனது குருத்துவ மகிமையை மறுதலித்து, தன் மடத்தை விட்டு கெட்டுப் போன ஒருத்தியை மனைவியாகச் சேர்த்துக் கொண்டு தாறுமாறாய் நடந்தான். கடைசியாய் அவலமாய்ச் செத்தான்.

7. எட்டாம் ஹென்றி என்னும் இங்கிலாந்து அரசன் எப்பேர்ப்பட்டவன்? 

லூத்தர் புதிதாய் வேத கலகத்தை உண்டுபண்ணின போது, எட்டாம் ஹென்றி அரசன் அவனை எதிர்த்து வேத சத்தியங்களைக் காப்பாற்றுகிறதற்கு ஒரு புஸ்தகம் எழுதியிருந்தான். பாப்பானவர் அந்தப் புஸ்தகத்தை வாசித்துச் சந்தோஷப்பட்டு, “விசுவாசத்தைக் காப்போன்” என்கிற பேரை அவனுக்குக் கொடுத் தார். ஆனால் பிற்காலத்தில் அவன் மோக ஆசையினால் கெட்டுப் போய், தன் பெண்சாதியைத் தள்ளிவிட்டு, தாறுமாறுக் கலியாணம் செய்ததினாலே, பாப்பானவரால் சபிக்கப்பட்டு, திருச்சபையை விட்டுப் பிரிந்து, தான்தானே இங்கிலாந்து திருச்சபைக்குத் தலைவனென்று அறிவித்து, தனது இராச்சியத்தில் வேத பிரிவினை யான சபையை ஸ்தாபித்து, பதித மார்க்கத்தை ஏற்படுத்துவதற்கு வழிகாட்டினான். ஒரு வருஷம் பொறுத்து ஹென்றி தன் புது மனைவிமேல் சந்தேகப்பட்டு அவளுடைய தலையை வெட்டக் கட்டளையிட்டான். அவளுக்குப் பிறகு இன்னமும் ஐந்து பெண் களைக் கட்டினான். அவர்களுக்குள் ஒருத்தி தலை வெட்டப்பட்டு நிற்பாக்கியமாய் இறந்துபோனாள். கடைசியாய் அரசன் பற்பல புண்ணியவான்களைச் சாகடித்துச் செத்துப் போனான்.

8. புரோட்டஸ்டாண்டாரின் வேத படிப்பினை எப்பேர்ப்பட்டது? 

(1) அவைகள் லூத்தர் போதித்தபடியே; எப்பேர்ப் பட்ட பாவங்களைச் செய்தாலும் பரவாயில்லை; ஆனால் கிறீஸ்துவை நம்பினால் போதும் என்று சொல்லி, புண்ணியக் கிரிகைகள் அவசியமில்லையென்று படிப்பிக்கின்றன.

(2) சேசுநாதர் உண்டாக்கின ஏழு தேவத்திரவிய அநுமானங்களையும் எந்தப் புரோட்டஸ்டாண்டு மதமும் ஏற்றுக் கொள்ளவில்லை.

(3) நமதாண்டவர் அநுசரித்துப் படிப்பித்த தபசு, ஒருசந்தி, சுத்தபோசனம் முதலிய நற்கிரியைகளை, புரோட்டஸ் டாண்டார் முற்றிலும் தள்ளிப் போடுகிறார்கள்.

(4) சேசுநாதரால் புகழப்பட்ட தரித்திரம், விரத்தத் துவம், கீழ்ப்படிதல் ஆகிய சுவிசேஷத்துக்கடுத்த புத்திமதிகளைப் புறக்கணித்து வருகிறார்கள்.

9. புரோட்டஸ்டாண்டு மதங்களில் உத்தம ஞான சீவியமும், மேலான அர்ச்சியசிஷ்டதனமும், புதுமை முதலிய வரங்களும் துலங்குகின்றனவா?

இச்சபைகளில் நேர்மையான கருத்தோடு நன்மாதிரி கைக்குரிய சீவியம் சீவிப்பவர்கள் இருந்தாலும், இவைகளில் ஒன்றிலாகிலும், உன்னத புண்ணியங்கள் செய்ததினிமித்தம், புதுமை வரம் அடைந்த அர்ச்சியசிஷ்டவர்கள் சீவித்ததாகக் காணோம்.

இங்கிலாந்து புரோட்டஸ்டாண்டு மதத்தைக் கைப்பற்றுமுன் அத்தேசத்தில் அநேக அர்ச்சியசிஷ்டவர்கள் இருந்தார்கள். ஆனால் அத்தேசத்தார் ரோமன் கத்தோலிக்க திருச்சபையை விட்டுப் பிரிந்த காலந்துவக்கி இதுவரையிலும், அவர்களுக்குள் மெய்யான அர்ச்சியசிஷ்டவர்கள் ஒருவருமில்லை.

10. ரோமன் கத்தோலிக்க திருச்சபை பரிசுத்தமா? 

அத்திருச்சபை எப்போதும் சேசுநாதர் போதித்த சற்போதனைகளை அநுசரிக்கப் படிப்பித்து, நமதாண்டவர் அநுசரித்துப் படிப்பித்த தவம், செபம், ஒருசந்தி முதலிய நற்கிரியைகளைச் செய்ய கிறீஸ்துவர்களைத் தூண்டி, சேசுநாதர் உண்டாக்கின ஏழு தேவத்திரவிய அநுமானங்களைத் தன் பிள்ளைகளாகிய விசுவாசிகளுக்குப் பகிர்ந்து கொடுத்து, எக்காலத்திலும், கணக்கற்ற அர்ச்சியசிஷ்டவர்களைப் பிறப்பித்துக் கொண்டு வருகிறது. மேலும் கணக்கில்லாத புதுமைகள் அதில் மாத்திரம் நடந்தேறி வருகின்றன.

இக்காலத்து அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரத்தை வாசிப்போமானால், புதுமைகள் இப்போது முதலாய்க் கத்தோ லிக்கத் திருச்சபையில் உண்டென்று அறிவோம். இன்னமும் லூர்து நகர் முதலிய இடங்களுக்குப் போகிறவர்கள், வெகு ஆச்சரியத் துக்குரிய புதுமைகளைத் தங்கள் கண்ணாலே பார்க்கலாம்.

11. அப்படியானால் நாம் என்ன தீர்மானிக்க வேண்டும்? 

கிறீஸ்துநாதர் வாக்களித்திருக்கும் அர்ச்சியசிஷ்டதனம் ரோமன் திருச்சபையில் மாத்திரம் முழுதும் இருக்கிறதேயயாழிய அதைவிட்டுப் பிரிந்திருக்கிற சபைகளுக்குக் கிடையாது.