விசுவாசப் பிரமாணம்

1. விசுவாசப் பிரமாணம் சொல்லு.

(1) பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.

(2) அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசுகிறீஸ்துவையும் விசுவசிக்கிறேன்.

(3) இவர் இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச். கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.

(4) போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.

(5) பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிட மிருந்து உயிர்த்தெழுந்தார்.

(6) பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.

(7) அவ்விடத்தில் இருந்து சீவியரையும், மரித்தவ ரையும் நடுத்தீர்க்க வருவார்.

(8) இஸ்பிரீத்துசாந்துவை விசுவசிக்கிறேன்.

(9) பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக் கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதிதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.

(10) பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.

(11) சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.

(12) நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். ஆமென்.

2. நாம் ஜெபித்து வரும் விசுவாசப் பிரமாணத்தை எவ்விதம் அழைப்பதுண்டு?

அப்போஸ்தலர்களுடைய விசுவாசப் பிரமாணம் என்று அழைப்பதுண்டு.

3. விசுவாசப் பிரமாணமானது அப்போஸ்தலர்களுடைய விசுவாசப் பிரமாணம் என்று சொல்லுவானேன்?

அப்போஸ்தலர்களால் போதிக்கப்பட்ட பிரதான விசுவாச சத்தியங்களின் தொகையும், திருச்சபையின் ஆதிகாலத்திலிருந்தே, அதாவது அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்தே கிறீஸ்தவர்களுக்குள் வழங்கிவந்த பிரதான விசுவாச சத்தியங்களின் சுருக்கமும், அதில் அடங்கியிருக்கிறபடியினாலேதான். இப்போது செபிக்கப்படும் விசுவாசப் பிரமாணத்தின் மூல வாக்கியம் கல்லிய தேசத்தில் 4-ம் நூற்றாண்டில் திட்டமாய் நிலைப் படுத்தப்பட்டது.

4. விசுவாசப் பிரமாணம் எப்படிப் பிரிக்கப்பட்டிருக்கிறது?

பன்னிரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.

5. விசுவாசப் பிரமாணத்தின் பன்னிரண்டு பிரிவுகளில் அடங்கி யிருக்கும் விஷயங்கள் எவை?

சர்வேசுரன் ஒரே ஒருவராயிருந்தும், பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்து என்னும் மூன்று மெய்யான தனித்தனி ஆட்களா யிருக்கிறார் என்னும் பரம இரகசியமும், விசேஷ காரணத் தினிமித்தம் ஒவ்வொரு தேவ ஆளுக்கும் உரியதாகக் குறித்துச் சொல்லப்பட்ட செயல்களும் அடங்கியிருக்கின்றன.

6. இந்தப் பரம இரகசியத்தைப் பற்றிய போதகம் விசுவாசப் பிரமாணத்தில் எத்தனை பாகங்களாகப் பிரித்து எழுதப்பட்டிருக்கிறது?

மூன்று பெரிய பாகங்களாகப் பிரித்து எழுதப்பட்டிருக் கிறது.

7. இம்மூன்று பாகங்களை விவரித்துச் சொல்லு.

(1) முதற்பிரிவு அடங்கிய முதற் பெரிய பாகத்திலே அர்ச். தமதிரித்துவத்தின் முதல் ஆளாகிய பிதாவினுடைய தேவ சுபாவத்தையும் இலட்சணங்களையும், மேலும் சிருஷ்டிப்பையும் குறித்துக் காட்டியிருக்கிறது.

(2) இரண்டாம் பிரிவு முதல் ஏழாம் பிரிவு வரையி லுள்ள இரண்டாம் பெரிய பாகத்தில், அர்ச். தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதனுடைய மனித அவதாரத்தைப் பற்றியும், மனுக்குல இரட்சணியத்தைப் பற்றியும் விவரிக்கப் பட்டிருக்கிறது.

(3) எட்டாம் பிரிவு முதல் பன்னிரண்டாம் பிரிவு வரை அடங்கிய மூன்றாம் பாகத்தில் அர்ச். தமத்திரித்துவத்தின் மூன்றாம் ஆளாகிய இஸ்பிரீத்துசாந்துவைப் பற்றியும், நமது அர்ச்சிப்பைப் பற்றியும், வரப்பிரசாதத்தினால் இவ்வுலகில் துவக்கப்பட்ட நமது அர்ச்சிப்பு நித்திய பேரின்ப மகிமையினால் மறு உலகத்தில் அடையப்போகும் முடிவைப் பற்றியும் சொல்லப்பட்டிருக் கின்றது.

8. அப்போஸ்தலர்களுடைய விசுவாசப் பிரமாணம் தவிர வேறு விசுவாசப் பிரமாணங்களும் உண்டா?

உண்டு.

(1) அப்போஸ்தலர்களுடைய விசுவாசப் பிரமாணத்தில் சுருக்கமாய் அடங்கியிருக்கும் சத்தியங்கள், நீசேயா, கொன்ஸ்டாண்டிநோபில் என்கிற நகர்களில் கூடின சங்கங்களால் விவரிக்கப்பட்டன. இந்த விசுவாசப் பிரமாணம்தான் திவ்விய பூசையில் சொல்லப்படுகிறது.

(2) குருக்கள் சங்கீதச் செபத்தில் காலையில் வேண்டிக் கொள்ளும் அர்ச். அத்தனாசியாருடைய விசுவாசப் பிரமாணம்.

(3) திரிதெந்தீன் என்கிற பொதுச் சங்கம் உண்டாக்கின விசுவாசப் பிரமாணமும் உண்டு.

9. விசுவாசப் பிரமாணத்திலுள்ள சத்தியங்களை அங்கீகரித்து விசுவசிக்க வேண்டுமா?

சத்திய சுரூபியாயிருக்கிற சேசுநாதர் சுவாமிதாமே தமது அப்போஸ்தலர்கள் மூலமாய் வேதசத்தியங்களைத் திருச்சபைக்கு அறிவித்திருக்கிறபடியால் நாம் அவைகளை முழுமனதுடன் விசுவசிக்க வேண்டியது.