முதல் பிரிவு: ஏக திரித்துவ சர்வேசுரன் பேரில்

1. விசுவாசப் பிரமாணத்தின் முதல் பிரிவைச் சொல்லு.

“பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.” 

2. “விசுவசிக்கிறேன்” என்கிறதற்கு அர்த்தம் என்ன?

விசுவாசப் பிரமாணத்தில் அடங்கியிருக்கிற சத்தியங்கள் எல்லாம் உண்மையென்று, அவைகளை வெளிப்படுத்தின சர்வேசுரனுடைய அதிகாரத்தின் நிமித்தம், உறுதியாக ஏற்றுக் கொள்ளுகிறேனென்று அர்த்தமாம்.

(குறிப்பு: விசுவாசம் என்கிற புண்ணியத்தைப் பற்றி 2-ம் புத்தகத்தில் 178-181 கேள்விகளில் காண்க.)

3. விசுவாசப் பிரமாணத்தின் முதல் பிரிவின்படி நாம் விசுவசிக்க வேண்டியதென்ன?

விசுவாசப் பிரமாணத்தின் முதல் பிரிவின்படி ஒரே ஒரு சர்வேசுரன் இருக்கிறாரென்றும்; அவர் தேவ சுபாவத்தில் ஒருவராயினும் ஆள் வகையில் மூவராயிருக்கிறாரென்றும்; இந்த மூன்று தேவ ஆட்களுக்கும் பெயர் பிதா,சுதன், இஸ்பிரீத்துசாந்து என்றும் நாம் விசுவசிக்க வேண்டும். மேலும் இந்த மூன்று தேவ ஆட்களும், மூன்று தேவர்கள் ஆகாமல் ஒரே தேவனாயிருக்கிறார்களென்றும், இவர்கள் சகலத்திலும் சரிசமானமானவர்களாயிருக்கிறார்க ளென்றும் ஒத்துக் கொண்டு நம்ப வேண்டியது. கடைசியிலே எல்லாம் வல்லவரான பிதாவாகிய சர்வேசுரன் பரலோகத்தையும் பூலோகத்தையும் அதுகளிலுள்ள சகல வஸ்துக்களையும் ஒன்று மில்லாமையிலிருந்து உண்டுபண்ணி ஆண்டு நடத்திவருகிறா ரென்றும் சந்தேகப்படாமல் விசுவசிக்க வேண்டியது.