மனித அவதாரம்

1. விசுவாசப் பிரமாணத்தின் மூன்றாம் பிரிவைச் சொல்லு.

“இவர் இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து, அர்ச். கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.” 

2. இம்மூன்றாம் பிரிவில் என்ன விசுவசிக்கிறோம்?

தேவசுதன், மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய், இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால், கன்னிமரியாயின் மகா பரிசுத்த உதரத்தில் மனித சுபாவத்தை, அதாவது மனித சரீரத் தையும் ஆத்துமத்தையும் எடுத்து, அவர்களிடமிருந்து மனிதனாய்ப் பிறந்தாரென்று விசுவசிக்கிறோம்.

3. தேவசுதன் “மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய்” உற்பவித்தார் என்று ஏன் சொல்வானேன்?

குழந்தையானது தாய் தகப்பனிடத்திலிருக்கிற சக்தி யினால் உற்பவிக்கிறது சுபாவ ஒழுங்கு. சேசுநாதருடைய சரீரம் தகப்பனில்லாதபடி இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால் மாத்திரம் தேவமாதாவின் உதரத்தில் உற்பவித்ததினாலே அவர் மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய் உற்பவித்தார் என்று சொல்ல வேண்டும்.

46. (22) நம்மை இரட்சிப்பதற்காக மனுஷனாய்ப் பிறந்தவர் யார்?

அர்ச். திரித்துவத்தின் இரண்டாமாளாயிருக்கிற சுதனாகிய சர்வேசுரன்தான்.

1. மனிதனாய்ப் பிறந்தார் என்கிறதினாலே நாம் என்ன கண்டு பிடிக்க வேண்டும்?

சுதனாகிய சர்வேசுரன் ஒரு மெய்யான சரீரத்தையும், ஒரு மெய்யான ஆத்துமத்தையும் தமக்கு எடுத்து நம்மைப் போல மெய்யான மனிதனானார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

2. இந்த ஆத்துமத்தையும் சரீரத்தையும் யாரோடு சுதனாகிய சர்வேசுரன் சேர்த்தார்?

பிதாவோடு அல்லது இஸ்பிரீத்துசாந்துவோடு அல்ல, ஆனால் தமது சொந்த ஆளோடு சேர்த்துக் கொண்டார்.

3. எப்போது சுதனாகிய சர்வேசுரன் மனுஷ சுபாவத்தோடு ஐக்கியமானார்?

கன்னிமரியாயினிடத்தில் ஒரு சரீரம் உருவாக்கப்பட்ட கணமே, ஆத்துமமும் சிருஷ்டிக்கப்பட்டு சரீரத்தோடு ஒன்றித்தது; அப்போதே சுதனாகிய சர்வேசுரனும் ஆத்தும சரீர ஐக்கியத்தால் உணடான மனுஷ சுபாவத்தைத் தம்மோடு ஒன்றித்தருளினார்.

4. சர்வேசுரன் மனிதனாய்ப் பிறந்தார் என்பதினாலே, பிதாவும் இஸ்பிரீத்துசாந்துவும் மனிதராய்ப் பிறந்தார்கள் என்று கண்டுபிடிக்கலாமா?

கூடாது. சர்வேசுரன் மனிதனானார் என்று சொல்லும் போது, இரண்டாம் ஆளாகிய சுதன்தான் மனிதனானார் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆனாலும் பிதாவும் இஸ்பிரீத்து சாந்துவும் மனித அவதாரம் எடுக்கும் திருத்தொழிலில் இவரோடு சேர்ந்து இருந்தார்கள்.

5. சுதனாகிய சர்வேசுரன் ஏன் மனிதனானார்?

“மனிதராகிய நமக்காகவும், நமது இரட்சணியத் தினிமித்தமும்” தேவசுதன் மனிதனானார் என்று “நீசே” என்கிற பிரமாணத்தில் வசனித்திருக்கின்றது. ஆகையால்:

(1) நமது பாவத்துக்குச் சரியான பரிகாரம் செய்யவும், 

(2) தமது போதனையாலும், முன்மாதிரிகையாலும் நமக்கு இரட்சணிய பாதையைக் காண்பிக்கவும்,

(3) தமது திருப்பாடுகளினாலும், மரணத்தினாலும் நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்தினின்று மீட்கவும்,

(4) சர்வேசுரனுடைய சிநேகத்தில் நம்மைத் திரும்ப நிலைநிறுத்தவும், 

(5) இவ்விதம் நம்மை மோட்ச மகிமையில் கொண்டு சேர்க்கவும், சுதனாகிய சர்வேசுரன் மனிதனாகச் சித்தமானார்.

47. (23) அவர் எப்படி உற்பவித்துப் பிறந்தார்?

இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனாலே கர்ப்பமாய் உற்பவித்து அற்புதமாகப் பிறந்தார்.

1. சுதனாகிய சர்வேசுரன் நம்மைப்போல் உற்பவித்து, ஒரு தாய் தகப்பனுக்குப் பிறந்தவரா?

அவர் ஒரு தகப்பனுக்குப் பிறக்காமல் ஒரு தாய்க்கு மாத்திரமே பிறந்தார்.

2. அப்படியானால் சேசுநாதர் தேவமாதாவுடைய திருவயிற்றில் தகப்பனில்லாதபடி உற்பவித்தாரா?

உற்பவித்தார்.

3. எப்படி கற்பமாய் உற்பவித்தார்?

சேசுநாதர் எடுத்த சரீரம் மனித சுபாவத்துக்கு மேற்பட்ட விதமாய் இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையால் கன்னி மரியாயின் வயிற்றில் உண்டானது.

4. இஸ்பிரீத்துசாந்து சேசுநாதரின் தகப்பனென்று சொல்லலாமா?

கண்டிப்பாக சொல்லக்கூடாது. ஏனென்றால் இஸ்பிரீத்து சாந்து அர்ச். கன்னிமரியம்மாளுடைய இரத்தத்தைக் கொண்டு, சேசுநாதருடைய திருச்சரீரத்தைப் படைத்தவரேயன்றி, அவர் இவருக்குத் தகப்பன் அல்ல. 

5. இஸ்பிரீத்துசாந்து மாத்திரம் இவ்வேலையைச் செய்தாரா?

இல்லை; ஏனென்றால் மனுஷாவதாரம் சர்வேசுர னுடைய உள் சீவியத்துக்குப் புறம்பான செயலாயிருப்பதால், பிதா, சுதன், இஸ்பிரீத்துவாகிற மூன்றாட்களும் ஒன்றித்து அர்ச். கன்னி மரியாயின் பரிசுத்த உதரத்தில் ஓர் சரீரத்தையும், ஓர் ஆத்துமத் தையும் உண்டாக்கி, மனுஷாவதாரத்தை ஒன்றுகூடி முடித்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

அப்படியானால் சேசுநாதர் இஸ்பிரீத்துசாந்துவினாலே உற்பவித்தார் என்று ஏன் சொல்லுகிறோம்?

முன் சொன்னபடி தேவசிநேகத்துக்கடுத்த கிரியைகள் இஸ்பிரீத்துசாந்துவுக்கு உரியதாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. மனுஷாவதாரம் மூன்று ஆட்களாலே முடிந்திருந்தாலும், இச்செயல் சர்வேசுரனுடைய மனிதர் பேரிலுள்ள கரைகடந்த சிநேகத்தினிமித்தம் உண்டானதினால் “சர்வேசுரன் உலகத்தை எவ்வளவாக நேசித்தாரென்றால் தம்முடைய ஏக சுதனைத் தந்தார்” (அரு. 3:16). தேவசிநேகமாகிய இஸ்பிரீத்துசாந்துவுக்கே இதை விசேஷித்த விதமாய்க் குறிக்கிறது நியாயம்.

7. தேவசுதன் எடுத்த ஆத்துமம் எப்படி உற்பத்தியானது?

அர்ச். திரித்துவத்தின் மூன்று ஆட்களும் அதை உண்டாக்கினார்கள். அதாவது ஒன்றுமில்லாமையிலிருந்து அதை உண்டுபண்ணினார்கள். அதே சமயத்தில் சுதனாகிய சர்வேசுரன் ஒருவரே மோட்சத்திலிருந்து இறங்கி இந்த ஆத்துமத்தையும், சரீரத்தையம் தம்முடையதாக்கிக் கொண்டார்.

8. சுதனாகிய சர்வேசுரன் மனுஷனாய் உற்பவிக்கும்படி மோட் சத்தை விட்டுவிட்டாரா?

அவர் பூமிக்கு வரும்போது, சர்வ வியாபகத்தை விட்டுவிடாதபடியால், இன்னும் மோட்சத்திலிருந்தார். ஏனெனில் அவர் சர்வேசுரனாகியமட்டும் எங்கும் நிறைந்துள்ளவரே. ஆனால் சர்வ வியாபியாயிருந்து கொண்டே, உலகத்தில் புதுவகையாய் நம்முடைய சுபாவத்தைத் தம்மோடு சேர்த்துக் கொண்டு மனிதனானார்.

9. தேவசுதன் மனிதனானபிறகும் சர்வேசுரன்தானா?

அவர் மனிதனானபிறகும், சர்வேசுரனாகத்தான் இருக்கிறார். உள்ளபடி அவர் மனிதனானபோது தம் பிதாவினின்று பிரிந்து போகாமல் அவரோடு ஒன்றித்து நிலைத்திருந்தார். “பிதா என்னிலும், நான் பிதாவிலும் இருப்பது...” (அரு. 10:38), “நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருப்பதாக...” (அரு.14:11). இவர் மெய்யான சர்வேசுரனாய் இருப்பதோடு மெய்யான மனிதனுமாக இருக்க ஆரம்பித்தார்.

10. எந்த சமயத்திலே இந்தப் பரம இரகசியம் நடைபெற்றது?

கபிரியேல் சம்மனசானவர் அர்ச். மரியம்மாளுக்கு மங்கள வார்த்தை சொல்லி அவர்களிடத்தில் சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரம் செய்வாரென்று அறிவிக்க வந்த போதுதான்.

11. அர்ச். கன்னிமரியம்மாள் அதற்குச் சம்மதித்தார்களா?

அர்ச். கன்னிமரியம்மாள் தான் சாகுமட்டும் கன்னியா ஸ்திரீயாயிருப்பதாகச் சர்வேசுரனுக்கு வார்த்தைப்பாடு கொடுத்து இருந்ததைப் பற்றி, சம்மனசுவின் வார்த்தையைக் கேட்டு, பயப் பட்டுத் தத்தளித்து, முதலில் அதற்குப் பூரணமாகச் சம்மதிக்கவில்லை.

12. அதற்குச் சம்மனசானவர் என்ன சொன்னார்?

அர்ச். கன்னிமரியாயின் கன்னிமைக்குப் பழுது உண்டாகாமல் அவர்கள் கர்த்தருக்குத் தாயார் ஆவார்களென்று சொன்னார்.

13. அப்போது கன்னிமாமரி என்ன செய்தார்கள்?

தன் கன்னிமைக்குப் பழுது வராதிருந்தால் கர்த்தருக் குத் தான் தாய் ஆவேன் என்று காட்ட: “இதோ ஆண்டவருடைய அடிமையானவள், உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகக் கடவது” என்று தாழ்மையுடன் பதிலுரைத்தார்கள் (லூக். 1:38).

14. கன்னிமாமரி இந்த வார்த்தையைச் சொன்ன மாத்திரத்தில் என்ன சம்பவித்தது?

அக்கணமே அர்ச். தமதிரித்துவத்தின் மூன்று ஆட்களும் அர்ச். கன்னிமரியம்மாளுடைய திருவுதரத்தில் ஒரு சரீரத்தையும், ஒரு ஆத்துமத்தையும் சிருஷ்டித்து, இரண்டையும் ஒன்றுபடுத்தி இரண்டாமாளாகிய சுதனாகிய சர்வேசுரன் அவைகளைத் தம்மோடு சேர்த்துக்கொண்டு மனிதனானார்.

15. அர்ச். மரியம்மாளுக்கு மங்கள வார்த்தை சொன்ன நாளை நாம் எப்போது கொண்டாடுகிறோம்?

மார்ச் மாதம் 25-ம் தேதி கொண்டாடுகிறோம்.

16. தேவசுதன் அற்புதமாய்ப் பிறந்தார் என்பதற்கு அர்த்தமென்ன? 

சேசுநாதர்சுவாமி அற்புதமாய் உற்பவித்ததுபோலவே, அற்புதமாகப் பிறந்தார். அதெப்படியென்றால், தாம் உயிர்த்த போது, எப்படி கல்லறையின் முத்திரையை அழிக்காமலும், மூடின கல்லைத் திறக்காமலும் புதுமையாய் வெளிப்பட்டாரோ, அப்படியே தமது தாயின் கன்னிமைக்கு அற்பமேனும் பழுதில்லாமல் அவர்கள் உதரத்திலிருந்து பிறந்தருளினார் என்று அர்த்தமாகும்.

17. சுதனாகிய சர்வேசுரன் மனிதாவதாரம் செய்ததை நமக்கு ஞாபகப்படுத்தும்படி திருச்சபையில் வழங்கிவரும் வழக்கம் என்ன?

நாள்தோறும் அதிகாலை, மத்தியானம், சாயங்கால வேளைகளில் கோவில் மணி அடிக்கும்போது நாம் செய்யும் திரிகாலச் செபம், அந்தப் பரம இரகசியத்தை நமக்கு நினைப் பூட்டுகிறது.

48. (24) யாரிடத்தில் நின்று பிறந்தார்?

ஒருக்காலும் கன்னிமை கெடாத அர்ச். கன்னி மரியம்மாளிடத் திலே நின்று பிறந்தார்.

1. கன்னிமை கெடாத என்று ஏன் சொல்லப்படுகிறது?

அர்ச். கன்னிமரியம்மாள் திவ்விய குழந்தையைப் பெறுமுன்னும், பெறும்பொழுதும், பெற்றபின்னும் எப்பொழுதும் கன்னிகையாயிருந்ததைப் பற்றித்தான். இது ஓர் வேத சத்தியம் என்று லாத்தரன் பொதுச்சங்கம் தீர்ப்பு செய்திருக்கின்றது.

2. அர்ச். கன்னிமரியம்மாள் தமது திருக்குமாரனைப் பெற்றெடுப்பதற்கு முன் கன்னிகையாயிருந்தார்கள் என்று நமக்கு எப்படித் தெரியும்?

(1) தீர்க்கதரிசியான இசையாஸ் என்பவர் “இதோ கன்னியானவள் கர்ப்பந்தரிப்பாள்” என்று தீர்க்கதரிசனம் சொல்லி யிருக்கிறார் (இசை. 7:14).

(2) கபிரியேல் சம்மனசானவர் அர்ச். மரியம்மா ளுக்கு மங்கள வார்த்தைகளைச் சொல்லி அவர்களிடத்தில் சுதனாகிய சர்வேசுரன் பிறப்பார் என்று அறிவிக்கும்போது அவர்கள், “இது எப்படியாகும்? ஏனெனில் நான் புருஷனை அறியேனே” (லூக். 1:34) என்று பதிலுரைத்தார்கள்.

(3) அர்ச். சூசையப்பர் அர்ச். மரியம்மாள் கர்ப்பவதி யாக இருந்ததைக் கண்டு அவர்களை நீக்கி விடலாமென்று கருத்தா யிருக்கும் போது ஒரு சம்மனசு அவருக்குத் தோன்றி: “மரியம்மா ளிடம் உண்டான கர்ப்பம் இஸ்பிரீத்துசாந்துவினால் ஆயிற்று” என்று சொன்னார் (மத். 1:19-20).

3. மரியம்மாள் தன் கன்னிமைக்கு யாதோர் பழுதில் லாமல் தம் திவ்விய குமாரனைப் பிரசவித்து பெற்றார்கள் என்று எப்படி அறிவோம்?

(1) “இதோ ஒரு கன்னியாஸ்திரி கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாள்” என்று இசையாஸ் தீர்க்கதரிசனம் சொன்னார் (இசை. 7:14).

(2) இத்தீர்க்கதரிசனம் நிறைவேறியதென்று அர்ச். மத்தேயு எழுதியிருக்கிறார் (மத். 1:22).

(3) மேற்படி சத்தியத்தை வேதசாஸ்திரிகள் எல்லோ ரும் ஒரே வாக்காய்ப் படிப்பித்திருக்கிறார்கள்.

4. தேவமாதா தன் கன்னிமை கெடாமல் எப்படிக் கர்ப்பந் தரித்தார்களென்றும், திவ்விய குழந்தையைப் பெற்றார்களென்றும் விளக்கிக் காட்டும்படி வேதசாஸ்திரிகள் உபயோகிக்கும் ஒப்பனை என்ன?

சூரிய ஒளி கண்ணாடிக்கு யாதொரு பழுதில்லாமல் அதில் நுழைந்து அதற்குச் சேதமொன்றும் வருவிக்காமல் வெளியே போகின்றது. அதுபோலவே சேசுநாதர் அர்ச். கன்னிமரியாயின் மாசற்ற உதரத்தில் கர்ப்பமாகி, அவர்களுடைய கன்னிமை கெடாதபடி அவர்களிடத்திலிருந்து பிறந்தார்.

5. அர்ச். மரியம்மாள் சேசுநாதரைப் பெற்றபின்னும் கன்னிகையா யிருந்தார்களென்று எப்படி நமக்குத் தெரியும்?

(1) தேவமாதா கிறீஸ்துவைத் தவிர வேறே பிள்ளை களைப் பெற்றவர்கள் அல்லவென்பது திருச்சபையின் பாரம்பரிய மான போதனை.

(2) அச்சத்தியத்தை வேதசாஸ்திரிகள் எல்லோரும் ஒரே வாக்காய்ப் படிப்பிக்கிறார்கள்.

6. அர்ச். கன்னிமரியம்மாள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்றார்களென்று (லூக். 2:7) சொல்லும்போது என்ன கண்டுபிடிக்க வேண்டும்?

அந்தப் பிள்ளைக்கு முந்தி வேறு பிள்ளைகளைப் பெற்றதில்லையென்று அர்த்தமேயயாழிய, பின்பு வேறே பிள்ளை களைப் பெற்றார்களென்று அது குறிக்கிறதில்லை. மேலும் ஒரு தாயானவள் ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றிருந்தாலும் அந்த ஏக பிள்ளையைத் தலைச்சன் பிள்ளையென்று அழைக்கிறது யூதர் களுடைய வழக்கம்.

7. சுவிசேஷத்தில் சேசுநாதருடைய சகோதரர்களையும், சகோதரி களையும் குறித்துப் பொதுவாய்ச் சொல்லியிருக்கிறதும் தவிர (மத்.12:46; 13:56; மாற். 3:32; 6:3; லூக். 8:19; அரு. 2:2; 7:3,5,10; அப். நட. 1:14; 1 கொரி. 9:5), யாகப்பர், ஜோசெப், சீமோன், யூதா ஆகிய இவர்கள் அவருடைய சகோதரர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (மத். 13:55; மாற். 6:3; கலாத். 1:19). இதிப்படியிருக்க, தேவமாதா இன்னும் வேறு பிள்ளைகளைப் பெற்றிருப்பார்களென்று நினைக்கலாமா?

மேற்கூறிய வசனங்களில் சொல்லியிருக்கிற சகோதரர் களும் சகோதரிகளும் சேசுநாதரோடுகூடப் பிறந்தவர்கள் என்று சொல்லவே கூடாது. ஏனெனில்:

(1) எபிரேய பாஷையில் உறவின் முறைகளைக் குறிக் கிறதற்காக விசேஷ வார்த்தைகள் இல்லாதிருக்கிறபடியால் யூத சாதிக்குள் சிற்றப்பன், பெரியப்பன், சித்தி, பெரியம்மா இவர் களுடைய பிள்ளைகளை சகோதரர், சகோதரிகள் என்று அழைக் கிறது வழக்கம். அதே விதமாக இத்தேசத்திலே இப்படிப்பட்ட உறவுள்ளவர்கள் தங்களை அண்ணன், தம்பியென்று சொல்வார் களல்லவா?

(2) சேசுநாதர் அர்ச். மரியம்மாளுடைய குமாரன் என்று சொல்லியிருக்க, யாகப்பர், ஜோசப், சீமோன் ஆகிய இவர்கள் தேவமாதாவின் மக்கள் என்று சொல்லப்படாமல், சேசுநாதருடைய சகோதரர்கள் என்று மாத்திரம் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (மாற். 6:3).

(3) சேசுநாதருடைய சிலுவையின் அருகே தேவ மாதாவோடு கிளேயோப்பா மரியம்மாள் இருந்ததாக அர்ச். அருளப்பர் எழுதியிருக்கும்போது (அரு.19:25), யாகப்பருக்கும், ஜோசப்புக்கும் தாயான மரியம்மாள் இருந்ததாக மற்ற சுவிசேஷகர்கள் சொல்லுகிறார்கள். (மத். 27:56, மாற். 15:40-47, லூக். 24:10).

(4) கடைசியிலே, சேசுநாதர் சாகிற வேளையில் “இதோ உன் மகன், இதோ உன் தாய்” (அரு. 19:26-27) என்று தேவமாதாவுக்கும், அருளப்பருக்கும் சொன்ன வார்த்தைகள் அவருக்குச் சகோதரர்கள் இருந்ததில்லை என்பதற்கு அத்தாட்சி யாகும். தமக்குச் சகோதரர்கள் இருந்திருந்தால், சேசுநாதர் தமது தாயாருக்கு அர்ச். அருளப்பரை மகனாகக் கொடுத்திருப்பாரோ? அர்ச். அருளப்பர் தேவமாதாவைத் தன் வீட்டில் ஏற்றுக் கொண் டிருப்பாரோ?

8. அர்ச். கன்னிமரியம்மாள் அர்ச். சூசையப்பரைக் கலியாணம் செய்து கொள்ளவில்லையோ?

தனக்குத் துணையாக இருக்கும்படி சர்வேசுரனுடைய கட்டளைப்படி அர்ச். கன்னிமரியம்மாள் அர்ச். சூசையப்பரைக் கலியாணம் செய்திருந்தாலும், அவர்கள் சாதாரண கணவன் மனைவி போல் நடவாமல் அண்ணன், தங்கை போலும் சரீரமுளள சம்மனசு களைப் போலவும் இருந்தார்கள்.

9. அர்ச். சூசையப்பர் சேசுகிறீஸ்துநாதருடைய தகப்பனா?

அர்ச். சூசையப்பர் சேசுகிறீஸ்துநாதரைப் பெற்ற தகப்பன் அல்ல; ஆயினும் அவரை சேசுவின் தகப்பனென்று அழைக்கிறோம். ஏனென்றால் அவர் அர்ச். கன்னிமரியம்மாளின் உண்மையான பத்தாவாக இருந்தபடியால், அவர்களுடைய திருக் குமாரன் மட்டில் தகப்பனுக்குரிய சுதந்தரங்களையும், கடமை களையும் நிறைவேற்றினார். சேசுகிறீஸ்துநாதரை ஏற்றுக் கொண்டு ஆதரித்துக் கவனிக்கும்படி சர்வேசுரனால் நியமிக்கப்பட்ட குடும்பத்துக்கு அர்ச். சூசையப்பர் தலைவராயிருந்ததினால் அவரை தகப்பன் என்று சொல்லுகிறோம்.

10. அர்ச். சூசையப்பர் அர்ச். கன்னிமரியம்மாளுக்கும், சேசுநாத ருக்கும் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறார்?

அர்ச். சூசையப்பர் கன்னிமாமரிக்குப் பரிசுத்த பத்தா வாகவும், சேசுநாதருக்கு வளர்த்த தகப்பனாராகவும் இருந்தார்.

11. ஆதிமனிதர் உண்டான முதல் எத்தனை வருஷங்களுக்குப் பின் சேசுநாதர் பிறந்தார்?

ஆதிமனிதர் சிருஷ்டிக்கப்பட்ட நான்காயிரம் வருஷத் திற்குப் பின் சேசுநாதர் பிறந்தார் என்று அநேக வேதசாஸ்திரிகள் எண்ணுகிறார்கள்.

12. ஏன் இவ்வளவு காலம் தாமதித்தார்?

(1) மனுக்குலத்தை இரட்சிக்க வரும் திவ்விய இரட்சகருடைய சீவியத்தின் விசேஷங்கள் தீர்க்கதரிசிகளால் முன்குறிக்கப்படவும்,

(2) மனிதன் தன் பாவத்தின் அகோரத்தையும், தன் நீசத்தனத்தையும் அதிகமதிகமாக உணரவும், சேசுநாதர் அளிக்க இருக்கும் இரட்சணியத்தை வெகுவாய் மதித்து வாழ்த்தவும் அவர் இவ்விதஞ் செய்தாரென்று நினைக்க வேண்டியிருக்கிறது.

13. சேசுநாதர் பூமியில் இறங்கி மனிதனாகப் பிறந்து எத்தனை வருஷ காலமாகின்றது?

அவர் பிறந்த நாளிலிருந்துதான் இப்பொழுது வருஷங்கள் கணிக்கப்பட்டு வருகின்றன. ஆகையினாலே ஏறக் குறைய இரண்டாயிரம் வருஷங்களுக்கும் மேலாயிற்று.

14. சேசுநாதர் பிறந்த நாளைத் திருச்சபை எப்போது கொண்டாடு கிறது?

டிசம்பர் மாதம் 25ம் தேதி கொண்டாடுகிறது.

49. எங்கே பிறந்தார்?

பெத்லேம் ஊரில் ஒரு மாட்டுக் கொட்டகையில் பிறந்தார்.

1. அர்ச். சூசையப்பரும் கன்னிமரியம்மாளும் எந்த ஊரில் குடியிருந்தார்கள்?

கலிலேயாவிலுள்ள நசரேத் என்கிற ஊரில் குடியிருந் தார்கள்.

2. எப்படி பெத்லேம் ஊரில் சேசுநாதர் பிறக்க நேர்ந்தது?

அர்ச். லூக்காஸ் தன் சுவிசேஷத்தில் எழுதினதாவது: “அந்நாட்களில் சம்பவித்ததேதெனில்: உலக முழுமையும் குடிக் கணக்கு எழுதப்படும்படியாக செசார் அகுஸ்துஸ் இராயனிட மிருந்து ஓர் கட்டளை பிறந்தது... ஆதலால் எல்லாரும் தங்கள் பேர் எழுதிக் கொடுக்கும்பொருட்டு, தங்கள் தங்கள் சொந்த ஊருக்குப் போனார்கள். அப்படியிருக்க சூசையப்பர் தாவீதின் கோத்திரத் தையும் குடும்பத்தையும் சேர்ந்தவராகையால், கர்ப்பவதியான தம்முடைய மனைவி மரியம்மாளோடு பேரெழுதிக் கொடுக்கும் படியாக கலிலேயாவிலுள்ள நாசரேத்தைவிட்டு, யூதேயாவிலுள்ள பெத்லேம் என்னும் தாவீது நகரத்துக்குப் போனார். அவர்கள் அங்கேயிருக்கையில் சம்பவித்ததேதெனில், மரியம்மாளுக்குப் பேறுகாலம் நிறைவேறிற்று. அவள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்றுத் துணிகளால் அவரைச் சுற்றி மாட்டுத் தொட்டியில் கிடத்தி வைத்தாள். ஏனெனில் சத்திரத்தில் அவர்களுக்கு இடமில் லாமல் போயிற்று (லூக். 2:1-7).” 

3. கர்த்தர் பிறந்த இடம் எப்பேர்ப்பட்டது?

பெத்லேம் ஊருக்கு அண்டையில் மாட்டுக் கொட்டகையாயிருந்த ஒரு குகையில் சேசுநாதர் பிறந்தார். பிறந்த வுடனே தேவமாதா அவரை முன்னிட்டியில் இருந்த வைக்கோலின் மேல் கிடத்தினார்கள்.

4. சுதனாகிய சர்வேசுரன் ஒரு மாட்டுக் கொட்டகையில் பிறந்தது ஏன்?

ஆஸ்திபாஸ்தியும், உலக செல்வமும், பெருமையும், ஏராள மான மனிதர்கள் தேடி வருவதால், சகலருக்கும் தரித்திரம், ஒறுத்தல், தாழ்ச்சி என்னும் சிறந்த புண்ணியங்களைத் தம் மாதிரிகையால் போதிக்கும்பொருட்டு இவ்விதம் பிறக்கச் சித்தமானார்.

5. சேசுநாதர் பிறந்தபோது என்ன சம்பவித்தது?

மோட்சத்தினின்று சம்மனசுக்கள் இறங்கி அந்த மாட்டுக் கொட்டிலில் குழந்தையாய்ப் பிறந்த அவரை மெய்யான தேவன் என்று வணங்கினார்கள்.

6. சேசுநாதருடைய பிறப்பைப்பற்றி யாருக்கு முதன் முதலில் அறிவிக்கப்பட்டது?

பெத்லேமுக்கு அருகாமையிலிருந்த மலை அடிவாரத் தில் ஆட்டு மந்தையைக் காத்துக் கொண்டிருந்த ஏழையான இடையர்களுக்கு ஒரு சம்மனசு தரிசனையாகி, பயப்படாதேயுங்கள், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன். கிறீஸ்து நாதராகிய இரட்சகர் பிறந்திருக்கிறார். அவர் துணிகளில் சுற்றப் பட்டு கொட்டிலில் கிடத்தப்பட்டிருக்கிறார். அவரைப் போய்ப் பாருங்கள் என்றார். அவர் அப்படிச் சொல்லி முடிக்கவே, அநேக தேவதூதர்கள் வானத்தில் தோன்றி, “உன்னத பரமண்டலங்களில் சர்வேசுரனுக்குத் தோத்திரமும், பூமியில் நல்ல மனதுள்ள மனிதர் களுக்குச் சமாதானமும் உண்டாகக்கடவது” என்று பாடினார்கள் (லூக். 2:8-14).

7. அதன்பின் இடையர் செய்ததென்ன?

அப்போது இடையர்கள் தீவிரமாய் பெத்லேமுக்குப் போய், சம்மனசு அறிவித்தபடி மரியம்மாளையும், சூசையப் பரையும், மாட்டுக் கொட்டிலில் கிடத்தியிருந்த திவ்விய குழந்தை யையும் கண்டு, சேசுநாதரை ஆராதித்தார்கள் (லூக். 2:16).

8. இன்னும் யார் திவ்விய குழந்தையைச் சந்தித்தார்கள்?

கர்த்தர் பிறந்தார் என்று அற்புதமாய்த் தோன்றிய ஒரு நட்சத்திரத்தினால் அறிந்து, ஞானிகளான மூன்று இராசாக்கள் அவரைப் போய்ச் சந்தித்தார்கள்.