மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு பாவப் பரிகாரப் பக்தி

(பரிகாரப் பக்தியின் தாற்பரியத்தை அறிய இதைக் கவனித்துப் படிக்கவும்.)

பாவம் என்பது கடவுளுக்கெதிரானது; ஏனென்றால் “தேவ கட்டளையை மீறுவதே பாவம்.” ஆகவே பாவப் பரிகாரம் கடவுளுக்கே செய்யப்பட வேண்டியது. இதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

ஆனால் மாதாவுக்கு பாவப் பரிகாரம் செய்வதாயிருந்தால், பாவமென்பது மாதாவுக்கெதிரானது என்று சொல்ல வேண்டும். அப்போது மாதாவின் கட்டளை மீறப்பட வேண்டுமே! நமக்குக் கடவுளின் கட்டளைகள் தானே கொடுக்கப்பட்டுள்ளன! மாதாவின் கட்டளைகள் ஏதும் இல்லையே! அப்படியானால் மாதாவுக்கெதிரான பாவம் ஏதும் இல்லை; அதற்குப் பரிகாரமும் தேவையில்லையல்லவா? என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் 1929ல் துயி பட்டணத்தில் லூஸியாவுக்குக் கொடுக்கப்பட்ட காட்சியில் மாதா இவ்வாறு கூறினார்கள்:

“எனக்கெதிராகக் கட்டிக் கொள்ளப்படும் பாவங்களுக்காக தேவ நீதியால் தண்டிக்கப்படுகிற ஆன்மாக்களின் தொகை மிகப் பெரிதாயிருக்கிறது. அதற்குப் பரிகாரம் செய்யும்படி நான் கேட்கிறேன். இக்கருத்துக்காக உன்னையே பலியாக்கு. ஜெபி” என்றார்கள்.

பாத்திமாவின் இப்பரிகாரச் செய்தி -- அதாவது மாதாவுக்குப் பாவப்பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்னும் செய்தி எவ்வளவு வலுவுடையதாயிருந்ததென்றால் அநேக மொழிபெயர்ப்பாளர்கள் அஞ்சி அதை மாற்றி விட்டார்கள்! ஆனால் உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீருமல்லவா?