மாதாவை நேரடியாகத் தாக்குகிற பாவங்கள்

மாதா கட்டளைகள் ஏதும் கொடுக்கவில்லை. அதனால் மாதாவுக்கெதிரான பாவங்களும் இல்லை என்று நாம் ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. ஏனென்றால், "மாதாவுக்கு எதற்காக ஐந்து முதல் சனி பக்தி முயற்சியைச் செய்ய வேண்டும்?” என லூஸியாவின் ஆன்ம குரு சங். கொன்சால்வஸ் அவளிடம் கேட்டார். அவள் அதே கேள்வியை 1930 மே 29-30 தேதிகளின் நடுப்பட்ட இரவில் ஆண்டவருடன் நெருக்கமாகப் பேசிய போது அவரிடமே கேட்டாள். அவள் இப்படிக் கூறுகிறாள்: “இதோ எனக்கு வெளிப்படுத்தப்பட்டவை: என் மகளே! அதன் காரணம் எளியது. மரியாயின் மாசற்ற இருதயத்திற்கெதிராக ஐந்து வகையான பாவங்களும் தூஷணங்களும் கட்டிக் கொள்ளப்படுகின்றன: மரியாயின் அமலோற்பவத்துக்கெதிரான தூஷணங்கள் -- அவர்களின் கன்னிமைக்கெதிரான தூஷணங்கள் -- அவர்களுடைய தெய்வீகத் தாய்மைக்கு எதிரான தூஷணங்களும், அதே சமயம் மாதா மனிதரின் தாயாயிருப்பதை ஏற்க மறுப்பதும் -- மேலும் குழந்தைகளின் உள்ளங்களில் இம்மாசற்ற அன்னை மீது அலட்சியத்தை அல்லது நிந்தையை, ஏன் பகையையும் கூட பகிரங்கமாக மூட்டிவிடுகிறவர்களின் தூஷணங்கள் -- மற்றும் மாதாவை அவர்களுடைய புனித உருவங்களில் பழிப்புச் செய்கிறவர்களின் பாவங்கள்.

பார் என் மகளே, இந்தச் சிறு பரிகார முயற்சியை நான் கேட்கும்படி மரியாயின் மாசற்ற இருதயம் என்னைத் தூண்டியதன் காரணம் இதுவே. இதனால் மாதாவை நோகச் செய்கிற ஆன்மாக்களை மன்னிக்கும் என் இரக்கம் தூண்டப்படும். நீயும் எப்போதும் உன் ஜெபங்களாலும் பரித்தியாகங்களாலும் இந்த பரிதாபத்திற்குரிய ஆன்மாக்களின்மேல் என் இரக்கம் தூண்டப்படும்படி தேடுவாயாக.”

இங்கே, மாதாவின் கட்டளைகள் மீறப்படாவிட்டாலும் அவர்களின் அன்பு, ஐந்து வகைகளில் மீறப்படுவதையும் அதனால் மாதாவுக்கெதிரான பாவங்கள் கட்டிக் கொள்ளப்படுவதையும் நமதாண்டவர் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். 

மாதாவுக்கெதிரான இன்னொரு பெரிய பாவமும் இருக்கிறது. அது இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு எதிரான பாவம். இஸ்பிரீத்துசாந்துவுடன் மாதா பிரிக்கப்பட முடியாதபடி இணைக்கப் பெற்றுள்ளதால், அந்தக் கொடிய பாவத்தைச் செய்கிறவர்கள் இஸ்பிரீத்து சாந்துவின் ஏவுதல்களையும் புறக்கணித்து மன்னிப்புப் பெற இயலாமல் போய்விடுகிறார்கள். அது என்ன?

சகோதரி லூஸியா அதைப் பற்றி மெக்ஸிகோ நாட்டு சங். அகஸ்தீன் ஃபுவெந்தெஸ் என்பவரிடம், அவர் அதிகாரப்பூர்வமாய் அவளைப் பேட்டி கண்டபோது கூறினாள். 1957 டிசம்பர் 21-ம் தேதியில் அது நடந்தது. இந்தக் குருவானவர் வண. பிரான்சிஸ், ஜஸிந்தா ஆகிய இருவரின் அர்ச்சியசிஷ்ட பட்டத்திற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிகாரபூர்வமாகவும் லெயிரியா மேற்றிராணியாண்டவரின் உத்தரவுடனும் லூஸியாவைப் பேட்டி கண்டு அதை வெளியிட்டுள்ளார்.

- "சகோதரி லூஸியா என்னிடம் கூறியது: “சுவாமி, இது கடைசிக்காலம் என்பதை மாதா மூன்று காரணங் களால் உணர்த்தினார்கள்.

முதல் காரணம்: சாத்தான் பரிசுத்த கன்னிகைக் கெதிராக ஒரு முடிவான போரில் இறங்கியுள்ளான். இதுவே இறுதிப் போர். இதில் ஒரு பக்கம் வெற்றி பெறும். மறுபக்கம் தோல்வியுறும். ஆதலால் இப்பொழுதிலிருந்து நாம் பக்கம் பிரிய வேண்டும். ஒன்றில் நாம் கடவுளுடையவர்கள் அல்லது சாத்தானுடையவர்கள். வேறு வழி இல்லை.

இரண்டாவது காரணம்: உலகத்திற்கு சர்வேசுரன் கடைசியான இரு உதவிகளைத் தருகிறார். அவை ஜெபமாலையும் மரியாயின் மாசற்ற இருதயமுமே. இவை போக மனுக்குலத்திற்கு வேறு உபாயம் இனிமேல் கொடுக்கப்பட மாட்டாது.

மூன்றாம் காரணம்: உலகத்தை தண்டிக்குமுன் கடவுள் மற்றெல்லா உபாயங்களையும் செய்து பார்த்து விடுகிறார். உலகம் எதையும் சட்டை பண்ணாததைக் காண்கிறார். கடைசி உபாயமாகிய தமதன்னையின் மாசற்ற இருதயத்தை ஒருவித நடுக்கத்துடனே கொடுக்கிறார். ஏனென்றால் இக்கடைசி உபாயத்தையும் நாம் வெறுத்து ஒதுக்கிவிடுவோமானால் அதற்குமேல் பரலோகத்திலிருந்து எந்த மன்னிப்பும் நமக்கு வராது. இதுவே இஸ்பிரீத்து சாந்துவுக்கு எதிரான பாவம். தெரிந்தும் தேவ அன்னையை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளி விடுவதே அது.”

முன்கூறப்பட்ட எல்லாவற்றின் சுருக்கம்

பாத்திமா செய்தி என்பது ஜெபம், தவம், ஜெபமாலை, மாதாவுக்கு அர்ப்பணம் என இருந்தாலும் இவற்றையெல்லாம் உள்ளடக்கியதும் கடவுளின் திட்டமுமாகவும் பாத்திமா செய்தியின் சாரமாகவும் இருப்பது மரியாயின் மாசற்ற இருதயமே.

இம்மாசற்ற இருதய பக்தி என்பது, “மாதாவை இரக்கத்தின் ஆசனமாகவும், நன்மைத்தனத்திற்கும் மன்னிப்பிற்கும் இருப்பிடமாகவும், நாம் மோட்சம் செல்வதற்கு நிச்சயமான வழியாகவும் ஏற்றுக் கொண்டிருப்பதே.” இதை சகோதரி லூஸியாவே கூறியுள்ளாள்.