சுத்தபோசன நாட்களில் சுத்தபோசனமும், ஒருசந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.

பழைய ஏற்பாட்டில், தவ நாட்கள், உபவாசம், சுத்தபோசனம் ஆகியவற்றின் மூலமாக அர்ச்சிக்கப் பட்டன.  உபவாசம், பாவப் பரிகாரத்திற்காகச் செய்யப் படுகிற தவ முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.  ஆகையால் “இப்போதாவது உபவாசம் இருந்து அழுது புலம்பிக் கொண்டு உங்கள் முழு இருதயத்தோடும் நம்மிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர் (யோவேல் 2:12).  மோயீசனும், எலியாசும் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்தனர்.  அரசரும், தீர்க்கதரிசியுமாகிய தாவீது அடிக்கடி தமது உபவாசத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்; தானியேல், எஸ்திராஸ், எஸ்தர் ஆகியோரும் தங்கள் உபவாசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.  மோயீசனின் சட்டத்தில் சுத்தபோசனமும் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.  சில குறிப்பிட்ட மிருகங்களின் இறைச்சியை உண்பதற்கு யூதர்கள் அனுமதிக்கப் படவில்லை.  தானியேலும் அவருடைய தோழர்களும் பாபிலோன் அரசவையில் இருந்த போது, விலக்கப் பட்ட மாமிசங்களை உண்பதற்குப் பதிலாக, காய்கறிகளையும் தண்ணீரையும் மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தனர்.

நம் ஆண்டவரும் கூட நமக்கு உபவாசத்திற்கு அற்புதமான முன்மாதிரிகையைத் தந்திருக்கிறார்.  அவர் தமது பொது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் நாற்பது பகலும், நாற்பது இரவும் உபவாசமாயிருந்தார்.  சில வகைப் பேய்களை ஜெபத்தாலும் உபவாசத்தாலும் மட்டுமே ஓட்ட முடியும் என்று அவர் தம் சீடர்களிடம் கூறினார்.  அவர்கள் குருக்களை அபிஷேகம் செய்த போது, உபவாசமிருந்து ஜெபித்ததாக நாம் அப்போஸ்தலர் நடபடியில் வாசிக்கிறோம்.  ஆதிக் கிறீஸ்தவர்கள் மீது அர்ச். இராயப்பர் சுத்த போசனக் கடமையையும் சுமத்தினார். விக்கிரகங்களுக்குப் படைத்ததை உண்ணக் கூடாதென்று அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார் (அப். 15:29).

விசுவாசிகள் தங்களை ஒறுக்கும்படியாகவும், தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும்படியாகவும், சரீர சோதனைகளுக்கு எதிராகத் தங்களைப் பலப் படுத்தும்படியாகவும், ஒருசந்தி, சுத்தபோசனம் அனுசரிக்கும்படி திருச்சபை அவர்களுக்குக் கட்டளை யிடுகிறது.   நம்மை நாமே மறுதலிக்கவில்லை என்றால், நம் சுபாவமான நாட்டங்கள் நம்மைப் பாவத்திற்கு இட்டுச் சென்று விடும்.  ஜென்மப் பாவத்தின் விளைவு இது. “ஒருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை அனுதினமும் சுமந்து கொண்டு என்னைப் பின்செல்லக் கடவான்” என்று நம் ஆண்டவரும் இதைப் பற்றியே கூறியிருக்கிறார்.


ஒருசந்தி:  ஒருசந்திக்குரிய சட்டம் உட்கொள்ளப் படும் உணவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.  இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒரு தடவை மட்டும், அதுவும் நண்பகலுக்குப் பிறகு முழு உணவு உட்கொள்வதில் அது அடங்கியிருக்கிறது.  உணவின் அளவு மற்றும் வகை ஆகிய காரியங்களில் அந்தந்த நாட்டு வழக்கப் படி, காலையிலும் மாலையிலும் சிறிது உணவு உட்கொள்வதை ஒருசந்தி தடுக்கவில்லை.  உபவாசம் இருக்கக் கடமையுள்ளவர்கள் காலையிலும், இரவிலும் வழக்கமாகத் தாங்கள் உண்ணும் உணவில் பாதிக்கும் குறைவாக உணவு உண்பதை அது அனுமதிக்கிறது. காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்துவது ஒருசந்தி சட்டத்தின் கீழ் வரவில்லை.

இருபத்தொரு வயது முதல் அறுபது வயது வரை உள்ள விசுவாசிகள் மட்டுமே ஒரு சந்தி அனுசரிக்கக் கடமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  நோய், வறுமை, கடின வேலை அல்லது வேறு ஏதாவது ஒரு நல்ல காரணத்திற்காக அவர்கள் ஒருசந்தியிலிருந்து விலக்குப் பெற்றிருந்தால், இந்தக் கடமை அவர்களைக் கட்டுப் படுத்தாது.

தவக்கால வெள்ளிக் கிழமைகள், தவ நாட்கள் பெந்தேகோஸ்தே  திருநாள், சகல அர்ச்சிஷ்டவர்கள் திருநாள், கிறீஸ்துமஸ் ஆகிய திருநாட்களுக்கு முந்தின நாட்கள் ஆகியவை ஒருசந்தி நாட்களாகும்.

சுத்தபோசனம்:  உணவின் தன்மையைக் கட்டுப்படுத்துகிற சுத்தபோசனத்தின் சட்டமானது, மாமிச உணவுகளை உண்பதைத் தடை செய்கிறது.  ஆனாலும் முட்டை, பால், பால் பொருட்கள் மற்றும்  மிருகக் கொழுப்பால் செய்யப்பட்ட எல்லாவிதமான சுவையூட்டும் பொருட்கள் ஆகியவற்றை உண்ணத் தடையில்லை.

நோய், அல்லது வேறு ஏதாவது ஒரு நல்ல காரணத்திற்காக விலக்குப் பெற்றிருந்தால் ஒழிய, புத்தி விபரம் அறிந்த அனைவரும் சுத்த போசனச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் ஆவர்.  இந்தக் கட்டளையை மீறுவது ஒரு கனமான பாவம், ஆனாலும் தடை செய்யப் பட்ட உணவு அதிக அளவில் உட்கொள்ளப் பட்டால் ஒழிய, இந்தக் கட்டளையை மீறுவது ஒரு சாவான பாவமாகாது.


இன்றைய  ஒழுங்குகள்

குறிப்பு: 1949 ஜனவரியிலிருந்து பாப்பரசர் 12-ஆம் பத்திநாதர், ஒருசந்தி, சுத்தபோசனத்தின் மீதான போருக்கு முந்தைய ஒழுங்குகளில் பலவற்றைத் தவிர்க்க ஆயர்களுக்கு அனுமதி தந்தார்.  இந்தச் சலுகையின் கண்ணோட்டத்தில், ஏழைகள், நோயாளிகள் ஆகியவர்கள் மட்டில் பிறர் சிநேகச் செயல்கள் செய்வது போன்ற வேறு செயல்களைச் செய்யும் படி பரிசுத்த பிதா விசுவாசிகளை வற்புறுத்தினார்.


தற்போதைய ஒழுங்குகள் பின்வருமாறு:

(1)  எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் சுத்த போசனம். ஆனால் கடன் திருநாட்கள், மற்றும் டிசம்பர் 26-ஆம் நாள் ஆகியவை ஒரு வெள்ளிக்கிழமையில் வருமானால் அன்று சுத்தபோசனக் கடமை இல்லை.

(2)  சாம்பல் புதன், பெரிய வெள்ளி, மற்றும் அமலோற்பவ மாதா திருநாள், கிறீஸ்துமஸ் ஆகிய திருநாட்களுக்கு முந்தின நாட்களில் மட்டும் ஒருசந்தியும், சுத்தபோசனமும் கடைப்பிடிக்கப் பட வேண்டும்.

ஒரு முக்கியத் திருநாளுக்கு முந்தின நாள் ஞாயிற்றுக் கிழமையில் வருமானால், அன்று ஒரு சந்தி, சுத்த போசனக் கடமை இல்லை.  அமலோற்பவத் திருநாள், கிறீஸ்துமஸ் ஆகிய திருநாட்களுக்கு முந்தின நாள் ஒரு சனிக்கிழமையாக இருக்குமானால், ஒருசந்தி கிடையாது, ஆனால் சுத்தபோசனக் கடமை உண்டு.

ஒரு சந்தி, சுத்தபோசனக் கடமையிருந்து விலக்கு அளிக்கத் திருச்சபைக்கு அதிகாரம் உண்டு என்றாலும், தவம் செய்யும் கடமையிலிருந்து விசுவாசிகளை விடுவிக்க அதற்கு அதிகாரம் இல்லை.  ஏனென்றால், “தவஞ் செய்யாவிடில் நீங்களும் இவ்வாறே அழிந்து போவீர்கள்” என்று சேசு நாதரே கூறியிருக்கிறார் (லூக். 13:3).