கிறீஸ்தவன்

1. நீ கிறீஸ்தவனா?

ஆம். சர்வேசுரனுடைய கிருபையினால் நான் கிறீஸ்தவன்.

1. கிறீஸ்தவன் என்னும் வார்த்தை எப்படி உண்டானது?

கிறீஸ்து என்னும் வார்த்தையிலிருந்து கிறீஸ்தவன் என்னும் காரணப் பெயர் வரலாயிற்று. இது முதன்முதல் அந்தியோக்கியாவில் வழங்கப்பட்டது. (அப். நட. 11:26).

2. கிறீஸ்தவன் என்றால் யார்?

ஞானஸ்நானம் பெற்று, கிறீஸ்தவ வேத போதகத்தை அனுசரிப்பவனே கிறீஸ்தவனாம்.

3. கிறீஸ்து வேதபோதகம் என்பது எது?

சேசுகிறீஸ்துநாதர் யூதேயா நாட்டில் போதித்த போதகம் தான், கிறீஸ்து வேதபோதகம்.

4. சர்வேசுரனுடைய கிருபையினாலே நான் கிறீஸ்தவன் என்று சொல்வானேன்?

நான் என் சொந்தப் பேறுபலன்களை முன்னிட்டு கிறீஸ்தவ னாயிராமல், சர்வேசுரன் என்பேரில் வைத்த இரக்கத்தினால் மாத்திரமே கிறீஸ்தவன்.

5. கிறீஸ்தவனாயிருக்கிறது ஓர் பெரிய பாக்கியமா?

மகா பெரிய பாக்கியம்தான். ஏனென்றால் கிறீஸ்தவன் சர்வேசுரனுடைய சுவீகாரப் பிள்ளை, சேசுநாதருடைய சகோதரன், மோட்சத்துக்கு உரிமையுள்ளவன். ஆகையால் நாம் நமது அனுதினச் செபங்களில் சர்வேசுரனைப் பார்த்து, இப்பெரிய உபகாரத்தை முன்னிட்டு அவருக்கு நன்றியறிதலைச் செலுத்த வேண்டும்.