ஏழு மணி ஜெபத்திற்குரிய ஏழு மன்றாட்டுக்கள்

1. சேசுவே! ஓர் வாள் உம் இருதயத்தை ஊடுருவும் என்ற சிமையோனின் தீர்க்கதரிசனத்தைக் கேட்டு உமது மாதா சிந்தின கண்ணீர்களைப் பார்த்து எங்கள் துயர வேளைகளில் நாங்கள் விசுவாசத்திலும் உமது அன்பிலும் உறுதியோடிருக்கக் கிருபை செய்வீராக. 

2. சேசுவே! உமது மாதா எகிப்துக்கு ஓடிப் போன போது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து எல்லா அகதிகள் மேலும், விசுவாசத்திற்காக உபத்திரவ வேதனைகளை அனுபவிக்கிறவர்கள் மேலும் இரக்கமாயிருப்பீராக!

3. சேசுவே! மூன்று நாளாக உம்மைக் காணாமல் உமது தாய் தேடியலைந்தபோது சிந்திய கண்ணீர்களைப் பார்த்து உம்மை இழந்துவிட்ட ஆன்மாக்கள் மீண்டும் உம்மைக் கண்டடைய கிருபை செய்வீராக.

4. சேசுவே! உம்முடைய வேதனை நிறைந்த சிலுவை யின் பாதையில் நீர் நடந்து சென்றபோது உமது தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நோயாலும் துன்ப துரிதங்களாலும் நாங்கள் வருந்தும்போது எங்களுக்கு ஆதரவாயிருந்து, தப்பறைகளில் விழுகிறவர்களின் வழியும் உயிரும் உண்மையும் நீரே என்பதை அவர்களுக்குக் காட்டியருள்வீராக.

5. சேசுவே! நீர் சிலுவையிலே தொங்கி மரண அவஸ்தைப்பட்டபோது உமது மாதா வடித்த கண்ணீர் களைப் பார்த்து, மரண அவஸ்தையாயிருக்கிறவர்கள் மேல் இரக்கமாயிருந்து, நாங்கள் எங்கள் மரணத்தை உமது கரங் களிலிருந்து அன்போடு ஏற்றுக் கொள்ள கிருபை செய்வீராக.

6. சேசுவே! நீர் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு வியாகுல மாதாவின் மடியில் வளர்த்தப்பட்டபோது, அத்தாய் சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, துன்ப வேதனைப் படுகிறவர்கள் மேல் இரக்கமாயிரும். அவர்களின் சக்திக்கு அதிகமான துன்பங்களை சர்வேசுரன் அனுமதிக்க மாட்டார் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்தருளும்.

7. சேசுவே! நீர் கல்லறையிலே அடக்கம் செய்யப் பட்டபோது உமது மாதா சிந்திய கண்ணீர்களைப் பார்த்து, நாங்கள் உம்மிலே உயிர்ப்போம் என்ற நம்பிக்கையால், மரண பயத்தை மேற்கொள்ள கிருபை செய்வீராக.

ஓ சேசுவே! நீர் உலகத்திலிருக்கும்போது உம்மை அதிகமாய் நேசித்து, மோட்சத்தில் உம்மை மிகவும் அந்நியோந்நியமாய் நேசிக்கிற உமது திருத்தாயாரின் கண்ணீர்களைப் பார்த்தருள்வீராக. (3 முறை சொல்லவும்)

முடிவு ஜெபம் 

ஓ மரியாயே, சிநேகத்தினுடையவும் துயரங்களுடை யவும், இரக்கத்தினுடையவும் தாயே, உம்முடைய ஜெபங் களை எங்களுடைய ஜெபங்களுடன் சேர்த்து, எங்களுடைய வேண்டுதல்களை உமது தாய்மையுள்ள இரத்தக் கண்ணீரின் பெயரால் ஏற்றுக்கொண்டு, நாங்கள் சேசுவையே எப்போதும் நோக்கியிருக்கவும், நாங்கள் கேட்கும் வரப்பிரசாதங்களுடன் இறுதியாக நித்திய ஜீவியக் கொடையையும் தந்தருளும்படி உம்மிடம் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். உமது இரத்தக் கண்ணீரால், துயரம் மிகுந்த தாயே, சாத்தானுடைய ஆட்சியை அழித்தருளும். தெய்வீக சிநேகத் தால் கட்டுண்டவராகிய சேசுவே, உலகத்தை பயமுறுத்தும் தப்பறைகளிலிருந்து அதனைக் காத்தருளும். ஆமென்.