மரியாயின் வியாகுலங்களை அதிகரித்த சூழ்நிலைகள்!

நமது பரிசுத்த மாதாவின் கொடிய துயரங்களின் ஆழத்தை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். அங்கே நிலவிய சூழ்நிலைகள்தான் மாதாவின் வியாகுலங்களுக்குத் தனிப்பட்ட கசப்பைக் கொடுத்தன. மாதா இருந்த இதே சூழ்நிலையில் தான் வைக்கப்பட்டால், எந்தத் தாய்தான் தன் மகனுடன் சாக விரும்ப மாட்டாள்? ஆனால் சேசுவுடனான அவர்களுடைய ஐக்கியம் எந்த அளவுக்கு அவர்களுடைய சுபாவத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது என்றால், அதுவே உள்ளபடி அவர்களுடைய வாழ்வாக இருந்தது என்றாலும், சேசுவுடன் சாக மாமரி அனுமதிக்கப்படவில்லை . அவர்களின் மைந்தனான சேசு அவர்களின் இருதயத்தின் உயரிய ஆனந்தமாகவும், அவர்களுடைய வாழ்வின் சூரியனாகவும் இருந் தார். சேசு இல்லாமல் மாதாவால் எப்படி இருக்க முடியும்? இருந்தாலும் சேசுவோடு சேர்ந்து சாக முடியாமல், அவர் மட்டும் இறப்பதை மாதா பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்! எப்படிப்பட்ட விளக்க முடியாத துயரம் இது! 

தன்னுடைய வியாகுலங்கள் தனது திவ்விய குமாரனது துன்பங்களை அதிகரித்தன என்ற உண்மை , கடவுளின் தாயாரின் கடுமையான வேதனையை இன்னும் அதிகரித்த மற்றொரு சூழ்நிலை யாகும். உண்மையில் இது அவர் தாங்க வேண்டிய அனைத் திலும் அதிகக் கசப்பான மரணத் தாக்குதலாக இருந்தது. தமது திவ்விய மாதா தம்முடைய துன்பங்களில் பங்குபெற வேண்டும் என்பது சேசுவின் திருச்சித்தமாக இருந்தது. எப்படிப்பட்ட எல்லையற்ற நேசத்தால் சேசு தமது தாயை நேசித்தார் என்பதை நாம் கருத்தில் கொண்டால், அவர் கல்வாரிப் பாதையில் தமது தாயைச் சந்தித்த போதும், சிலுவையினடியில் தமது தாய் நின்று கொண்டிருப்பதைக் கண்டபோதும், அது எந்த அளவுக்கு அவருக்கு ஒரு மகா கொடூரமான வேதனையாக இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்வோம். மாதாவுக்கும் இது தெரிந்திருந்தது. அவரது துன்பங்களுக்கான காரணங்களில் தானும் ஒரு காரணமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்திருப்பது அவர்களுடைய தாய்மையுள்ள இருதயத்திற்கு எப்பேர்ப்பட்ட வேதனையாக இருந்திருக்கும்! 

மேலும் மாதா தன் தேவசுதனின் துன்பங்களுக்கு ஒரு கண்கண்ட சாட்சியாகவும் இருந்தார்கள். அவர் கற்றூணில் கட்டப்பட்டதை அவர்கள் கண்டார்கள், கசையடிகளின் ஓசையை அவர்கள் கேட்டார்கள். அவருடைய மென்மை யான கன்னிமைச் சரீரம் வேதனை தாங்காமல் துடிப்பதையும், நெளிவதையும், தசையைக் கிழிக்கும் அடிகளால் நடுங்குவதையும் அவர்கள் கண்டார்கள். பிலாத்து, “இதோ மனிதன்!” என்று சேசுவைச் சுட்டிக் காட்டிய போதும், கல்வாரிப் பாதையிலும், அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் அவர்கள் அங்கே இருந்தார்கள். தன் திருமகனின் கொடூர வாதைகளில், அவருக்கு எந்த விதமான ஆறுதலும் வழங்க முடியாதிருந்த நிலை மேலும் மேலும் மாதாவின் துன்பத்தைக் கூட்டியது. சிலுவையடியில் மாதா நின்றபோது முள்முடி சூடிய திருச்சிரசிலிருந்து கண்களை வந்தடைந்த இரத்தத் துளிகளையும், திருமுகத்தையும் தன்னால் துடைக்க முடியவில்லை என்பது அவர்களை மேலும் அதிக ஆன்ம வாதைக்குள் தள்ளியது. தாகத்தால் வறண்ட சேசுவின் வெளுத்துப் போன, காய்ந்த உதடுகளுக்குத் தண்ணீர் தர முடியவில்லை என்பது அவர்களுடைய வியாகுலத்தை மேலும் அதிகரித்தது. சிலுவையில் சாய்க்க முடியாதிருந்த அவருடைய திருச்சிரசைத் தன் மடியில் கிடத்திக் கொள்ள தன்னால் முடியவில்லை என மாதா வருந்தினார்கள். சேசு யாரிடமிருந்தும், எந்த விதமான உதவியும் அடைய முடியாதிருந்த இந்த பயங்கரமான மூன்று மணி நேரத்தில், மாதா எப்பேர்ப்பட்ட கொடூர வேதனையை அனுபவித்திருப்பார்கள் என்பதை யாரால் புரிந்து கொள்ள முடியும்?

மாதா சிலுவையடியில் நின்று கொண்டிருந்தபோது இன்னுமொரு கசப்பான வியாகுலத்தையும் அனுபவித் தார்கள். பாவத்தைப் பற்றிய தெளிவான அறிவு இந்த வியாகுலத்திற்குக் காரணமாக இருந்தது. நமது ஆண்டவர் நிச்சயமாக பாவத்தைப் பற்றிய சுபாவத்திற்கு மேலான ஒரு அறிவைத் தம் தாய்க்குக் கொடுத்திருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதனுடைய வஞ்சகத் தன்மை, விகாரமான நிலை, அதன்மீது கடவுள் கொண்டிருக்கும் அருவருப்பு, விரோதம் ஆகியவை மாதாவுக்குத் தெரியும். இந்தப் பாவங்களின் அருவருப்பான தன்மை சேசுவின் விலைமதிக்க முடியாத திரு இரத்தத்தில், சிலுவையில் எழுதப் பட்டிருப்பதை மாதா கண்டார்கள். இந்த உலகத்தில் உள்ள அனைத்துப் பாவங்களும் ஒரு பெரிய மலை போல மரித்துக் கொண்டிருந்தவரும், இரத்தம் சிந்திக் கொண்டிருந்தவருமான சேசுவின் திருத்தோள்களின்மீது அழுத்திக் கொண்டிருந்ததையும் மாதா பார்த்தார்கள். மெய்யான சர்வேசுரனும், மெய்யான மனிதரு மாகிய அவர் மனிதனுடைய கணக்கற்ற பாவ துரோகங்களால் நசுக்கப்படுவதையும், அவற்றின் குற்றத்தால் மூடப்படுவதையும், அவற்றின் கெடுமதியால் அவர் சிலுவையில் அறையப்படுவதையும் மாதா கண்டார்கள்! இது பாவமற்ற, குற்றமற்ற, நம் இனிய அன்னையின் மாசற்ற இருதயத்திற்கு எப்பேர்ப்பட்ட விவரிக்க இயலாத வியாகுலமாக இருந்தது! 

நமதாண்டவர் இவ்வளவு பாடுகளைப் பட்ட பிறகும் மனிதன் அவருக்கு நன்றியற்றவனாக இருப்பதையும், எத்தனையோ ஆன்மாக்கள் தன் திருமகனின் விலைமதியாத திரு இரத்தப் பலனை வீணாக்கி நித்திய அழிவுக்குச் செல்வதையும் காண்பது மாமரியின் உரைக்க இயலாத துக்கத்திற்கு மற்றுமொரு காரணமாக இருக்கிறது. மேலும் அப்போஸ்தலர்களின் இராக்கினியும், திருச்சபை யின் இராக்கினியுமான மாதா, மன்னிக்கப்பட்ட தன் பாவங்களை மனிதன் கவனத்தில் கொள்ளாமல் சாவான பாவத்தில் மீண்டும் மீண்டும் விழுவது, ஆச்சரியமான, அசிங்கமான அற்பப் பாவங்களின் கூட்டம், எதையும் கண்டுகொள்ளாத மனிதனின் குளிர்ந்த நிலை, தேவத்திரவிய அனுமானங்களை அவன் அவசங்கைப்படுத்துவது, தேவ இஷ்டப்பிரசாதத்தை வேண்டாமென்று அவன் விலக்கித் தள்ளுவது, தேவ இஷ்டப்பிரசாதத்தைப் பல ஆன்மாக்கள் தவறாகப் பயன்படுத்துவது என்று மிகக் கேவலமான நன்றியற்றதனத்தின் சகல விளைவுகளும் தன் கண் முன்பாகக் கடந்துபோவதைக் கண்டார்கள். - தனது ஆன்மாவின் கண்களில் நித்தியத்திற்கும் தண்டிக் கப்பட்ட ஆன்மாக்களின் திரளான கூட்டத்தையும், அவர் களுக்காகத் தன் திவ்விய குமாரன் பட்ட பாடுகள் வீணாவ தையும் கண்டார்கள். இக்காட்சியின்போது, எப்படிப்பட்ட விவரிக்க முடியாத வேதனை நம் இனிய திவ்விய மாதாவின் நேசமிகுந்த இருதயத்தின் ஆழங்களை ஊடுருவியிருக்கும்!