பாவத்திலிருந்து விடுதலை தரும் ஜெபமாலை!

முழு ஜெபமாலையும் ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டும். இம்மூன்று ஜெபமாலைகளும் சிறிய மலர் வளையங்கள் அல்லது மூன்று அல்லது மூன்று பூ முடிகள் போலிருக்கின்றன. இவ்வாறு நாம் செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலில் சேசுவினுடையவும், மரியாயினுடையவும் மூன்று மகுடங்களுக்கும் மகிமை செலுத்துவதற்காக அதாவது சேசுவின் மனித அவதாரத்தில் அவருடைய அருள் மகுடத்திற்கும், அவர் பாடுபட்டபோது அவர் சூடிய முள் மகுடத்திற்கும், பரலோகத்தில் சேசுவின் மாட்சி என்னும் மகுடத்திற்கும் மகிமையாக மேலும் மாமரி அன்னைக்கு பரிசுத்த தமத்திருத்துவம் மோட்சத்தில் சூடிய மும்மகுடத்திற்கும் மகிமையாகவும் நாம் மூன்று ஜெபமாலைகள் செய்கிறோம்.

இரண்டாவது சேசுவிடமும், மரியாயிடமிருந்து நாம் மூன்று கிரீடங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் அப்படிச் செய்கிறோம், நம் வாழ்நாளில் நாம் அடையும் பேறுபலன்கள்தான் முதல் கிரீடம், நமது மரண வேளையில் நாம் பெறும் அமைதி இரண்டாம் கிரீடம். பரலோகத்தில் நாம் அடையும் மகிமை மூன்றாம் கிரீடம்.

இறக்கும் வரையிலும் தவறாமல் நீங்கள் ஜெபமாலை ஜெபித்து வந்தால் உங்களின் பாவங்களின் பளு எவ்வளவு கணமாக இருந்தாலும் நீங்கள் மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்(1 இரா 5:4). நரகத்தின் விளிம்பில் நீங்கள் நின்றாலும், நரகத்தில் ஒரு காலை வைத்து விட்டாலும், பில்லி சூனியக்காரரைப் போல உங்கள் ஆன்மாவை விற்று விட்டிருந்தாலும் கூட- இது மட்டுமல்ல சாத்தானைப்போல் பிடிவாதத்தோடு பதிதத்தையே வைத்துக் கொண்டிருந்தாலும் இன்றோ நாளையோ நீங்கள் மனம் திரும்பி வரவே செய்வீர்கள்.

உங்கள் வாழ்க்கையைத் திருத்திக் கொள்வீர்கள். ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்வீர்கள் என்று என்னால் திட்டவட்டமாய்ச் சொல்ல முடியும்..  நன்றாய்க் கவனியுங்கள் நான் சொல்வதை;

“ பரிசுத்த ஜெபமாலையை பக்தியுடன், மரணம் வரை, உண்மையைக் காண வேண்டும், பாவங்களுக்கு மனஸ்தாபமும், மன்னிப்பும் அடைய வேண்டும் என்று தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் அவ்வாறு நடைபெறும்.

இந்நூலில் ஜெபமாலையின் பலனால் பெரிய பாவிகள் மனந்திரும்பிய பல சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. தயவு செய்து அவற்றைப் படித்து சிந்தியுங்கள்

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..  ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !