பாவத்திலிருந்து விடுதலை தரும் ஜெபமாலை!

பாவத்திலிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உங்களிலும் பெரிய பாவியாகிய நான் (ஒரு ஒப்பற்ற புனிதரின் தாழ்ச்சியைப் பாருங்கள்) இந்த சிவந்த ரோஜாவைத் (ஜெபமாலை) தர விரும்புகிறேன். ஏனென்றால் நமதாண்டவரின் திரு இரத்தம் அதில் தெளிக்கப்பட்டுள்ளது. இந்த ரோஜா மலர் உங்கள் வாழ்வில் உண்மையான நறுமணம் வீசட்டும். அதற்கும் மேலாக நீங்கள் இருக்கும் ஆபத்திலிருந்து உங்களை அது மீட்கட்டும். விசுவாசமற்றவர்களும், பாவத்திலிருந்து மனந்திரும்பாதவர்களும் தினமும் என்ன கூறுகிறார்கள்: “ ரோஜா மலர்களால் நாம் முடி சூடிக்கொள்வோம் “ என்று. ஆனால் நாமோ மிகப்புனித ஜெபமாலை மலர்களால் முடி புனைவோம் “ எனக் கூறுவோம்.

நாம் அணியும் இம்மலர்களுக்கும், அவர்களுடைய மலர்களுக்கும் வேறுபாடுகள்தான் எவ்வளவு!. அவர்களுடைய மலர்கள் மாமிச இன்பம்., உலக மகிமைகள், கடந்து செல்லும் செல்வங்கள். இவைகள் வெகு விரைவில் தேய்ந்து அழிந்து போகின்றன. நாம் புனையும் மலர்கள் அன்போடு மீண்டும் மீண்டும் சொல்லி வரும்,

“ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே……. “

“ அருள் நிறைந்த மரியாயே வாழ்க ……” என்ற ஜெபங்கள் இந்த ஜெபங்களுடன் நாம் நல்ல தவ முயற்சிகளையும் சேர்க்கின்றோம். இம்மலர்கள் தேய்ந்து மடிவதில்லை. இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்றாலும் அவை இன்றுள்ளதுபோல் அழகுடன் விளங்கும்.

பாவிகளுடைய ரோஜா மலர்கள்.. ரோஜா மலர்கள் போல் தோற்றமளிக்கும் ஆனால் உண்மையிலேயே அவைகள் கொடிய முட்கள். இம்முட்கள் உலகில் வாழும்போது மனச்சாட்சியின் தாக்குதல்களால் அவர்களைக் குத்துகின்றன. இறக்கும் வேளையில் கசந்த துயரத்தால் அவர்களைக் குத்திக் கிழிக்கின்றன. மேலும் இதைவிட அதிகமாக நித்தியத்தில் நம்பிக்கையற்ற கோபம் எனும் எரியும் கூறிய வேல்களாக மாறுகின்றன.

ஆனால் நம்முடைய ரோஜா மலரில் முள் இருக்கிறதே அம்முட்கள் சேசு கிறிஸ்துவின் முட்களாம். அவர் அவைகளை ரோஜா மலர்களாக மாற்றுகிறார். நாம் அணியும் ரோஜா நம்மைக் குத்துவதாயிருந்தால் அது கொஞ்சக்காலத்திற்கு மட்டுமே. அதுவும் நம் பாவ நோயைப் போக்கவும், நம்மை மீட்கவுமே.. ஆதலால் நாம் இந்த பரலோக மலர்களை ஆவலுடன் சூடிக்கொள்ள வேண்டும். முழு ஜெபமாலையும் ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டும். அதாவது பத்து மணிகள் கொண்ட மூன்று ஜெபமாலைகள். இம்மூன்று ஜெபமாலைகலும் சிறிய மலர் வளையங்கள் அல்லது மூன்று முடிகள் போலுள்ளன…

தொடரும்…

நன்றி : மாதா புனிதர் புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய ஜெபமாலையின் இரகசியம் என்ற நூல்

குறிப்பு : நம்முடைய புனிதர் நம்மை தினமும் மூன்று ஜெபமாலைகள் சொல்லச் சொல்லுகிறார். நாம் குறைந்த பட்சம் 53 மணிகள் அடங்கிய ஒரு ஜெபமாலையாவது குடும்பத்துடன் அமர்ந்து ஜெபிப்போம்..

ஜெபமாலை இரகசியம் நூல் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் சகோ. தன்ராஜ் ரொட்ரிகஸ், Ph :9094059059, 9790919203, காமராஜர்புரம், கிழக்கு தாம்பரம் அருகில், சென்னை.

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..  ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !