சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 62

இத்துணைச் சிறப்பு வாய்ந்த திருப்பணியின் போது சொல்லப்படும் ஜெபங்களே மிகச் சிறந்தவை. தனிச் செபங்கள் (Private Prayers) எவ்வளவுதான் உருக்கமாகச் செய்யப்பட்டாலும் அவைகளுக்கு ஈடாகாது. தனிச் செபங்கள் என்றால் ஒருவன் தனித்திருந்து சொல்லும் செபங்கள் அல்லது செய்யும் தியானம் மட்டுமன்று. பலர் ஒன்றாய்க் கூடிச் செய்யும் செபமும் தனிச் செபமே. அது திருப்பணிச் செபத்தைப் போன்று பொதுச் செபம் (Public Prayers) ஆகாது 

ஒரு குருவானவரின் தலைமையின் கீழ், மக்கள் கூடி செபித்தாலும் கூட பொதுச் செபம் ஆகிவிடாது. திருச்சபை ஏற்படுத்தின திருமுறைப்படி, திருப்பணிக்கென்று அது ஆக்கிய செபங்களை குருவானவர் தமது குருத்துவ அதிகாரத்துடன், தனித்தோ, பிறர் கூடியோ சொல்லும் போதுதான் அவை திருப்பணிப் பொதுச் செபங்களாகின்றன. பரிசுத்த பிதா 12-ம் பத்திநாதர் கூறுவது போல், திருப்பணியானது கிறிஸ்து நாதருடைய ஞான சரீரத்தின் பொது வழிபாடு.”எனவே அதில் சொல்லப்படும் செபங்களும் பொதுச்

செபங்களாகின்றன

இந்த செபங்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டு ஏனெனில் அவை கிறீஸ்துவின் செபங்கள். எப்படியென்றால் மேலே கூறியபடி குருக்களும், விசுவாசிகளும் கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கடைந்திருப்பதால், குருத்துவ ஆற்றலுடன் செய்யப்படுகிற திருப்பணிச் செபங்கள் கிறீஸ்துநாதருடைய செபங்களாகின்றன. 

இரண்டாவது, அவரால் ஏற்படுத்தப் பட்டு, அவர் பணித்தபடி அவருடைய இரட்சணிய அலுவலைத் தொடர்ந்து நடத்தும் திருச்சபை கற்பித்துக் கட்டளையிடும் செபங்களாதலால், மூன்றாவது, செபத்துக்கு இருக்க வேண்டிய தன்மையாலும், அவை கிறீஸ்துவின் செபங்கள் ஆகின்றன. மனதையும் இருதயத்தையும் கடவுளை நோக்கி உயர்த்தி, அவரோடு பேசுவதே செபம். திருப்பணிச் செபங்கள் கிறீஸ்துநாதருடைய எண்ணங்களையும் உணர்ச்சி களையும் நமக்களித்து, அவருடைய மனது, இருதயத்தோடு நம்முடைய மனங்களையும், இருதயங்களையும் ஒருமைப் படுத்தி, பரலோக பிதாவின் சந்நிதிக்கு உயர்த்துகின்றன

 உருக்கமான தனிச் செபங்கள் கடவுளோடு நாம் ஐக்கியம் ஆவதற்குப் பயன்படுகின்றன. ஆயினும் அவைகளில் நம்முடைய பக்திப் பற்றுதல் தொனிக்கின்றது. திருப்பணிப் பொதுச் செபமோ, நம்மை நமக்கு மேலாக உயர்த்தி நம்மை விடப் பெரியவரான கிறீஸ்துநாதரைப் போலாக்கி, அவரின் பேரன்பு, பக்திப் பற்றுதலில் பங்கடையச் செய்கின்றது

மேலும் திருப்பணிச் செபங்கள் கிறீஸ்துமயமாகத் திகழ்கின்றன. அவை பெரும்பாலும் பழைய, புதிய ஏற்பாடுகளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சியவை ஏற்பாடுகளில் போதிக்கப்பட்டிருக்கும் உண்மைகளும், மக்களின் இகபர நன்மைகளுக்காக தாயாகிய திருச்சபை கிறிஸ்துவின் வழியாக பரம பிதாவிடம் சமர்ப்பிக்கும் மன்றாட்டுக்கள் ஆகும். இரு ஏற்பாடுகளும் கிறீஸ்துவையே முக்கியக் கருத்தாகவும், கதியாகவும் கொண்டிருக்கின்றன.

 கிறீஸ்துவோடு மக்கள் ஐக்கியப்படுவதையே சத்திய திருச்சபையும் தனது முதல் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எனவே, சர்வேசுரனின் “முன்னியமகப்படி அவருடைய நேச குமாரனுடைய சாயலுக்கு ஒத்தவராகிய” (உரோ. 8:29) நாம் மனதாலும் மொழியாலும், மெய்களால் அத்திருக்குமாரனோடு ஒன்றுபட்டு சர்வேசுரனைத் தோத்தரிக்கும் பொருட்டு திருப்பணியின் அரிய செபங்கள் கீதங்கள், சடங்குகள் யாவும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன

தொடரும்...