நற்கருணைக்குரிய மரியாதை பகுதி-5

திவ்ய நற்கருணை நாதர் முன் இடைவிடாமல் எரியும் எண்ணெய் விளக்கு வேண்டும் :

முன்பு ஆலயங்களில் நம் திவ்ய நற்கருணை நாதர் முன் எப்போதுமே சிறிய எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். பின்பு சிறிய மின்சார விளக்கு வந்து விட்டது. ஒரு சில ஆலயங்கள் தவிர எல்லா ஆலயங்களிலுமே நம் திவ்ய நற்கருணை நாதர் முன் மின்சார விளக்குகளே எரிகின்றன. பிரச்சனை என்னவென்றால் கரண்ட் இல்லாத போது நம் இயேசு தெய்வம் இருட்டில் இருப்பார். நமக்கு ஒளியான தேவன் ஏன் உலகுக்கே ஒளியான நம் தெய்வம் அது சில நிமிடங்களாகவே இருந்தாலும் அவரை இருட்டில் விடலாமா? பல இடங்களில் அடிக்கடி பவர்கட் நடக்கிறது. சில இடங்களில் சில மணி நேரங்கள் கூட பவர் வருவது இல்லை. 

அந்த நேரங்களில் நம் பரிசுத்த தேவன் இருட்டில்தானே இருப்பார். ஏன் நாம் பழைய படி சிறிய எண்ணெய் விளக்கு பயன்படுத்தக்கூடாது. யாராவது ஒருவர் அந்த விளக்கை அடிக்கடி கவனித்து அதற்கு எண்ணெய் இட்டு பராமரிக்கலாமா? அது அவருக்கும் புண்ணியம்தானே.

எளிய எண்ணெய் விளக்கில் இருக்கும் அழகு, அமைதி, உயிர் மின் விளக்கில் கிடைக்குமா? அதைவிட நம் தெய்வத்தின் முன் இடைவிடாமல் எரியும் உயிருள்ள விளக்குதானே தேவை.

அன்பான மக்களே ! அன்பிய தலைவர்களே ! ஆலய பொறுப்பாளர்களே ! அன்பான அருட்தந்தையர்களே ! அன்பு அருட்சகோதரிகளே ! நீங்கள் நினைத்தால்.. நாம் நினைத்தால் உயிருள்ள எளிய விளக்குகளை நம் உயிருள்ள பரிசுத்த தெய்வத்தின் முன்னால் எரிய விடலாம்.

நம் வாழ்க்கையில் ஒளியேற்றும் நம் அன்பு தெய்வம் ஒளியில்லாமல் இருக்க ஒருசில நிமிடங்கள் கூட நாம் அனுமதிக்கக் கூடாது.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !