தேவமாதா யார்? பகுதி-5 : ஞானம் மனிதர்கள் நடுவில் மேன்மைப்படுத்தப்படும்!

“ ஞானம் தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும்; கடவுளிடத்தில் மகிமைப்படுத்தப்படும்; மனிதர்கள் நடுவில் மேன்மைப்படுத்தப்படும்” 

சீராக் ஆகமம் 24 : 1

“ ஏனெனில் வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்துள்ளார். அவர் தம் பெயர் புனிதமாமே “

லூக்காஸ் 1 : 49.

தாழ்ச்சியின் முழுமையான, தாழ்ச்சியின் சிகரமான, சிருஷ்ட்டிக்கப்பட்ட தேவ ஞானமாகிய  நம் தேவ மாதா.. தன்னையும் அறியாமல் தன்னை புகழ்ந்து பாடிய ஒரே பாடல் “ என் ஆன்மா இறைவனை ஏற்றிப் போற்றுகின்றது “ என்ற பாடல் மட்டுமே..

அதுவும் எத்தகைய சூழலில் அது பாடப்பட்டது அப்படி அவரைப் பாடச் செய்தது யார்?

அதற்கு முன்..

 மாதா பாடிய பாடலில் சூழலை தியானிக்க வேண்டும்..

மாதாவுக்கு மங்கள வார்த்தை சொல்லப்பட்டது.. பரிசுத்த ஆவி நிழலிட்டார்.. வார்த்தையான சர்வேசுவரன் நம் தாயின் திருவயிற்றில் மனிதரானார்.. எலிசபெத்தம்மாளைப் பற்றியும் மாதாவுக்கு அறிவிக்கப்பட்டது.. கடவுளுடைய திட்டம் மாதாவுக்கு கொடுக்கப்பட்டதும் உடனே மலை நாட்டுக்கு விரைகின்றார்..

ஞானம் சுறு சுறுப்பானது.. அசைவுகளுக்கெல்லாம் மிக விரைவானது.. அந்த தேவ வார்த்தையையும் இப்போது பார்த்துவிடுவோம்..

“ஞானம் அசைவுகளிலெல்லாம் மிக விரைவானது. அதன் தூய்மையின் காரணத்தால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது, எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது.”

சீராக் 1 : 24

தூய்மையிலும், அருளிலும் நிரம்பி நிற்கும் அருள் நிறைந்த மரியாயே நீர் வாழ்க !

நம் தேவ மாதா உடனடியாக விரைந்து சென்று எலிசபெத்தம்மாளை சந்திக்கிறார்கள்..

மாதா எலிசபெத்தம்மாளை வாழ்த்த அவர் வயிற்றில் உள்ள குழந்தை அக்களிப்பால் துள்ளுகிறது..

அப்போது பரிசுத்த ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத்தமாள் அவர்களுடைய வயதையும் மறந்து சிறிய பெண்ணாகிய மாதாவை வாழ்த்துகிறார்கள்..

“ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே ! உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே. என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்பு பெற்றது எப்படி? “

லூக்காஸ் 1: 42-43

இங்கு நாம் கவனமாக கவனிக்க வேண்டியது..

இது பரிசுத்த ஆவியானவர் முற்றிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரம்..

அப்போதுதான் கொஞ்சம் முன்னதாக புனித ஸ்நாபக அருளப்பருக்கு அவர் வயிற்றில் இருக்கும்போதே ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டுவிட்டது.. அதாவது ஜென்மப்பாவத்திலிருந்து விடுதலை.. அங்கே ஒரு விடுதலை நிகழ்கிறது..

அதாவது பாவத்திலிருந்து விடுதலை… இப்போது மாதாவின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.. மீட்பர் வந்துவிட்டார்.. இனி மக்களுக்கு பாவத்திலிருந்து விடுதலை அளிக்கப்போகிறார்.. பசாசின் பிடியில் இருந்த மக்கள் கடவுளின் ஆளுகைக்கு வரப்போகிறார்கள்..  மோட்சம் திறக்கப்படப் போகிறது..

இது எப்பேற்பட்ட மகிழ்ச்சி.. மாதா மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே மாதாவையும் அறியாமல் பரிசுத்த ஆவியானவர் செயல்பட்டு மாதாவை இந்த பாடலைப் பாட வைத்துவிட்டார்..

இது விடுதலையின் பாடல்.. புகழ்ச்சிப்பாடல்.. என்று சொல்வதைவிட நன்றியின் பாடல் என்று சொல்வதும் சரிதான். இந்த பாடலைப் மாதா பாடிக்கொண்டிருக்கும்போது இன்னொருவரும் மகிழ்கிறார் யார் அவர்.. அவர்தான் வயிற்றில் இருக்கும் இயேசு சுவாமி..

பரிசுத்த ஆவியானவர் மகிழ்கிறார்.. சுதன் மகிழ்கிறார் என்றால்.. இந்த மீட்பின் திட்டத்தை ஆரம்பித்து… ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் நம் நேச பிதா மகிழாமல் இருப்பாரா என்ன ?

ஆக மாதாவின் புகழ்ச்சிக் கீதத்தை..  நன்றியின் கீதத்தை மாதா பாட பாட மாதோவோடு சேர்ந்து தூய தமதிருத்துவமும் மகிழ்ந்து கொண்டிருக்கிறது..

அதே நேரம்..

சீராக்கின் தேவ வார்த்தையை நிறைவேறிக்கொண்டிருந்தது..

“ ஞானம் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும்”

அடுத்தடுத்த வார்த்தைகளும் நிறைவேறியது… நிறைவேறிக்கொண்டும் இருக்கிறது..

“கடவுளிடத்தில் மகிமைப்படுத்தப்படும்; மனிதர்கள் நடுவில் மேன்மைப்படுத்தப்படும்”

இத்தகைய சிறப்பிற்கும், பெருமைக்கும், தகுதிக்கும் முற்றும் உரியவரே நம் தேவ மாதா ! 

இந்த நிகழ்வு தூய தமத்திருவத்திற்கு மட்டுமா மகிழ்ச்சி..  நமக்கும் மகிழ்ச்சி தரும்  நிகழ்ச்சிதானே..

மாதா புகழ்ச்சிப்பாடலை அடுத்து மாதாவுக்கு புகழ்ச்சிப்பாடலை நாம் தொடர வேண்டும் அல்லவா?

அந்த “ தேவ ஞானத்தை “ நாம் புகழ வேண்டாமா?

எப்படிப் புகழ்வது?

வார்த்தையாயிருந்த சுதனாகிய சர்வேசுவரனை.. மனுமகனாக்கி இந்த பூமிக்கு கொண்டு வந்த “மங்கள வார்த்தை ஜெபத்தை “ விட ஒரு புகழ்ச்சிப்பாடல் இருக்கிறதா என்ன?

இந்த “ அருள் நிறைந்த மரியாயே வாழ்க ! “ என்னும் வாழ்த்தொலி...

என்றும்…. எப்பொழுதும்.. என்றென்றும் தனியாக… குடும்பமாக.. குழுக்களாக.. ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும் அல்லவா?

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே “

ஜெபிப்போம் ஜெபிப்போம் ஜெபமாலை..

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !