சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 58

அர்ச். சின்னப்பர் கூறுவதுபோல், நாம் “பயத்தோடு கூடிய அடிமைத்தனத்தின் புத்தியைப் பெறாமல், அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற சுவீகாரப் பிள்ளைகளுக்குரிய புத்தியைப் பெற்றுக் கொண்டோம். நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம் என்று இஸ்பிரீத்துசாந்துவானவரே நம்முடைய புத்திக்கு அத்தாட்சி கொடுக்கிறார்” (உரோ. 8:15'16) ஆதலின், பிள்ளைக்குரிய அன்போடு சர்வேசுரனுடன் பேசுவதே செபம். ஆனால் இந்த அன்புறவு அவருடைய பிள்ளைகளாகிய பிறரோடும் அன்பு கொண்ட நல்லுறவாக இருக்க வேண்டும்

மனித இயல்பின் தனிச்சிறப்பு அதன் சமூகத் தன்மை சமூக நிலையே மனித வாழ்க்கைக்கு நிறைவு அளிக்கிறது அவ்வாழ்க்கையின் ஒவ்வொரு காரியமும் சமூகத் தன்மையால் தான் சிறப்புறுகிறது. வாழ்க்கையின் சமூகச் சிறப்பே பண்பாடு. இப்பண்பு தேவ வழிபாட்டிலும் துலங்க வேண்டும்

தேவ சிநேகமும், பிறர் சிநேகமுமே கடவுள் கொடுத்த கற்பனைகளின் சுருக்கம். இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஒன்று நீங்கி மற்றது நிற்க இயலாது. பிறர் சிநேகம் இல்லாமல் தேவசிநேகம் இருக்க முடியாது. கடவுளை உண்மையாக வழிபடவும் முடியாது.

 அப்படிப்பட்டவர்களின் அர்ச்சனை, ஆசாரம், செபம், காணிக்கை யாவும் வீணான பக்தி முயற்சிகள். ஆதலால்தான் “நீ பீடத்தண்டையில் உன் காணிக்கையைச் செலுத்தும்போது, உன் சகோதரன் உன்மேல் ஏதோ மனத் தாங்கலாயிருக்கிறான் என்று அங்கே நினைவு கூர்வாயாகில், உன் காணிக்கையை அங்கே பீடத்தின் முன்பாக வைத்து விட்டு, முந்த உன் சகோதரனோடு உறவாடப் போ பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்துவாயாக” என்று கிறீஸ்துநாதர் போதித்தார் (மத். 5:23-24). 

கடவுள் நம் தந்தை அவருடைய மக்களாகிய நாம் ஒருவருக்கொருவர் சகோதரர்கள். பிறர் வருந்தும்படி நாம் நடந்துகொண்டால் நல்லுறவு அற்றவர்களாகிறோம். அப்படியானால், கடவுள் முன் நல்லவர்களைப் போல் செபிப்பதும், காணிக்கையைச் செலுத்துவதும் உள்ளன்பு இல்லாத போலிப் பக்தி முயற்சிகள் ஆகும்

இப்படி, உண்மையான தெய்வ பக்திக்கு எல்லா மனிதரிடமும் பிறர் சிநேகம் இருக்க வேண்டுமென்றால் சிறப்பாக அது கிறீஸ்தவர்களிடம் சகோதர பாசம், ஒற்றுமையுமாகப் பரிமளிக்க வேண்டும் நண்பன், பகைவன் என்ற வேறுபாடின்றி (மத். 5:44) பிறர் யாவரையும் தன்னைத்தான் சிநேகிப்பது போல் சிநேகிப்பது (மாற். 12:31). அதாவது மற்றவர்கள் தனக்கு எதைச் செய்ய வேண்டுமென்று ஒருவன் விரும்புகிறானோ, அதையெல்லாம் அவன் அவர்களுக்குச் செய்வதே லூக்கா. 6:31) பிறர் சிநேகம் என்று கிறீஸ்துநாதர் போதித்தார்.

 ஆனால் இறுதியில், தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு, “நீங்கள் ஒருவரை ஒருவர் சிநேகிக்கும்படியாக உங்களுக்குப் புதிய கட்டளையைக் கொடுக்கிறேன். நான் உங்களை சிநேகித்தது போல நீங்களும் ஒருவர் ஒருவரைச் சிநேகிக்கக் கடவீர்கள்” என்று கட்டளையிட்டார் (அரு.13:34), ஆதலால் கிறீஸ்தவர்கள் மத்தியில் எவ்வளவோ பரஸ்பர அன்பும், அன்னியோன்னிய ஒற்றுமையும் விளங்க வேண்டும் கிறீஸ்தவ அன்பு, பக்திதான் செபத்தைக் கடவுளுக்குப் பிரியமான தாக்குகின்றன

தொடரும்...