தேவமாதா யார்? பகுதி-51 : மாதா அமல உற்பவி!

தூதர் அவள் இல்லம் சென்று, “அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே “ என்றார்.
லூக்காஸ் 1 : 28

அமல உற்பவம் யாருக்குத் தேவை? தேவ மாதாவுக்கா? கடவுளுக்கா?

மாதா அமல உற்பவமாகத்தான் இருக்க வேண்டும் என்பது கடவுளுக்குத் தேவையாயிருக்கிறது.. இருக்க வேண்டும் என்பதைவிட இருந்தாக வேண்டும் என்பதே சரி.. எனென்றால் பரிசுத்தருக்கெல்லாம் பரிசுத்தர்.. தாமாகவே பரிசுத்தமாய் இருக்கும் கடவுள் ஒரு மனித படைப்பின் உதிரத்தில் ஜெனிக்க வேண்டும் என்றால் அந்த படைப்பு ஒரு குண்டூசி முனை அளவு கூட பாவம் இல்லாமல்தான் இருந்தாக வேண்டும்.. பாவம் இருக்கும் இடத்தில் கடவுளால் ஜெனிக்க முடியாது.. அவர் உதிரத்தில் மனிதராக முடியாது..  அவர் வயிற்றில் தங்க முடியாது..

அவரால் பாலூட்டப்பட முடியாது; அவரால் அவரைத் தூக்கி வளர்க்க முடியாது.. பாவம் இருக்கும் இடத்தில் அவரால் 33 ஆண்டுகள் வாழ முடியாது.. பாவமும் பரிசுத்தமும் எதிரெதிர் துருவங்கள்.. பாவியும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள்..

ஆக மாதா “ அமல உற்பவியாக “ அதாவது பாவம் இல்லாதவராக ஜென்மப்பாவம் கூட இல்லாமல் இருக்கவேண்டும் என்பது கடவுளுக்கு தேவையாக இருக்கிறது.. அதைக் கடவுள் கொடுக்கும்போது அதை மாதா சந்தோசமாக ஏற்றுக்கொள்வார்கள்.. இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்ல வேண்டும் என்றால்.. கடவுள் யார் என்று கண்டு பிடித்தவர்கள் கண்டிப்பாக மாதா யார் என்று கண்டுபிடித்துவிடுவார்கள்..

இப்படியும் சொல்லலாம் “ மாதா யார் “ என்பதை கண்டுபிடிக்காதவர்கள் “ கடவுள் யார் “ என்று இன்னும் கண்டுபிடிக்காதவர்கள் ஆவர். அவர்கள் கடவுளை ஒரு 10 சதவீதம் கூட அறியாதவர்கள்.. மாதா யார் என்று கண்டுபிடிக்க பைபிள் ஆதாரமோ, வல்லுனர்களின் விளக்கமோ தேவையில்லை.. மாதா கடவுளின் தாய்.. மாதாவிடத்தில் கடவுள் மனிதனாக ஜெனித்தார்.. இந்த ஒன்றே போதும்.. அவர்களுக்கும் பைபிள் அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால்,

“ இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார் “
மத்தேயு 1 : 16

மரியாயிடத்தில் இயேசு பிறந்தார் என்ற அந்த ஒன்றே போதும்.. மாதா யார் என்று சொல்ல.. மாதாவின் அமல உற்பவத்திற்கு சான்றான ஒரு சில இறைவார்த்தைகளைப் பார்ப்போம்..

“ உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்திற்கும் அவள் வித்திற்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள் “
ஆதியாகமம் 3 : 15

பிசாசுக்கும், மாதாவுக்கும் பகை என்றாலே அங்கே பாவம் ஒரு குண்டூசியின் முனை அளவு கூட நுழைய முடியாது என்று அர்த்தம்.. மாதாவுக்கும், பிசாசுக்கும் பகை என்று நீங்களோ, நானோ, இறைவாக்கினர்களோ, தீர்க்கதரிசிகளோ, புனிதர்களோ சொல்லவில்லை.. சொல்லியவர் நித்திய பிதா..

மாதாவின் அமல உற்பவத்தை மறுத்தோ/மறுதலித்தோ பேசுபவர்கள் யாரை அவமதிக்கிறார்கள் என்றால் நித்திய பிதாவை அவமதிக்கிறார்கள்.. பிதாவை எதிர்த்து பேசுகிறார்கள்.. அதே போல் பாவம் இருக்கும் இடத்தில் கடவுள் தோன்றுவார் என்று சொன்னால் அவர்கள் யாரை நிந்தனை செய்கிறார்கள்… யாரைக் கீழே இறக்குகிறார்கள்.. யாரை ரொம்ப குறைவாக நினைக்கிறார்கள் என்றால் கடவுளை.. அவர்கள் எந்த ரிஸ்க்கில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.. இருக்கிறபடியே இருப்பவர் கடவுள்.. இருந்தபடியே கடைசிவரை இருந்தவர்.. நித்தியத்திற்கும் இருப்பவர் மாதா..

ஆதியாகமத்தில் பிதாவின் முதல் தீர்க்கதரிசன அறிவிப்பை பைபிளின் கடைசி பகுதியான திருவெளிப்பாடும் உறுதி செய்கிறது..

“விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மீது நின்று கொண்டிருந்தாள். தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்”.
திருவெளிப்பாடு 12 : 1

இதில் கூட ஒரு மறை உண்மையை கண்டுபிடிக்க முடியும்.. “ சூட்டியிருந்தாள் “ என்றால் மாதாவே தனக்கு சூட்டியிருந்தார்கள் என்று ஒரு அர்த்தம் வரும். “ ஆனால் சூடியிருந்தாள் “ என்று இருப்பதால் கடவுளால் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது என்பதை நாம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். சூரியனுக்குள் ஒரு துளி இருள் கூட இருக்க முடியுமா? இங்கே கூட பிசாசால் மாதாவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதை திருவெளிப்பாடு தெளிவாக விவரிக்கிறது.. பிசாசால் பெண்ணை ஒன்றும் செய்ய முடியாததால்..

“ ஆகவே பறவை நாகம் பெண் மீது சினம் கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது”
திருவெளிப்பாடு 12 : 17 என்று அந்த அதிகாரம் முடிகிறது..

ஆதியாகத்தில் நம் நித்திய பிதா சொல்லிய தீர்க்க தரிசனத்தை பைபிளின் கடைசி அத்தியாயமான திருவெளிப்பாடு உறுதிபடுத்துகிறது.. நாம் பலமுறை கேட்டிருந்தாலும் இன்னும் ஒருமுறை கீழே உள்ள இறைவார்த்தையை கேட்டுவிடுவோம்..

“ஆண்டவரின் நூலைத் கவனமாய் தேடி படியுங்கள், இவற்றுள் ஒன்றும் குறைந்து போகாது; ஒன்றுக்கொன்று துணையின்றிப் போய்விடாது; ஏனெனில் அவர் வாயிலிருந்து வந்தது அவரது ஆணையே, அவரது ஆவிதான் அவற்றை ஒன்று சேர்த்தது.”
இசையாஸ் 34 : 16

மாதாவால் கடவுளுக்கு மகிமை..
கடவுள் மாதாவிடம் ஜெனித்ததால் மாதாவுக்கு மகிமை..
மாதாவை தாயாகப் பெற்றதால் ‘மாதா’ நமக்கு பெருமை.

மாதா அமல உற்பவமாக படைக்கப்பட்டதாலும், மீட்பரைப் பெற்றதாலும், மீட்பின் திட்டத்திற்கு துணையாகவும், இணையாகவும் இருந்து பாடுபட்டதாலும், அலகையின் தலையை மிதித்ததாலும்.. மாதா மோட்சத்திற்கும், இந்த பூலோகத்திற்கும் பெருமை மற்றும் மகிமை.

இன்று மாதாவுக்கு கடவுளால் கொடையாக கொடுக்கப்பட்ட ‘அமல உற்பவத்தை’  நன்றியோடு நினைத்து பெருமைபடுவோம்,  கடவுளுக்கு நன்றி கூறுவோம்; கடவுளை மகிமைப்படுத்துவோம்..

மாதாவை கடவுளுக்கு மட்டுமல்ல நமக்கும் தாயாக தந்த திரியேக சர்வேசுவரனுக்கு நெஞ்சார நன்றி சொல்வோம்.. ஆதி (ஆதியாகமம்) அந்தமும் (திருவெளிப்பாடு) அவள்தான் நம்மை..  ஆளும் நீதியும் அவள்தான்.. அகந்தையை அழிப்பாள்.. ஆற்றலைக் கொடுப்பாள் அவள்தான் அன்னை மகா சக்தி.. அந்தா தாயில்லாமல் நாமில்லை..

“ மாசில்லா கன்னியே மாதாவே உன் மேல் நேசமில்லாதவர் நீசரே ஆவர் !“
வாழ்க.. வாழ்க.. வாழ்க மரியே.. வாழ்க.. வாழ்க.. வாழ்க மரியே..”

பரிசுத்த ஆவியானவர் போற்றி !
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !
இயேசுவுக்கே புகழ் !    மரியாயே வாழ்க !