சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 50

திவ்விய நற்கருணையில் சேசுவின் திரு இருதயம்

சேசுவின் திரு இருதயம் மனிதர்களை அளவற்ற விதமாய் நேசிக்கின்றது. இந்நேசப் பெருக்கத்தின் நிமித்தம் நமது திவ்விய இரட்சகர் தமது அநித்திய ஜீவியத்தின் முடிவில் நம்மை விட்டுப் பிரிய மனமில்லாதிருந்தார். நம்மோடு உலக முடிவு வரை இருந்து, நமது ஆத்துமத்தின் போசனமாகவும் ஜீவியமாகவும் இருக்க, நமக்காகத் தம்மைச் சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுக்குமுன், திவ்விய நற்கருணை ஆகிய தேவதிரவிய அநுமானத்தை ஏற்படுத்தினார்

விசுவாச சத்தியம் நமக்குப் படிப்பிப்பது போல சேசுநாதர் தமது திருப்பாடுகளை அனுபவிக்கப் போகுமுன் அசனசாலையில் சீடர்கள் சூழ்ந்திருக்க அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, தமது சர்வ வல்லமையால் அதைத் தமது சரீரமகா மாற்றி, “இதை வாங்கிப் புசியுங்கள்; ஏனெனில் இது என் சரீரம்” என்று சொல்லி, அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார்

 பிறகு திராட்சை இரசம் நிறைந்த பாத்திரத்தை எடுத்து ஆசீர்வதித்து, இரசத்தைத் தமது திரு இரத்தமாக மாற்றித் தமது அப்போஸ்தலர்களிடம் கொடுத்து, "இதை வாங்கிப் பானம் செய்யுங்கள்; ஏனெனில் இது என் இரத்தத்தின் பாத்திரம்' என்று திருவாய் மலர்ந்தருளினார்

இந்த வார்த்தைகளின் மெய்யான கருத்தைப்பற்றி யாதொரு சந்தேகமும் இருக்க முடியாது. சேசுநாதர் “இது என் சரீத்தினுடையவும், இரத்தத்தினுடையவும் அடையாளம் என்று சொல்லவில்லை . 

ஆனால் “இது என் சரீரம், இது என் இரத்தம்” என்று மொழிந்திருக்கிறார். ஆகையால் அவைகளை அப்போஸ்தலர்கள் உட்கொண்ட போது அப்பம் அல்லது இரசத்தில் அற்பமேனும் உட்கொண்டதில்லை. ஆனால் அப்பத்தினுடையவும், இரசத்தினுடையவும் குணங் களுக்குள் மறைந்திருக்கும் சேசுநாதரின் திருச் சரீரத்தையும், திரு இரத்தத்தையுமே உட்கொண்டார்கள்

தேவ வசீகர வார்த்தைகளை உச்சரித்து, அப்பத்தையும், இரசத்தையும் தேவ குமாரனது சரீரமும், இரத்தமுமாக மாற்ற சேசுநாதரால் அப்போஸ்தலர்களுக்குக் கொடுக்கப் பட்ட அதிகாரம் குருக்களுக்கும் குருப்பட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

பூசையில் வசீகர வார்த்தைகளுக்குப் பிறகு ஓஸ்தியில் அப்பமானது சிறிதேனும் இல்லை. அப்பத்தின் குணங்கள் மாத்திரம் இருக்கின்றன அந்த ஓஸ்தியில் சேசுநாதர் மெய்யாகவே உயிருள்ள சரீரத் தோடும், தமது திரு இரத்தத்தோடும், ஆத்துமத்தோடும், தேவ சுபாவத்தோடும் இருக்கிறார். 

நித்திய சத்திய சுரூபியாகிய சேசுநாதரே இதை நமக்குப் படிப்பிக்கிறார். நம்மை வஞ்சிக்கக்

கூடாததும், தானே வஞ்சிக்கப்படக் கூடாததுமான பரிசுத்த திருச்சபையின் மாறாத படிப்பினையும் இதுவே

தொடரும்...