சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 38

சேசுவின் திரு இருதயம் சகல வரப்பிரசாதங்களுக்கும் நன்மைகளுக்கும், மோட்ச பேரின்பத்திற்கும் ஊற்றாயிருக்கிறது என்பது மெய்தான். ஆனால் ஊற்றிலிருந்து தண்ணீர் எவ்வளவு தாராளமாய்ச் சுரந்தோடினபோதிலும், அதை அணுகிச் செல்லும் மனிதன் தன் தாகத்தைத் தணிக்காமல் தண்ணீரின் ஓட்டத்தை மாத்திரம் பார்த்துக்கொண்டிருப்பானேயாகில் அதனால் அவனுக்கு என்ன பயன் ?

நமதாண்டவர் சொல்வதைக் கேளுங்கள்: “என் கற்பனைகளை அறிந்து அநுசரிக்கிறவன் எவனோ அவனே என்னைச் சிநேகிக்கிறான்” (அரு.14:21), “என்னை நோக்கி ஆண்டவரே! ஆண்டவரே! என்று சொல்லுகிற எவனும் மோட்ச இராச்சியத்தில் பிரவேசிப்பதில்லை. ஆனால் பரமண்டலங்களில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுகிறவனே மோட்ச இராச்சியத்தில் பிரவேசிப்பான் (மத்.7:21).

ஆகவே, தேவ கற்பனைகளை அநுசரித்து, நற்செயல்களிலும், புண்ணிய முயற்சிகளிலும் பழகி, நம் சுற்றத்தார் முன்னும், அயலார் முன்னும் மெய்யான பக்தியின் பலனாலும் நல்ல நடத்தையாலும் உத்தம கிறீஸ்தவர்களாக விளங்கி, நமது எண்ணங்களையும், வழக்கங்களையும், சொற்களையும், செய்கைகளையும் சேசுவின் எண்ணங்களுக்கும், வழக்கங்களுக்கும் சொற்களுக்கும், செய்கைகளுக்கும் ஒத்ததாக்கி, சேசுவின் பக்திப் பற்றுதலையும், தயாள குணத்தையும், ஜீவியத்தையுமே நம் இருதயங்களில் பதிப்பிப்பதே திரு இருதயத்தின் மீது நாம் வைக்கும் மெய்யான சிநேகம்.

இதுவே சாரமற்ற வார்த்தைகளிலும், பாசாங்குள்ள பக்தியிலுமல்லாது மெய்யான பரித்தியாக முயற்சிகளில் அடங்கிய உண்மைப் பக்தி. இதுவே அர்ச்சிப்பின் பலனை நமக்கும் பிறருக்கும் அடைந்து கொடுக்கும். இப்பக்தியே திரு இருதய அரசை நமது குடும்பங்களில் ஸ்தாபிக்கும். நமக்கு மெய்யான சிநேகிதரை இவ்வுலகிலும், நித்தியத்திலும் அடைந்துகொடுக்கும். கடைசியாய் இதுவே நமது ஆத்தும ஈடேற்றத்தை நிச்சயப்படுத்தும் அதி உந்த பக்தி முயற்சி

தொடரும்...