தேவமாதா யார்? பகுதி-36 : சங்கீதத்தில் மாதா! அரசியான மாதா!

“அரசிளம் பெண்கள் உம்மை எதிர்கொண்டு வரவேற்கின்றனர்: ஒபீர் தங்க அணிகள் அணிந்து உம் அரசி உம் வலப்பக்கம் நிற்கிறார்”.

சங்கீதங்கள் ( திருப்பாடல்கள்)  44- 9

மாதா அரசி எனக்குறிப்பிடுகிறது இந்த இறைவார்த்தை. ஏற்கனவே திருவெளிப்பாட்டிலும்  நாம் பார்த்திருக்கிறோம்.

“ தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்”.

திருவெளிப்பாடு 12 : 1

மாதா அரசி என்பது பல இடங்களில் இருக்கிறது..

ஆனால் அந்த அரசியான மாதா அமர்ந்திருக்கும் இடம்தான் இப்போது மிகவும் முக்கியம்.. அதற்கு முன் மாதா அணிந்துள்ள ஒபீர் தங்க அணிகள் எதைக் குறிக்கின்றன..

ஒபீர் தங்க அணிகள் மாதாவின் மாட்சியை பறைசாற்றுகின்றன. அதோடு சேர்ந்து அந்த தங்க அணிகள்..

மாதாவின் பரிசுத்தம், மாதா பூமியில் வாழ்ந்தபோது சம்பாதித்த புண்ணியங்கள், பேறு பலன்கள், மாதாவின் ஆழ்ந்த தாழ்ச்சி, அசைக்கமுடியாத விசுவாசம், மாதா கடவுளின் தாய், மாதா அமல உற்பவி, மாதா என்றும் கன்னி, மீட்புத் திட்டத்தில் மாதாவின் பணி, அனுபவித்த வியாகுலங்கள் எல்லாமே சேர்ந்து ஒபீர் தங்க அணிகளாக மிண்ணுகின்றன..

இப்போது விண்ணகத்தில் மாதாவின் இடத்திற்கு (Place) வருவோம்.. மாதா எங்கே இருக்கிறார்கள்.. ஆண்டவரின் வலப்பக்கம்.. வலப்பக்கம் என்பது ஒரு முக்கியமான இடம்.. அந்த இடத்திற்கு நிறைய பேர் ஆசைப்பட்டார்கள்.. வலப்புறமும், இடப்புறமும் சேர்ந்து அமர போட்டி போட்டார்கள்..  ஏன் வெளிப்படையாகவே கேட்டார்கள். யார் ? ஆண்டவரின் அன்புச் சீடர்களான நம் யாகப்பரும் அருளப்பரும்தான்..

ஏனென்றால் அது ஒரு முக்கியமான இடம்.. 

அந்த இடம் கிடைக்க வேண்டுமானால் அதற்கு ஒரு தகுதி வேண்டும்.. அதை ஒரு நிபந்தனையாகவே வைத்தார் நம் சேசு ஆண்டவர்.

“நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா? நான் பெறும் ஞானஸ்தானத்தை நீங்களும் பெற முடியுமா?”

மாற்கு 10 : 38

அதற்கு யாகப்பரும், அருளப்பரும் “ முடியும் “ (மாற்கு 10 : 39) என்றனர்..

ஆண்டவர் பைபிளில் ஒரு சிலருக்கு மட்டும்தான் “ உன்னால் முடியும்.. நீங்கள்  கண்டிப்பாக செய்வீர்கள்; நீ என்னோடு வான் வீட்டில் இருப்பாய் “ என்று உறுதியாக, தீர்க்க தரிசனமாக சொன்னார்..

அந்த பட்டியலில் நம் யாகப்பர், அருளப்பர், இராயப்பர், சக்கேயு, நல்ல கள்ளன் ஆகியோர் அடங்குவர்..

புனித யாகப்பரும், அருளப்பரும் சொன்னமாதிரியே ஆண்டவர் குடித்த கிண்ணத்தில் குடித்து வலப்புறமும், இடப்புறமும் அமர தகுதி பெற்றார்கள்..

ஆனால் ஆண்டவர் “ நீங்கள் கண்டிப்பாக என் வலப்புறமும், இடப்புறமும் அமருவீர்கள்” என்று வாக்களிக்கவில்லை.. “அது என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ, அவர்களுக்குத்தான் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டார்..

ஆண்டவரின் இடப்புறம் யார் அமர்ந்திருக்கிறார் என்று இப்போது யோசிக்க வேண்டாம்.. ஆனால் கண்டிப்பாக ஆண்டவரின் வலப்பக் இடத்தை நம் நேசப்பிதா யாருக்கு ஏற்பாடு செய்திருந்தார்.. வேறு யார் நம் தேவ மாதாவுக்குத்தான்.. இதை தெளிவாகச் சொல்லுகிறது இந்த இறைவார்த்தை..

இதில் மிகவும் முக்கியமானது.. வலப்புறம் அமர நிர்னயிக்கப்பட்ட தகுதிதான் (Qulaification). அதையும் ஆண்டவர் இயேசுவே நிர்ணயித்தார்..

அப்படியானால் ஆண்டவரின் துன்பக்கிண்ணதில் அதிகமாக பருகியது யார்? நம் தேவமாதா தானே..

ஆண்டவரின் பிறப்பு முதல் கல்வாரி ஆண்டவரின் திருமரணம் வரை ஆண்டவரின் துன்பக்கிண்ணத்தில் அதிகம் பருகியது யார்.? நம் தேவ தாயாரைத் தவிர..

குறிப்பாக ஆண்டவரின் சிலுவைப்பாடுகளின் போது உடனிருந்து.. ஆண்டவரின் பாடுகளை அவரோடு சேர்ந்து தானும் அனுபவித்து, எண்ணற்ற வியாகுலங்களால் நிரம்பி வழிந்து அவை அனைத்தையும் நம் நேசப்பிதாவிற்கு ஒப்புக்கொடுத்தது நம் நேச வியாகுல மாதாதானே..

அவரைத்தவிர வேறு யாரால் அதிகம்  ஆண்டவரின் துன்பக்கிண்ணத்தில் அஅதிகம் பருகியிருக்க முடியும்..?

அதனால்தான் ஆண்டவர்,

“யாகப்பா! அருளப்பா! அந்த சீட் ஏற்கனவே ரிசர்வ் செய்யப்பட்டு விட்டது.. அது என் அம்மாவுக்குத்தான் அதை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியாது” என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டு.. “ என் அப்பா யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ, அவருக்குத்தான் அந்த சீட் “ என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார்..

பாருங்கள் மாதா இருக்கும் இடத்தை.. அதனால்தான் நாம் மாதாவிடம் வேண்டும் மன்றாட்டுக்கள் எல்லாம் சீக்கிரம் நிறைவேறுகின்றன. நமக்காக தன் திருக்குமாரனிடம் பரிந்து பேசி விரைவில் அதைப் பெற்றுத்தருகிறார்கள்..

“மகனே ! “ “ மகனே !” என்ற குரல் விண்ணகத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..

மாதாவின் சிறப்பு பைபிளில் சில இடங்களில் வெளிப்படையாக, பல இடங்களில் மறைமுகமாக, வேறு சில இடங்களில் நாம் கண்டுபிடிக்கும் விதமாத இருக்கிறது..

மேலே உள்ள அந்த இறை வார்த்தையை படிக்கும்போது மனதுக்குள் அவ்வளவு சந்தோசம், மகிழ்ச்சி வருகிறது.. 

“ஒபீர் தங்க அணிகள் அணிந்து உம் அரசி உம் வலப்பக்கம் நிற்கிறார்”.

நன்றி : பைபிள் மேற்கோள்கள், வாழும் ஜெபமாலை இயக்கம்.

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் !   மரியாயே வாழ்க !