தேவமாதா யார்? பகுதி-26 : மாதா கடவுளுக்கு கீழ்ப்படியாதவர்களா?

ஏனெனில் ஞானம் கதிரவனை விட அழகுவாய்ந்தது, விண்மீன் கூட்டங்களை விடச் சிறப்பு மிக்கது, ஒளியோடு ஒப்பிட்டால் ஞானமே மேலானது.

ஞான ஆகமம் : 7 : 29

இயேசு சுவாமி மாதாவைப் பார்த்து , “ யார் என் தாய் ? “ என்று கேட்டது தானே அவர்களுக்குப் பிரச்சனை..

ஆண்டவர் இப்படிச் சொல்லிட்டாராம்..

“வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.”

மத்தேயு 12 : 50

அவர்களால் சொல்ல முடியுமா? மாதா ஏதாவது ஒரு விசயத்தில் கடவுளுக்கு கீழ்ப்படியவில்லை என்று நிரூபிக்க முடியுமா?

ஏன் இயேசு சுவாமிக்கு தெரியாதா தன் தாய் யார் என்று…

மாதாவா? கடவுளுக்கு கீழ்ப்படியாதவர்கள்..

அப்படியானால் இதற்கு பெயர் என்ன?

“இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின் வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்”

லூக்க்காஸ் 1: 38

சரி இப்போ “யார் என் தாய்?” என்ற பகுதிக்கே போவோம்..

இதை கவனித்தவர்கள்.. அதற்கு அடுத்த வசனத்தைப் பாருங்கள்.. 13- அதிகாரம் முதல் வசனம்..

“அந்நாட்களில் இயேசு வீட்டை விட்டு வெளியே போய்க் கடலோரத்தில் உட்கார்ந்திருந்தார் “

மத்தேயு 13 : 1

வீட்டிற்கு போனால்தானே.. வீட்டைவிட்டு வெளியே போக வேண்டும்..

அப்போ இடையில் நடந்தது என்ன ? ஆண்டவர் பேசி முடிச்சதுமோ அல்லது அடுத்த நாளோ ஆண்டவர் “ அம்மா ! என்னைத் தேடிட்டாங்கன்னு நேரே வீட்டிற்கு போய்விட்டார்னு அர்த்தம்..

இங்கே மீண்டும் பாருங்கள்..

“ பின்பு அவர் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டிற்கு வந்தார் “

மத்தேயு 13: 36

ரிலாக்ஸாக உட்கார்ந்து ஆண்டவர் விதைப்பவனின் உவமையை விளக்குவதை அடுத்துப்பார்க்கலாம்..

ஒரே அதிகாரத்தில் ஆண்டவர் இரண்டு முறை வீட்டிற்கு வந்தது இருக்கிறது.. 

அதெல்லாம் அவங்க அவிந்த கண்ணுக்குத் தெரியாது..

இயேசு சுவாமி பொது இடத்தில் இருக்கும்போது அவர் தன் தாய்க்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காததுபோல் காட்டிக்கொள்வார்.. ஆனால் தன் தாய் விரும்பியதை, கேட்டதை அவர் செய்யாமல் போக மாட்டார்..

“ யார் என் தாய்? “ என்று கேட்ட அடுத்தவசனத்தில் ஆண்டவர் வீட்டிற்கு சென்றது இருக்கிறது..

கானாவூரில் “ அம்மா ! எனக்கு நேரம் இன்னும் வரவில்லையே ? “ என்றார்.. அடுத்து உடனே புதுமையை செய்தார்..

அதுபோல்தான் இதுவும்..

கீழே உள்ள பகுதிதான் மிகவும் முக்கியம்… இரண்டு நற்செய்தியை இணைக்கும் பகுதி..

மத்தேயு 12-ம் அதிகாரமும், லூக்காஸ் 11- அதிகாரமும் ஒன்றே.. ஒரே சூழ்நிலையைக் குறிக்கிறது..

நன்றாக கவனியுங்கள்.. முழுவதும் வாசியுங்கள்..

இயேசுவும் பெயல்செபூலும் பகுதி, அசுத்த ஆவி திரும்பி வருதல்.. முக்கியமாக,

“ என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்; என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்”

மத்தேயு 12 : 30, லூக்காஸ் 11: 23

மத்தேயு “யார் என் தாய்? “ என்பதை மட்டும் குறிப்பிடுகிறார்..

இன்னொரு சம்பவம் மத்தேயுவில் இல்லை.. ஆனால் லூக்காஸில் இருக்கிறது..

அவர் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது, கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி, "உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவையே" என்று குரலெடுத்துக் கூறினாள்.

லூக்காஸ் 11 :27

அப்படியானால் இதற்கு என்ன அர்த்தம்?

ஆண்டவர் அதை மறுக்கவே இல்லை..

“ ஆயினும்” ஒரு வார்த்தையை சேர்த்து, “ கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்பவன் அதனிலும் பெரியவன்”

லூக்காஸ் 11: 28

அது மத்தேயுவில்,

“வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.”

மத்தேயு 12 : 50

இந்த இரண்டு வார்த்தையிலும் ஒரு மறையுண்மை மறைந்திருக்கிறது..

“ என் அம்மா ! பாக்கியவதிதான்… ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான்.. எங்கம்மா மாதிரி நீங்களும்.. ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு நடந்தீங்கன்னா நீங்களும், என் தாயும் சகோதர்களாக இருப்பீர்கள் என்று அர்த்தம் வருகிறது..

அந்த ஆண்டவரின் வார்த்தையை மாதாவுக்கு எதிராக பார்ப்பவர்கள் இதை ஏன் பார்ப்பதில்லை..

ஆண்டவர் தன் தாயும் சகோதர்கள் என்று சுட்டிக்காட்டியது.. அவருடைய சீடர்களைத்தானே.. அவர்கள்தானே ஆண்டவரை கைது செய்த போது முதன் முதலிலாக ஆண்டவரை தனியே விட்டு விட்டு ஓடியவர்கள்..

ஆண்டருக்கு இது முதலியே தெரியாதா என்ன?

ஆண்டவருக்கு எல்லாம் தெரியும்.. தன்னை யார் விட்டு விட்டு ஓடுவார்கள்.. தன்னை கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் தன்னை நிழல்போல யார் கடைசி வரை தொடர்வார்கள் யார் கூட இருப்பார்கள்..என்று..

இப்போது ஆண்டவர் சொல்லிய வார்த்தையின் உண்மையான பொருள் மறைபொருளோடு..

“ நான் இப்போது என்னை விட்டு ஓடப்போகிறவர்களையே என் தாயும் சகோதரர்களும் என்று காட்டுகிறேன்.. என்றால் என்னை எந்த சூழலிலும் விட்டுப்பிரியாத விட்டுக்கொடுத்தாத என் தாய் எப்பேர்பட்டவர்களாக இருக்க முடியும்”

அவரே என் தாய்.. அவரே இனி உங்கள் தாயும்..

“ இதோ உன் தாய் “

அருளப்பர் 19 : 27

“ குறுக்கு புத்தியும், துருப்பிடித்த புத்தியும் உள்ள குருடர்களே ! இப்போதாவது உங்களுக்குத் தெரிகிறதா? யார் என் தாய் ? “ என்று..

இன்னொரு முக்கியமான விசயம் “ யார் என் தாய் ?” என்று இயேசு சுவாமி கேட்ட அதிகாரத்தில் (மத்தேயு 12) தன் தாய் வருவதற்கு முன்பே தன் தாய் யார் ? சுவாமி ஏற்கனவே சொல்லிவிட்டார்.. இது போன்ற நல்ல விசயங்கள் ஏன் அவர்கள் கண்களில் படுவதில்லை என்பது அவர்களுக்கு கவலைக்குறியது..

கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில் பார்ப்போம்..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே..

ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !