தேவமாதா யார்? பகுதி-18 : மாதாவின் எஞ்சிய பிள்ளைகள் யார்? அவர்களின் வேலை என்ன?

கண்டிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்தான்.. அதில் எந்த சந்தேகமும் இல்லை.. நன்றாக காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்.. ஏனென்றால் மாதாவைத் தாயாக ஏற்றுக்கொண்டது நாம்தான். ஆண்டவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்ததும் நாம்தான்..

"அம்மா, இதோ! உம் மகன்"

"இதோ! உன் தாய்"

அருளப்பர் 19 : 26-27

நம்மை மாதா எங்கே பெற்றார்கள்.. ? சிலுவையடியில்.. அதுவும் இயேசு சுவாமியின் கட்டளையின்படியே.. நாமும் அந்த அன்புக்கட்டளைக்கு பணிந்து மாதாவை நம் தாயாக அந்த நொடியிலிருந்து ஏற்றுக்கொன்டோம்.

“ ஆகா ! எவ்வளவு பெரிய அன்புப் பரிசு ! கடவுளின் தாய்.. பாவிகளான நமக்கும் தாய் ! இது எவ்வளவு பெரிய பாக்கியம் “ என்று சந்தோசமாக ஏற்றுக்கொன்டோம்”

இதுதான் மாதா கருவுறாமல் சிலுவையின் அடியில் பெற்ற கோடிக்கணக்கான பிள்ளைகள்.. அதே நேரம் அவர்கள் இயேசு சுவாமியின் அன்புச் சீடர்களாகவும் இருக்கிறார்கள்.. (மாதாவை தாயாக ஏற்றுக் கொள்ளும் பிற மத சகோதர்கள் கூட  இதில் அடங்குவர்..)

ஆனால் இயேசுவுக்கு அன்புச்சீடராக இருக்க யாருக்கு விருப்பம் இல்லையோ அவர்கள் மாதாவை தங்கள் தாயாக ஏற்றுக்கொள்ளாதவர்கள்.. பாவம் தாயில்லாத பிள்ளைகள்..

மாதாவைத் தாயாக ஏற்கொண்ட நமக்கு சந்தோசம்தான் மகிழ்ச்சிதான்..பெருமைதான்..

நன்றாக காலரைத் தூக்கிவிட்ட நாம்..பெயரளவில் மட்டும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் மாதாவின் பிள்ளைகள் லிஸ்ட்டில் வர மாட்டோம் ஏன்..?

மீண்டும் திருவெளிப்பாட்டுக்கு வருவோம்..

இப்போது ஏற்கனவே போரில் வெற்றி பெற்றவர்கள் அதாவது பாஸானவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம்..

“அவர்கள் செம்மறியின் இரத்தத்தினாலும், தாங்கள் சான்று பகர்ந்த வார்த்தையினாலும் அவனை வென்றனர். அவர்கள் சாவதற்கும் தயங்கவில்லை; தங்கள் உயிரைப் பொருட்படுத்தவில்லை.”

திருவெளிப்பாடு 12 : 11

இயேசுவுக்கு சாட்சிய வாழ்வு வாழ்ந்தவர்களே வெற்றி பெற்றவர்கள்.. செம்மறியின் இரத்ததாலும், சான்று பகர்ந்த வார்த்தையாலும்.. வார்த்தை மட்டுமல்ல வாழ்க்கையும் அதில் அடங்குகிறது.. அவர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் சாவதற்கும் தயாராக இருந்தார்கள்..

செம்மறியின் இரத்தம் எதில் இருக்கிறது? திவ்ய நற்கருணையில் இருக்கிறது.. வார்த்தையானவர்தான் மனுவுருவாகி நம்மிடையே  திவ்ய  நற்கருணையின் வடிவில் குடிகொண்டிருக்கிறார்.. அவருக்கு நாம் சான்று பகிர்கிறோமா? அவரை தகுந்த மரியாதையோடும், தகுந்த தயாரிப்போடும் வாங்குகிறோமா? அவர் மேல் நமக்கு விசுவாசம் இருக்கிறதா? அல்லது அவரை ஏதோ நோய் பரப்புகிறவர்போல் பார்க்கிறோமா? அவரை உயிருள்ள இயேசுவாக பார்க்கிறோமா? அல்லது ஏதோ ஒரு பொருளாக பொருளாக பார்க்கிறோமா?

இப்போதைய சாட்சிய வாழ்க்கை என்பது வாளை ஏந்தி போர்க்களத்தில் போர் புரிவது அல்ல.. இயேசு சுவாமிக்கு பிரமாணிக்கமாய் இருந்து நம் விசுவாசத்தைக் காத்துக்கொள்வது, நம்பிக்கையை இழக்காமல்  நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக வாழ்வது..

செம்மறியின் இரத்தம் எதைக் கழுவியது ? பாவத்தைக் கழுவியது..

பாவசங்கீர்த்தனம் உரிய இடைவெளியில் உருக்கமான மனஸ்தாபத்தில்  நாம் செய்து வருகிறோமா?

செம்மறியின் இரத்தத்தின் முழுப்பயனைப் பெறுவது நாம் மட்டும்தான்.. ஆனால் அதை நாம் செய்கிறோமா?

மேலும் நமக்கு இன்னொரு வேலை இருக்கிறது..  நாம் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் வாழ வேண்டும்.. அதுவே நாம் இயேசு சுவாமியின் சீடர்கள் என்பதற்கும் மாதாவின் பிள்ளைகள் என்பதற்கும் தகுதி என்று தெளிவாக சொல்லுகிறது.. இந்த திருவெளிப்பாட்டின் இறைவார்த்தை..

“ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது. அவர்கள் கடவுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசு தந்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்”

திருவெளிப்பாடு 12 : 17

போர் இன்னும் முடியவில்லை.. அலகையின் கடுங்கோபமும், நமக்கான மாதாவின் போராட்டமும், நம்முடைய வேலையும் கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !