தேவமாதா யார்? பகுதி-17 : மூன்றாம் போர்! நிரந்தப்போர்!!

நிரந்தர போர்.. ஆனால் இது நிகழ்காலப் போர்.. இப்போது நடந்து கொண்டிருக்கும் போர்..

“ஆகவே பறவைநாகம் பெண்மீது சினங்கொண்டு, எஞ்சிய அவள் பிள்ளைகளோடு போர் தொடுக்கச் சென்றது…”

திருவெளிப்பாடு 12 : 17

பிசாசால் கடவுளையும் வெற்றி கொள்ள முடியவில்லை.. மாதாவையும் வெற்றி கொள்ள முடியவில்லை..

இப்போது யாரிடம் வந்து நிற்கிறது.. மாதாவின் எஞ்சிய பிள்ளைகளிடம் வந்து நிற்கிறது..

மாதாவின் எஞ்சிய பிள்ளைகள் யார் ?

இந்தப் பகுதிக்கு செல்லும் முன்.. பிசாசு மாதாவுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தது என்று பார்ப்போம்..

“ தன் வாலால் விண்மீன்களில் மூன்றிலொரு பகுதியை மண்மீது இழுத்துப்போட்டது.”

திருவெளிப்பாடு 12 : 4

அதாவது பிசாசின் நோக்கமும் செயல்பாடுகளும் எல்லாம் மாதாவின் மகிமையைக் குறைப்பில் குறியாக இருக்கிறது..

அது இப்போது வெளிப்படையாகவே தெரிகிறது.. அதனுடைய திட்டம் அதற்கு தெளிவாக இருக்கிறது..

ஏனென்றால் முதலில் மாதாவின் மகிமையைக் குறைத்தால்தான் அதன்பின்பு இயேசு சுவாமியின் மகிமையைக் குறைக்க முடியும்.. சுருக்கமாக சொல்லப்போனால் பிசாசி எதிர்காலத்திட்டத்திற்கு முந்தைய திட்டம் ( Pre Plan).. அது 20-ம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டுவிட்டது..

பல வழிகளில் அது நடக்கிறது.. அதில் ஒரு வழி சமீபத்திய ஒரு 50- ஆண்டுகளுக்கு முன்னால் துவக்கப்பட்ட பிரிவினை சபையினரால் செய்யப்பட்டு வருகிறது..

“ மாதாவுக்கு வேறு பிள்ளைகள் உள்ளது.. அந்த வசனம்.. இந்த வசனம்.. அது பைபிள்ள இருக்கா? இது பைபிள்ல இருக்கா? “ என்று இயேசுவின் பெயரைச் சொல்லிக்கொண்டே அவரின் தாயாரைப் பழிப்பது..

அதாவது அவர்களுடைய நோக்கம் என்ன? மாதாவின் மகிமையை குறைப்பது..

இதைத்தானே காலம்.. காலமாக..( குறிப்பாக கி.பி. 1500- க்கு பின்னாலிருந்து) பிசாசு செய்து  வருகிறது.. இதைத்தானே இவர்களும் செய்கிறார்கள்..

நான் கேட்கிறேன்.. 

மாதா கடவுளுக்கே தாயான பிறகு அவர்களுக்கு மற்ற விளக்கங்கள் ஏன் கொடுக்கப்பட வேண்டும்..? அந்த ஒரு தகுதியே போதாதா மாதா யார் என்பதற்கு..

 “ மாதா கடவுளின் தாய் “ என்பதிலியே அத்தனை விளக்கங்களும், அத்தனை மறை உண்மைகளும், அத்தனை தகுதிகளும், மாதாவின் பரிசுத்தத்திற்கு உண்டான அனைத்து தகுதி சான்றிதழ்களும் அதிலேயே இருக்கிறதே? பின் ஏன் உங்களுக்கு தனியாக தகுதிச் சான்றிதழ் கொடுக்க வேண்டும்?

சான்றிதழ் கொடுத்தால்தான் எதையும் நீங்கள் நம்புவீர்கள் என்றால்.. பரிசுத்த ஆவியின் தகுதிச் சான்றிதழை விட வேறு சான்றிதழ்கள் வேண்டுமா?

“என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?”

லூக்காஸ் 1 : 43

எலிசபெத் பரிசுத்த ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு சொல்லிய வார்த்தை..

கடவுளின் முன்னிலையில் இருக்கும் தேவ தூதரான மிக்கேல் கொண்டு வந்த கடவுளின் செய்தி..

“இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.”

லூக்காஸ் 1: 31

( இந்த இறை வார்த்தையில் “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும்” என்ற இறைவார்த்தையில் ஒரு மறைபொருள் மறைந்திருப்பது போல இந்த இறைவார்த்தையிலும் இன்னொரு மறைபொருள் இருக்கிறது.. மாதா கருத்தரித்து ஒரு மகனைத்தான் பெருவார்.. ஆனால் கருத்தரிக்காமல் பெறப்போவது கோடிக்கனக்கான பிள்ளைகள்..)

இப்போது அவர்களுடைய கேள்விக்கு வருவோம்.

ஒரு மகனைப் பெறுவீர் என்றுதானே சொல்கிறார் மாதாவுக்கு ஒரு வயிறுதானே இருக்கிறது.. இரண்டு வயிறு இல்லையே.. அந்த ஒரு வயிறே கடவுளின் ஆலயமான பின்பு.. ஏன் மாதாவே கடவுளின் ஆலயமான பின்பு அந்த ஆலயத்திற்கு இன்னும் பிள்ளைகள்.. என்று சில நாவுகள் சொல்லுமானால்.. அது யாருடைய பணிகளை செவ்வனே செய்கிறது என்று பார்ப்போமா?

அதற்கு முன்னால் மாதா யார் என்பதைப்பற்றி.. அதாவது..

“ மாதா உற்பவம் “  “மாதா என்றும் கன்னி” “ மாதா கடவுளின் தாய் “ “ மாதாதான் “புதிய உடன்படிக்கை பேழை “ “ மாதா கடவுளின் ஆலயம் “ என்பதற்கு பைபிளில் ஒன்றல்ல.. இரண்டல்ல ஏராளமான இடங்கள் இருக்கிறது..

மேலும் மாதாதான் “ கடவுளின் கேப்டன்” என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கிறது..

ஆனால் மாதாவுக்கு சான்றிதழ் கேட்கும் பேர்வழிகளும் பைபிளில் இருக்கிறார்கள்.. 

“அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும் பொருட்டு அவள் பின்னால் பறவைநாகம் தன் வாயினின்று ஆறுபோல் தண்ணீர் பாயச் செய்தது.”

திருவெளிப்பாடு 12 : 15

இதுதான் அவர்கள் வாயிலிருந்து சொல்லப்படும் மாதாவுக்கு எதிராக சொல்லப்படும் அவதூறுகள், நிந்தைகள் மற்றும் தேவதூஷனங்கள்..

அவர்கள் சொல்லுவது கடவுளுக்கு எதிரான தேவ தூஷனங்கள் என்பது பாவம் அவர்களுக்கே தெரியாது..

ஏனென்றால் அவர்கள் மறைமுகமாக பழிப்பது.. கடவுளையும்,கடவுளின் மீட்பின் திட்டத்தையும்..

அதாவது கடவுளை ரொம்ப சீப்பாக எடைபோடுகிறார்கள்.. அதனுடைய வெளிப்பாடுகள் அது..

“ கடவுளின் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணை.. இயேசு சுவாமி மனுமக்களின் பாவங்களுக்காக இரத்தம் சிந்த.. அந்த இரத்தம் எடுக்கப்பட்ட பெண்னை.. மக்களை மீட்க.. சிலுவையில் அறையப்பட தேவைப்பட்ட சரீரத்தை எடுக்கப்பட்ட பெண்ணை.. அவமதிக்கிறார்கள் “ என்றால் அவர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல்தானே செய்கிறார்கள்..

அவர்கள் வேலை இருக்கட்டும்.. அது ஒரு மோசமான வேலை..

நம் வேலை என்ன? மாதாவின் எஞ்சிய பிள்ளைகள் யார்?

“ஆனால் நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது. பறவைநாகத்தின் வாயினின்று பாய்ந்த பெருவெள்ளத்தை அது தன் வாயைத் திறந்து உறிஞ்சிவிட்டது.”

இதுதான் நாம் செய்ய வேண்டிய வேலை.. அப்படியானால் மாதாவின் எஞ்சிய பிள்ளைகள் நாம்தானா.. கொஞ்சம் பொறுங்கள்..

அதை உடனே சொல்ல முடியாது..

கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

நம் நம் நேசப் பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !