நித்தியப் போரின் தொடர்ச்சி..
முதல் போர்.. கடவுள் மீட்பின் திட்டத்தை அறிவித்தபோது வந்த போர்..
“விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள். அவள் கருவுற்றிருந்தாள்”
திருவெளிப்பாடு 12 : 1
திருவெளிப்பாடு முதல் வசனத்தின் நாம் பார்க்கும் பகுதி.. மீட்புத்திட்டத்தின் முந்தைய பகுதி..
அதாவது மீட்பு இப்படித்தான் இருக்கப்போகிறது.. என்று அறிவிக்கும் பகுதி..
இந்த மீட்புத்திட்டத்தில்.. மூவொரு கடவுளில் ஒரு ஆளான வார்த்தையான சர்வேசுவரன் ஒரு பெண்ணின் வழியாக பிறந்து மனுவுடல் எடுத்துதான் இந்த உலகை மீட்கப்போகிறார்..
இதில் கவனிக்க வேண்டிய பகுதி… மனிதனாகப் பிறந்துதான் இந்த உலகை மீட்கப்போகிறார்..
மனித படைப்பு வான தூதர்களை விட சற்று தாழ்ந்த படைப்பு.. இதற்கு ஆதாரமும் வேதாகமத்தில் இருக்கிறது..
மனிதன் வழியாக மீட்பு வருவதை லூசிபர் வானதூதராக இருந்த போது அதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. அதுவும் ஒரு பெண் மூலமாக அந்த மீட்பு வரப்போகிறது.. என்பதையும் அதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
இப்போது புனித மிக்கேல் அதிதூதர் இருந்த இடத்தில் அது முன் இருந்தது.. கடவுளுக்கு அருகில்.. கடவுளால் எல்லா ஆசீர்வாதங்களும்.. வல்லமையும் கொடுக்கப்பட்டிருந்தது. கடவுளுக்கு அடுத்த இடத்தில் அது இருந்தது..
அதற்கு நாம் எப்பேற்பட்ட வல்லமையான மகிமையான இடத்தில் இருக்கிறோம்.. இந்த கடவுள் என்ன ஒரு மனிதனின் மூலமாக மீட்பு வரும் என்கிறார்.. மனிதன் நம்மை விட தாழ்ந்தவனாயிற்றே.. அவன் வழியாக மீட்பு வந்தால்.. நாம் ஒரு மனிதனை அல்லவா வணங்க வேண்டும்.. அதுவும் ஒரு பெண்ணின் மூலமாக என்று சொல்கிறாரே.. அவருக்கும் நான் வணக்கம் செலுத்த வேண்டுமே..
நம் நிலை என்ன? அந்தெஸ்தென்ன?.. அதிகாரம் என்ன? என்று நினைத்து .. கடவுள் என்ன பெரியவர்.. நான்தான் பெரியவன்.. எனக்கும்தான் அவரைப்போல வல்லமை இருக்கிறதே என்று நினைத்து கடவுளுக்கு மேலே சென்று அதன் அரியணையை அமைக்க நினைத்த போதே கடவுளிடம் அடிவாங்கியது.. தனது சகாக்களையும் கெடுத்து அதன் துணையோடு போர் தொடுத்தது..
ஆனால் மிக்கேல் சம்மனசும் நல்ல சம்மனசுகளும் கடவுளுக்காக போர் செய்தனர்.. அதில் அவர்கள் வெற்றி பெற்றனர்..
அதுவும் அதன் சகாக்களும் பாதாளத்தில்.. நரகத்தில் விழ்த்தப்பட்டனர்..
எல்லாம் போச்சு..
அப்போதுதான் அது நினைத்திருக்கும்.. “ ஆகா! நம்மிடம் இருந்த வல்லமை.. மகிமை.. அதிகாரம் எல்லாம் கடவுள் நமக்கு கொடுத்திருந்தது. அது என்னுடையது அல்ல.. கடவுளுடையது.. கடவுள் எனக்கு கொடுத்தது. நான் கடவுள் அல்ல.. கடவுளால் படைக்கப்பட்ட ஒரு படைப்புதான்” என்று நினைத்திருக்கும்.. ஆனால் அதற்குள் அது பாதாளத்திற்கு சென்றுவிட்டது..
மிக்கேல் சம்மனசானவர் ஏன் வெற்றி பெற்றார்.. அவருடைய பெயரே “ கடவுளுக்கு நிகர் யார்? “ மற்றும் அவருடைய தாழ்ச்சி..
பிசாசு சம்மனசாக இருந்திருக்கும்ப்போது என்ன செய்திருக்க வேண்டும்..
“ கடவுள் நன்மையே உருவானவர்.. நல்லவர்.. அவர் எது செய்தாலும் நன்மைக்குத்தான் செய்வார்.. அவர் நமக்கு மேல் யாரை வைத்தாலும் அவரை வணங்க வேண்டும்.. நாம் இப்போது இருக்கும் நிலைக்கு நன்றி சொல்ல வேண்டும்.. கடவுளை நாம் ஆராதிக்க வேண்டும்.. முக்கியமாக கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும்”
என்று நினைத்திருந்தால் அது தன் நிலையை.. இருப்பிடத்தை.. மகிமையை இழந்திருக்காது..
தாழ்ச்சியை.. தூக்கி எரிந்தது.. அகங்காரத்தை.. அணிந்தது.. தூக்கி எரியப்பட்டது..
இதை இப்போது கூட நாம் பார்க்க முடியும்.. யார் யாரெல்லாம்.. அகங்காரம் பிடிச்சி.. பதவி வெறி பிடிச்சு.. நான்தான் பெரியவன் என்று ஆடுறாங்களோ.. அவங்க வீழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.. அட்ரஸ் இல்லாமல் போய்கொண்டே இருக்கிறார்கள்.. முக்கியமாக கீழ்ப்படியாதவர்கள் அடிவாங்கிக்கொண்டே இருக்கிறார்கள்..
இப்போது இப்போது மிக்கேல் சம்மனசானவரின் தாழ்ச்சியைப் பாருங்கள்.. “ கடவுளுக்கு நிகர் யார் ? நான் இன்றுமே இல்லை… எனக்கு கொடுக்கப்பட்ட கொடைகள்.. அதிகாரம்.. வல்லைமை எல்லாம் கடவுள் கொடுத்தது.. நான் அவரை புகழ்வேன்.. ஆராதிப்பேன்.. அவரை மகிமைப்படுத்துவேன்.. அவருக்கு மட்டுமே ஊழியம் செய்வேன்.. அவர் யாருக்கு என்னை ஊழியம் செய்ய அனுப்புகிறாரோ அவர்களுக்கு மட்டுமே ஊழியம் செய்வேன்”..
அப்படியே மாதாவின் தாழ்ச்சிக்கு வாருங்கள்..
அகில உலகையும் படைத்த வார்த்தையான சர்வேசுவரனை.. உலகமே கொள்ள முடியாதவரை நான் கொண்டாலும். அவர் எனக்குள் வந்து மனுஉருவாகி எனக்கு மகனாக பிறந்தாலும்… நான் என்னைப் படைத்தவருக்கே தாயானாலும்.. நான் என்ன சொல்லுவேன்..
“ இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும் “
மாதாவின் தாழ்ச்சி மிக்கேல் சம்மனசானவரின் தாழ்ச்சிக்கும் மேலாக சென்று அவருக்கும் மேலான ஒரு நிலையைக் அவருக்கு கொடுத்தது..அதையும் மகிழ்ச்சியோடும்.. தாழ்ச்சியோடும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஊழியம் செய்வதை பாக்கியமாக கருதி மிகவும் உயர்ந்து நிற்கிறார்.. “கடவுளுக்கு நிகர் யார்? “ என்று சொல்லும் புனித மிக்கேல் அதி தூதர்..
கடவுளுக்கு சித்தமானால் போர் தொடரும்..
நன்றி : விளக்கம்.. வாழும் ஜெபமாலை இயக்கம்..
நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக!
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !