தேவமாதா யார்? பகுதி-14 : ஒரு போர்! நித்திய போர்! எப்போது ஆரம்பமானது?

“பின் விண்ணகத்தில் ஒரு போர் உண்டாயிற்று. மிக்கேலும் அவருடைய தூதர்களும் பறவைநாகத்தோடு போர் தொடுத்தனர். பறவைநாகமும் அதன் தூதர்களும் போரிட்டனர்.

பறவைநாகமும் தோல்வியுற்றது. விண்ணகத்தில் அவர்களுக்கு இடமேயில்லாமல் போயிற்று. அப்பெரிய பறவைநாகம் வெளியே தள்ளப்பட்டது.

திருவெளிப்பாடு 12 : 7-8

இந்த போர் எப்போது ஆரம்பமாகி இருக்கும்? நமக்குத் தெரியாது.. ஆனால் கண்டிப்பாக மனிதன் படைக்கப்படும் முன்பு.. ஏனென்றால் ஏற்கனவே இன்பவனத்தில் ஏவாளிடம் பிசாசு தன் வாலை ஆட்டிய கதை நமக்குத் தெரியும்..

(இப்போது நாம் எந்த காலத்தில் இருக்கிறோம்? குறைந்தது 5000 ஆண்டுகளுக்கு முன்பு.. (திருவெளிப்பாட்டின் சிறப்பை பாருங்கள்)

சம்மனசுக்களில் முதன்மையாக இருந்த லூசிபர் நரகத்திற்கு தள்ளப்பட்டு பிசாசான கதை எல்லோருக்கும் தெரிந்ததே..

அதை லேசாகப் பார்ப்போம்..

“ வைகறைப் புதல்வனே, விடி வெள்ளியே, வானின்று நீ வீழ்ந்த வகை தான் என்னே! புண்பட மக்களை வாட்டி வந்த நீ எவ்வாறு தரை மீது வீழ்த்தப்பட்டாய்?

வானுலகத்திற்கு நான் ஏறிப் போவேன், கடவுளின் விண்மீன்களுக்கும் அப்பால் உயரத்தில் என் அரியணையை அமைத்திடுவேன், தொலைவான வடபுறத்தின் எல்லையிலே, சபை கூடும் மலை மேலே வீற்றிருப்பேன்;

மேகங்களுக்கும் மேலாக ஏறிடுவேன், உன்னதற்கு ஒப்பாக என்னை ஆக்கிக்கொள்வேன்' என்று நீ உன்னுள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.

ஆயினும் நீ பாதாளம் வரைத் தாழ்த்தப்பட்டாய், படுகுழியின் ஆழத்தில் வீழ்த்தப்பட்டாய்.”

இசையாஸ் ( ஏசாயா) 14 : 12- 15

இப்போது திருவெளிப்பாட்டில் நாம் பார்த்த பகுதி அப்படியே இசையாஸ் ஆகமத்தில் இருக்கிறது..

இதுதான் லிங்க்..

ஆண்டவருடைய ஏட்டுச்சுருளை எப்படிப்படிக்க வேண்டும்?

அதுவும் பைபிளில் இருக்கிறது..

“ஆண்டவரின் நூலில் கவனமாய்த் தேடிப் படியுங்கள், இவற்றுள் ஒன்றும் குறைந்து போகாது; ஒன்றுக்கொன்று துணையின்றிப் போய் விடாது; ஏனெனில் அவர் வாயிலிருந்து வந்தது அவரது ஆணையே, அவரது ஆவி தான் அவற்றை ஒன்று சேர்த்தது.”

இசையாஸ் 34 : 16 ( நன்றி வாழும் ஜெபமாலை இயக்கம்)

இசையாசும் திருவெளிப்பாடும் இணைகிறது.. ஆதியாகமும் திருவெளிப்பாடும் இணைகிறது.. இசையாசும்.. மத்தேயுவும் இணைகிறது..

இப்படி எத்தனையோ இணைவுகள்.. இணைப்புகள்.. தொடர்புகள்.. முன்னோடியான வசனங்கள் ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடு வரை வந்துகொண்டே இருக்கும்..

வசனத்தை மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து படிப்பவர்களோ? அதற்கு விளக்கம் சொல்பவர்களோ இதைக் கண்டுபிடிக்க முடியாது..

சரி .. இப்போது போருக்கு வருவோம்.. கடவுளுக்கு எதிரான ஒரு போர்.. அதாவது நித்தியபோர்.. கடவுளிடம் பிசாசு தொடுத்தபோர்.. போர் ஏற்பட்ட காலமும் ஆண்டும் நமக்குத் தெரியாது.. 

ஆனால் அந்தப்போருக்கும் மீட்புக்கும் தொடர்பு இருக்கிறது..

இந்த திருவெளிப்பாடு 12-ம் அதிகாரம் இதை தெள்ளந் தெளிவாக விளக்குகிறது..

அதை எப்படி கண்டு பிடிப்பது..?

பின்பு விண்ணகத்தில் நான் பெரும் குரல் ஒன்று கேட்டேன்; அது சொன்னதாவது: "இதோ, வந்துவிட்டது, நம் கடவுள் தரும் மீட்பு. இதோ, அவரது வல்லமையும் அரசும் வெளியாயிற்று; இப்போது அவருடைய மெசியாவின் அதிகாரம் விளங்குகிறது;

திருவெளிப்பாடு 12 : 10

அலகை வீழ்த்தப்பட்டதும்.. விண்ணகத்தில் ஒலிக்கும் குரல்தான் நாம் மேலே சொல்லிய பகுதி..

அப்படியென்றால் இந்தப் போருக்கு முன்னால் விண்ணகத்தில் மீட்பு குறித்த ஏதோ ஒரு விவாதம் நடந்திருக்க வேண்டும்.. அதன் பின்புதான் அந்தப் போர் ஆரம்பமாகி இருக்க வேண்டும்..

இசையாஸ் 7 : 14 – மீட்பரின் பிறப்பை அறிவிக்கிறது..

“இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்;”

இசையாஸ் 14 : 12 பிசாசின் வீழ்ச்சியை குறிப்பிடுகிறது.. ( மேலே உள்ள வசனத்தைப் பார்க்க..)

ஒருபுறம் எழுச்சி… ஒரு புறம்.. வீழ்ச்சி..

ஆக மீட்பின் அறிவிப்புக்கு பின் நிகழ்கிறது பிசாசின் வீழ்ச்சி..

அப்படியானால் அந்த சண்டைக்கு காரணம் மீட்பு.. ஏன் சண்டை..

இங்கே ஒரு பெண் வருகிறார்.. அந்த பெண்ணை நாம் உடனே மாதா என்று சொல்ல வேண்டாம்.. அவர் ஒரு பெண் என்றே வைத்துக்கொள்வோம்..

இப்போது அந்தப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் ஆண் குழந்தையை மட்டுமே பார்ப்போம்..

“எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருக்கும் ஓர் ஆண் குழந்தையை அவள் பெற்றெடுத்தாள்.” 

திருவெளிப்பாடு 12 : 5

அந்தக் குழந்தை யார் ? ஆண்டவர் இயேசு கிறிஸ்து..

அப்போ அந்த பெண் யார்? நம் தேவ மாதா..

தொடர்ச்சி ஆண்டவருக்கு சிந்தமானால் அடுத்த பகுதியில்..

நம் நேச பிதா வாழ்த்தெப்பெறுவாராக..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !