கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் பாகம் - 09

“உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம் ; அவள் உன் தலையை நசுக்குவாள் “ –ஆதியாகமம் 3 :15

மாதாவை நமக்கு அடையாளம் காட்டும் விவிலியத்தின் முதல் பகுதி இது.. பிதாவாகிய கடவுளின் நேரடி தீர்க்கதரிசனம் இது. அன்னைக்கும் அலகைக்கும் உள்ள பகையைக்குறித்த தீர்க்க தரிசனம் இது.

அன்னையைக் குறித்த புதிய ஏற்பாட்டு பகுதியான இதில் (கீழே வருகிறது) அன்னையின் விசுவாசத்தையையும் தூய்மையையும் பற்றிய பகுதி. கபரியேல் தூதர் இருவருக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிக்கிறார். ஒருவர் சக்கரியாஸ், மற்றவர் மாதா

கபரியேல் தூதர் சக்கரியாசிடம்  நற்செய்தி அறிவித்தபோது,

சக்கரியாஸ் தூதரிடம், " இவையாவும் நிகழும் என எனக்கு எப்படித் தெரியும் ? நானோ வயதானவன், என் மனைவியும் வயதுமுதிர்ந்தவள் " என்றார்.

அதற்குத் தூதர், " நான் கடவுளின் திருமுன் நிற்கும் கபிரியேல். உன்னிடம் பேசவும், இந்நற்செய்தியை உனக்கு அறிவிக்கவும் அனுப்பப்பெற்றேன்.

இதோ! இவை நடைபெறும் நாள்வரை நீ பேசாமலும் பேச முடியாமலும் இருப்பாய். ஏனெனில், உரிய காலத்தில் நிறைவேறும் என் சொல்லை நீ நம்பவில்லை " என்றார். லூக்காஸ் 1: 18-20

அதே கபரியேல் அன்னை மரியாளிடம் அறிவித்த போது,

தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார். இவ்வார்த்தைகளை அவள் கேட்டுக் கலங்கி, இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.

அப்போது வானதூதர் அவளைப் பார்த்து, " மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.

அவர் யாக்கோபின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். மரியாள் தூதரிடம், "இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே" என்றாள்.

அதற்கு வானதூதர், "பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்.

இதோ! உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம்.ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றார்.

மரியாளோ, "இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்றாள். என்றதும் வானதூதர் அவளிடமிருந்து அகன்றார்.  லூக்காஸ் 1: 28-38

விசுவாசமில்லாத ஒரு கேள்விக்குத் தண்டனை. நியாயமான ஒரு கேள்விக்கு விளக்கம். ஏனென்றால் தன் கன்னிமையை, கற்பை கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்ட மாதாவிற்கு விளக்கம் கொடுத்துதான் ஆக வேண்டும். இந்த விளக்கம் கபரியேல் மூலமாக உலகத்தாருக்கு கடவுள் கொடுக்கும் விளக்கம். அன்புத்தாய் எவ்வாறு கடவுளைப்பெற்றார் என்பதை இதன் மூலமாக கடவுள் உலகுக்கு அறிவிக்கிறார். 

அங்கு சக்கரியாசிடம் சென்ற கபரியேல் இங்கு ஏன் புனித சூசையப்பரிடம் செல்லவில்லை. சூசையப்பரின் அனுமதி பெறவில்லை. நேரிடையாக மாதாவிடம் வந்து அறிவிக்கிறார். கடவுளுக்கு மாதாவின் சம்மதம்தான் வேண்டும். ஏனென்றால் கடவுளே வந்து அவதரிக்க அன்னை மரியாளிடம் சம்மதம் கேட்க அவர் ஆர்வமாயிருக்கிறார்.

வார்த்தை மனு உருவாவதற்கு அன்னையின் அமல உற்பவமும், சம்மதமும் அன்னையின் கடவுளுக்குத் தேவைப்பட்டது. அதையும் தாண்டி புதிய ஏவாளாக சாத்தானின் தலையை மிதிக்கவும் அதே பெண் தேவைப்பட்டது.

ஆதியாகமத்தில் துவங்கிய மரியன்னையின் ஆகமம் லூக்காஸ் நற்செய்திவரை தொடர்கிறது. “ உனக்கும் பெண்ணுக்கும் பகை “ என்ற ஆதியாகம தீர்க்கதரிசனம் “ அருள் நிறைந்தவளே வாழ்க “ என்று லூக்காசில் தொடர்கிறது. பின்பு திருவெளிப்பாடில் நிறைவு பெறுகிறது.. 

“ விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்.” திருவெளிப்பாடு 12:1

ஒரு கவிஞரின் பாடல் வரிகள் மாதாவுக்கு மிகச்சிறப்பாக பொருந்துகிறது,

 “ ஆதியும் அந்தமும் அவள்தான் நம்மை ஆளும் நீதியும் அவள்தான் “

சரி நம் அன்னையின் பாத்திரங்கள்தான் என்ன?

1. அமல உற்பவி

2. பிதாவாகிய சர்வேசுவரனுக்கு மகள்

3. சுதனாகிய சர்வேசுவரனுக்குத தாய்

4. பரிசுத்த ஆவியான சர்வேசுவரனுக்கு மனவாட்டி

5. முப்பொழும் கன்னி

6. நம் அனைவருக்கும் தாய்

அத்தனைப் பாத்திரங்களையும் ஏற்று கடவுளின் திட்டத்தை முழுவதும் நிறைவேற்றினார்கள்; நிறைவேற காரணமாயிருந்தார்கள் ஏன் தன்னையே தாழ்த்தி கடவுளின் திட்டத்திற்கு தன்னையே பலிப்பொருளாக ஒப்புக்கொடுத்தார்கள். 

நமக்கும் பல பாத்திரங்களை கடவுள் கொடுத்துள்ளார். அது மகனாக, மகளாக, அண்ணணாக, தங்கையாக, கணவனாக, மனைவியாக, தாயாக, தந்தையாக, தோழனாக, தோழியாக, குருவானவர்களாக, கன்னியர்களாக, தாத்தாவாக, பாட்டியாக...என்று எவ்வளவோ இருக்கலாம்..

அதில் நாம் எப்படியிருக்கிறோம்? என்ன செய்கிறோம்? கடவுள் நம்மிடம் எதிர்ப்பார்க்கும் நம் கடமையை சரியாக செய்கிறோமா? சிந்திப்போம். அதற்கான வரத்தை நம் அன்னையிடம் கேட்டு நம்மையே நாம் தயாரிப்போம்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !