சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 08

சுகந்த மணம் வீசி மாசற்ற லீலி  மலர்களைப் போல் விளங்கும் அர்ச்சியசிஷ்ட ஞானப்பிரகாசியார், அர்ச். ஸ்தனிஸ்லாஸ் அர்ச். பெர்க்மான்ஸ் அருளப்பர், தற்கால மெங்கும் பெயர் பெற்றிலங்கும் சிறிய புஷ்பம் எனப்படும் குழந்தை சேசுவின் தெரேசம்மாள் - இவர்களைப் போன்ற அர்ச்சியசிஷ்டவர்கள் எங்கிருந்து உற்பத்தியானார்கள்? பக்தியுள்ள கத்தோலிக்கக் குடும்பங்களில் இருந்து அல்லவா 

இனிய கிறீஸ்து இராஜாவுக்காக எவ்விடத்தும் எக்காலத்தும் தங்கள் உயிரைத் தத்தம் செய்து, சந்தோஷமாய் வேதசாட்சியாக மரித்த கணக்கற்ற கத்தோலிக்கருக்கு அவ்வித தைரியம் எங்கு இருந்து உண்டானது? அவர்கள் பிறந்து வளர்ந்த நல்ல கத்தோலிக்கக் குடும்பங்களின் வன்மையால் அன்றோ அவர்களுடைய மனவலிமை ஊன்றி நின்றது. தங்கள் நுண்ணறிவால் சிறந்து, உலகில் நட்சத்திரங்களைப் போல் துலங்கிய வேதபாரகரும், திருச்சபையை திறமையோடு ஆண்டு வந்த ஞான மேய்ப்பர்களும் எங்கிருந்து வந்தார்கள்? விசுவாசம் நிறைந்த கத்தோலிக்கக் குடும்பங்களிலிருந்து அல்லவா 

தங்கள் சுயநாட்டையும், வீட்டையும் உற்றார் உறவினரையும் விட்டுப் பிரிந்து, உலகத்தின் எத்திசையானாலும் சரி எவ்வித ஜனங்களுக்குள்ளும் சரி, பயமின்றிச் சென்று, வேத வாக்கியத்தைப் பிரசங்கித்து, கிறீஸ்து இராஜாவின் இராச்சியம் பரவுவதற்காக உழைக்கும் வீரம் மிகுந்த குருக்களுக்கும் கன்னியர்களுக்கும் எப்படி இவ்வித மன தைரியமுண்டானது ஒழுங்கான கத்தோலிக்கக் குடும்பங்களில் தாய்ப்பாலோடு தாங்கள் அருந்திய பிறர்சிநேகத்தினால் அல்லவா 

நமது நாட்டில் ஜென்ம நாட்டாரில் ஞான நன்மையைக் கோரி, உலகத்தின் உயர் பதவிகளையும் உதறித் தள்ளி விட்டு, தேவ அழைப்புக்கு ஆவலுடன் செவி கொடுத்து அவ்வூழியத்தில் வந்து அமர்ந்திருக்கும் அநேக குருக்களும் கன்னியர்களும் எங்கிருந்து நமக்குக் கிடைத்தார்கள்? பக்தி நிறைந்த கத்தோலிக்கக் குடும்பங்களே, இவர்களை நமக்குக் கொடுத்த கற்பக விருட்சங்கள் 

இப்படியிருக்க ஒழுங்கான கத்தோலிக்கக் குடும்பத்தில் மகிமையும், பெருமையும், பிரதானமும், நாம் விவரித்துக் கூறாமலே எவருக்கும் எளிதில் விளங்கும். உலகத்திலுள்ளோர் யாவரும் பரிசுத்தமாய் ஜீவித்துப் பரலோக இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்று கோருகிற நமது உலக அரசருக்கு மனித பலவீனம் நன்றாய்த் தெரியுமாதலால், கிறீஸ்தவக் குடும்பங்களில் அரிய பெரிய வீரச் செயல்களை அவர் எதிர்பார்ப்பதில்லை. சாதாரண சிறு காரியங்களில் நாம் பிரமாணிக்கமாய் நடப்பதே அவருக்குப் போதும் 

நம்பிக்கையுள்ள நல்ல ஊழியக்காரனே! நீ சொற்பக்  காரியங்களில் பிரமாணிக்கமாயிருந்ததினால், அநேக காரியங்களின்மேல் உன்னை அதிகாரியாக்குவேன். உன் எஜமானுடைய சந்தோஷத்துக்குள் பிரவேசி” (மத். 25:21) என்று நமது கருணை ராஜா திருவுளம்பற்றுகிறார்

தொடரும்...