சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 07

கிறீஸ்து இராஜாவின் இராச்சியமாகிய திருச்சபை பரவி, அப்போஸ்தலரிடமிருந்து அதிகாரம் பெற்று பல திக்குகளிலும் பிரசங்கிக்கப் போனவர்களுக்கு விரோதமாய் சில பொய்ப் போதகர் நூதன போதனைகளைப் போதித்து, ஜனங்களை ஏமாற்றி வந்தனர். ஆகையால் அவர்களுடைய போதகங்களுக்குக் காது கொடுக்காதபடி அர்ச்.சின்னப்பர் எச்சரித்து, “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, பரலோகத்தினின்று வருகிற தேவ தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவான்' என்று (கலாத். 1:8) மோட்ச இராச்சிய சுவிசேஷத்தைப் புரட்ட எத்தனித்தவர்களையும் கண்டித்து அடக்கினார் 

இவ்வண்ணம் நமதாண்டவரால் தெரிந்து கொள்ளபட்ட அப்போஸ்தலர்களும், அவர்களுடைய அதிகாரத்துடன் அனுப்பப்பட்டவர்களும் கிறீஸ்து இராச்சியம் உலகமெத்திசையிலும் பரவ முயற்சியெடுத்ததுபோல், அவர்களுக்குப்பின் கிரம முறையில் அவர்களுடைய ஸ்தானத்தை வகிக்க வந்தவர்களும் இந்நாள் வரையில் நமதாண்டவர் கட்டளையிட்டயாவையும் நுணுக்கமாய் அனுசரிக்கும்படி ஜனங்களுக்குப் போதிக்கின்றனர். கிறீஸ்து இராஜாவின் இராச்சியம் மென்மேலும் பரவும்படியும் செய்து வருகிறார்களென்று யாவரும் அறிவோம் 

இவ்விதமே உலக முடிவு பரியந்தம் இந்த இராச்சியம் எங்கும் பரவி, விஸ்தாரமாகி, சுவிசேஷத்தில் சொல்லப்பட்ட கடுகு விதைக்கு ஒப்பாக ஓங்கி வளர்ந்து, தானியேல் கூறிய தீர்க்கதரிசனமும் (2:44,45) முற்றும் நிறைவேறும் என்பதற்கு சந்தேகமில்லை. “அந்த இராஜாங்கங்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஓர் இராச்சியத்தை எழும்பப் பண்ணுவார்; இராச்சியம் வேறே சந்ததிக்கு விடப்படுவதில்லை. அது மற்ற இராச்சியங்களையெல்லாம் அழிக்கும், அதுவோ என்றென்றைக்கும் இருக்கும் இதுவே உலகத்தில் வெளியரங்கமான ஸ்தாபனமாயிருக்கும் திருச்சபை என்னும் கிறீஸ்து இராஜாவின் இராச்சியம். 

ஓர் பெரிய அரண்மனையை நோக்கும்போது, அதன் அமைப்பையும், ஒழுங்கையும், விசித்திர வேலைப்பாட்டையும், அதிலுள்ள அலங்காரமான தட்டு முட்டுகளையும் முதலாய் நுணுக்கமாய் கவனித்து ஆச்சரியப்பட்டு, “ஆ! என்ன அழகிய கட்டிடம்!” என்று சொல்லி சந்தோஷ படுகிறோமேயொழிய அவ்வழகிய அரண்மனையைத் தாங்கி நின்று, கண்ணுக்குத் தெரியாமல் மண்ணில் புதைந்து கிடக்கும் அதன் பலமான அஸ்திவாரத்தைப்பற்றி நாம் கொஞ்சமும் யோசனை செய்வதில்லை. 

ஆனால் அந்த அஸ்திவாரம் இல்லாவிட்டால் அரண்மனை எங்கே, அதன் அழகு எங்கே அலங்காரம் எங்கே இவ்விதமே கத்தோலிக்க கிறீஸ்தவர்கள் மேன்மையடைய வேண்டும் முன்னுக்கு வர வேண்டும், அவர்கள் கல்வி அபிவிருத்தியாக வேண்டுமென எத்தனை விதமான ஏற்பாடுகள் செய்ய ஆங்காங்கு முயற்சிகள் நடந்து வருவது மிகவும் மெச்சத்தக்க காரியமே. 

ஆயினும், கத்தோலிக்கருடைய சகலவித மேன்பாடுகளுக்கும், மூலகாரணமும், பலத்த அஸ்திவாரமுமான கத்தோலிக்கரின் இல்லங்களைப்பற்றித் தகுந்த அக்கறை எடுத்து, அவை இருக்க வேண்டிய முறையைக் காட்டவோ, சீர்திருத்தவோ, நம்மில் அநேகர் ஊக்கமுடையவராகக் காணப்படவில்லை. 

தேச சரித்திரங்களிலும், திருச்சபையின் சரித்திரத்திலும் அந்தந்தக் காலங்களில் வீர பராக்கிரம முடையவர்களாகவோ, பக்தி நிறைந்த புண்ணிய சீலர்களாக உலகின்கண் விளங்கியவர் எல்லோரும் சாதாரணமாய் நல்ல குடும்பங்களிலிருந்து உதித்தவர்களென்றே அறிந்து கொள்கிறோம். ஊற்றிலிருந்து வரும் தண்ணீர் உப்பும் கரிப்பும் கலந்திருந்தால், அதில் உற்பத்தியாகி பரவிடும் ஓடைகளும் உபயோகமற்றவைகளாகவே இருக்கும். ஆனால் தெளிந்த நீர் ததும்பும் ஊற்றானால் அதில் இருந்து வடியும் கால்வாய்கள் பளிங்கு போல் பிரகாசிக்கும் நீருடன் ஓடி குடிப்பவர் தாகந் தீர்ந்து பாயுமிடமெல்லாம் நற்பயனளிக்கும் அன்றோ! அவ்வாறே நல்ல கத்தோலிக்கக் குடும்பங்களும் நல்ல கிறீஸ்தவர்களை உண்டாக்கி, கிறீஸ்து இராஜாவின் இராச்சிய மாகிய திருச்சபை செழிக்கச் செய்யும்

தொடரும்...