கையில் திவ்ய நன்மை வழங்குவதற்கு எதிரான பாப்பரசர்கள், அர்ச்சியசிஷ்டவர்கள் மற்றும் திருச்சபையின் பொதுச் சங்கங்களின் அறிக்கைகள்

அர்ச். முதலாம் சிக்ஸ்துஸ் (கி.பி. 115)

''ஆண்டவருக்கென்று அபிஷேகம் செய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் திவ்ய நற்கருணைக்குரிய புனிதப் பாத்திரங்களைக் கையாளக் கூடாது."

திவ்ய நற்கருணைக்காகப் பயன்படுத்தப்படும் திருப்பாத்திரங்களைக் கூட குருக்களைத் தவிர மற்றவர்கள் தொடக்கூடாது என்று இந்த அர்ச். பாப்பானவர் கூறுகிறார். ஆனால் அதற்கெதிராக, பாத்திரங்களை அல்ல, நற்கருணை ஆண்டவரையே விசுவாசிகளும் கூட தொடத் துணிவது எப்பேர்ப்பட்ட பாவமாக இருக்கும் என்று சிந்தித்துக் கொள்ளுங்கள்! 

பாப்பரசர் அர்ச். யூட்டீஷியன் (கி.பி. 275-283) 

விசுவாசிகள் தங்கள் கைகளில் திவ்ய அப்பத்தை எடுப்பதை அதிகாரபூர்வமாகத் தடை செய்தார். திருச்சபையின் வேதபாரகரான (Doctor of the Church) 

அர்ச். பெரிய பேசில் (கி. பி. 330-379):

''கையில் திவ்ய நன்மையைப் பெற்றுக்கொள்ளும் உரிமை வேத கலாபனைக் காலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.''

கையில் திவ்ய நன்மை பெறுவது கனமான பாவம் என்று சொல்ல இந்தப் புனிதர் சற்றும் தயங்காத அளவுக்கு அவர் இதைப் பெரும் ஒழுங்கீனமாக மதித்தார். 

சரகோஸாபொதுச்சங்கம் (கி.பி. 380)

"கையில் திவ்ய நன்மையைப் பெறத் துணியும் எவனும் திருச்சபை விலக்கத் தண்டனைக்கு உள்ளாவான்." சங்கத்தின் இந்தப் பிரகடனம் அதன்பின் டொலேடோசங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. 

பாப்பரசர் அர்ச். பெரியசிங்கராயர் (கி.பி. 440-461)

விசுவாசிகளுக்கு நாவில் மட்டுமே திவ்ய நன்மை வழங்கும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கும்படி குருக்களுக்கும், நாவில் மட்டுமே அதைப் பெறும்படி விசுவாசிகளுக்கும் இந்தப் புனித பாப்பரசர் கட்டளை யிட்டார்.

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மாபெரும் அர்ச்சியசிஷ்டவர் நாவில் நன்மை வழங்கும் பாரம்பரிய வழக்கத்திற்கு ஒரு தொடக்க கால சாட்சியாக இருக்கிறார். அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தின் ஆறாம் அதிகாரத்தைப் பற்றிய தம்முடைய விளக்கவுரையில், அவர் நாவில் நன்மை வழங்குவது பற்றிப் பேசுகிறார். "ஒருவன் விசுவாசத்தால் தான் விசுவசிப்பதையே நாவில் பெற்றுக்கொள்கிறான்" என்று அவர் கூறுகிறார். "Hoc enim ore sumiter quod fide creditur.'" Serm. 91.3. இது ஏதோ புதிதாகத் தோன்றிய ஒரு வழக்கம் என்பது போல அவர் பேசாமல், இது உறுதியாக ஸ்தாபிக்கப்பட்ட பாரம்பரிய வழக்கம் என்ற முறையில் அவர் இதைப் பற்றிப் பேசுகிறார். 

பாப்பரசர் அர்ச். பெரிய கிரகோரியார் (590-604)

இவர் நாவில் மட்டுமே நன்மை வழங்கும் கத்தோலிக்கப் பாரம்பரிய வழக்கத்திற்கு மற்றொரு உறுதியான சாட்சியாக இருக்கிறார். அர்ச். சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய திருமுகம், 3:3 திருவாக்கியத்திற்குத் தமது விளக்கவுரையில், பாப்பரசர் அர்ச். அகாப்பித்தோ (490-522) என்பவரின் பூசையில், அவர் விசுவாசிகளில் ஒருவருக்கு திவ்ய நன்மை வழங்கியவுடன் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைக் குறித்துப் பேசுகிறார்.

பாப்பரசர் அர்ச். யூட்டீஷியன் (கி.பி. 275-283), சரகோஸா பொதுச் சங்கம் (கி.பி. 380), பாப்பரசர் அர்ச். பெரிய சிங்கராயர் (கி.பி. 440-461), பாப்பரசர் அர்ச். பெரிய கிரகோரியார் (590-604) ஆகிய இந்த சாட்சிகள், திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே கையில் அல்ல, மாறாக வாயில் தான் திவ்ய நன்மை வழங்கும் வழக்கம் இருந்தது என்பதை உறுதிப் படுத்துகிறார்கள். ஆகவே, சிலர் விதண்டாவாதம் செய்வது போல, "பத்தாம் நூற்றாண்டு வரை கையில் நன்மை வழங்குவதுதான் அதிகார பூர்வ வழக்கமாக இருந்தது" என்பது அப்பட்டமான பொய்யாகும். 

ரூவென் ஆயர் சங்கம் (650)

கையில் நன்மை வழங்கும் வழக்கத்தால் மிக அதிகமாக நிகழ்ந்த அவசங்கைகளைத் தடுத்து நிறுத்தும்படியாகவும், இந்தத் தேவத்துரோகத் திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாகவும் இந்த வழக்கத்தை இந்தச் சங்கம் கண்டனம் செய்தது. "பொது நிலை விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் கையில் திவ்ய நன்மை தராதீர்கள், மாறாக, அவர்களது வாய்களில் மட்டுமே நன்மை வழங்குங்கள்" ("Do not put the Eucharist in the hands of any layman or laywomen, but ONLY in their mouths.") என்று இச்சங்கம் கட்டளையிட்டது.

கான்ஸ்டாண்டிநோப்பிளில் நடைபெற்ற ஆறாவது பொதுச் சங்கம் (680-681)

விசுவாசிகள் கையில் திவ்ய அப்பத்தை எடுப்பதை இந்தப் பொதுச் சங்கம் தடை செய்ததோடு, இந்தப் பாவத்தைச் செய்பவர்கள் திருச்சபை விலக்கத் தண்டனை பெறுவார்கள் என்றும் அச்சுறுத்தியது. அர்ச். 

தாமஸ் அக்குயினாஸ் (1225-1274)

"(திவ்ய நற்கருணையாகிய) இந்தத் தேவத்திரவிய அனுமானம் (திருவருட்சாதனம்) ஆராதனைக்குரியது என்பதால், அபிஷேகம் செய்யப் பட்டது தவிர வேறு எதுவும் அதைத் தொடலாகாது; இதன் காரண மாகவே, திருமேனித் துகிலும், பூசைப் பாத்திரமும், அவ்வாறே குருவின் கரங்களும், இந்த தேவத்திரவிய அனுமானத்தைத் தொடுவதற்காக அபிஷேகம் செய்யப்படுகின்றன." (Summa Theologica, Part III, Q. 82, Art. 3, Rep. Obj. 8). 

திரிதெந்தீன் பொதுச்சங்கம் (கி.பி. 1545-1565)

"குருவானவர் அபிஷேகம் பெற்ற தமது கரங்களால் திவ்ய நன்மை வழங்குவது அப்போஸ்தலிக்கப் பாரம்பரியம் ஆகும்.''

பாப்பரசர் ஆறாம் சின்ன ப்பர் (கி.பி. 1963-1978)

"(நாவில் நன்மை வழங்கும்) இந்த முறைமையே தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட வேண்டும்" ('மெமோரியாலே தோமினி' மடல், மே 29, 1969).

பாப்பரசர் இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II)

"திவ்ய அப்பங்களைத் தொடுவதும், அவற்றைத் தங்கள் சொந்தக் கரங்களால் வழங்குவதும் அபிஷேகம் பெற்றவர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாகும்" ('தோமினிக்கே ச்செனே' மடல், எண் 11, பிப்ரவரி 24, 1980).

''விசுவாசிகள் தாங்களாகவே தேவ வசீகரம் செய்யப்பட்ட அப்பங்களையும், புனித பூசைப் பாத்திரத்தையும் தங்கள் கையில் எடுப்பதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை. அதைவிட, அவர்கள் ஒருவருக்கொருவர் அவற்றைத் தருவதற்கு சற்றும் அனுமதிக்கப்படவில்லை '' ('இனெஸ்தி - மாபிலே தோனும், ஏப்ரல் 17, 1980, பிரிவு 9).

எந்தச் சூழ்நிலையிலும் விசுவாசிகள் கையில் நன்மை பெற்று உட்கொள்வது அனுமதிக்கப் படவேயில்லை என்று நாம் வாதிடவில்லை. தொடக்க காலத்திலிருந்தே குருவானவர் திவ்ய நன்மை வாங்குபவருக்கு அதை நாவில் வழங்குவதுதான் வழக்கமாக இருந்தது. என்றாலும், கலாபனைக் காலங்களில், குருக்கள் யாரும் இல்லாத சூழ்நிலைகளிலும், விசுவாசிகள் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றபோதும், அவர்கள் வேறு வழியின்றி, தங்கள் சொந்தக் கரத்தால் திவ்ய நற்கருணையை எடுத்து உட்கொண்டார்கள் என்பது உண்மைதான். இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நித்திய ஜீவியத்திற்குரிய திவ்ய அப்பத்தை உட்கொள்வதிலிருந்து முற்றிலுமாகத் தாங்கள் விலக்கப்படாதவாறு, வேறு வழியே இன்றி, தங்கள் ஆன்ம போஷிப்பிற்காக அவர்கள் தங்கள் கரங்களால் திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டியிருந்தது. முதல் நூற்றாண்டுகளின் வழக்கப்படி, பாலைவனங்களிலும் காடுகளிலும் தவம் செய்த துறவிகளும், ஒரு குருவானவரின் உதவி தங்களுக்கு இல்லாத சூழ்நிலைகளில், தங்கள் கரங்களாலேயே அனுதின திவ்ய நன்மை உட்கொண்டார்கள்.

ஆனால் அதற்கு நேர்மாறாக, ஒன்றுக்குப் பத்து குருக்கள் ஆலயத்தில் இருக்கும் போதும் கூட, எந்த அவசியமுமின்றி விசுவாசிகளுக்குக் கைகளில் நன்மை வழங்கப்படுவது ஆதித் திருச்சபையிலிருந்தே அனுமதிக்கப்படவில்லை என்பதை மேற்கூறப்பட்ட சாட்சியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

''கிறீஸ்தவ அகழ்வாராய்வு அகராதியில்" (Dictionaire d'Archeologie Chretienne), கான்ஸ்ட ண்டைன் அரசரால் ஆதித் திருச்சபையில் விளைந்த சமாதானத்தோடு விசுவாசிகள் தங்கள் சொந்தக் கரங்களால் நன்மை உட்கொள்ளும் வழக்கம் அடியோடு முடிவுக்கு வந்தது என்று லெக்ளெர்க் என்பவர் அறிவிக்கிறார். கலாபனைக் காலங்களில் மட்டுமே கையில் நன்மை என்பது அனுமதிக்கப்பட்டது என்ற அர்ச். பெரிய பேசிலின் கூற்று இவ்வாறு எண்பிக்கப்படுகிறது.

இந்தத் தொடக்க காலங்களில், குருக்களும் கூட அவசியமின்றி திவ்ய நற்கருணையைத் தொட அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி நமக்கு வியப்பும், மறுபுறம் மகிழ்ச்சியும் தருகிறது. உண்மையில் திவ்ய பலிபூசை நிறைவேற்றும் குருவானவரைத் தவிர, வேறு யாரும், அவர் பூசையில் பங்குபெறும் ஒரு குருவாகவே இருந்தாலும் கூட, கையில் நன்மை வாங்குவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருந்தது. அவர் மற்றொரு குருவிடமிருந்து நாவின் மீதுதான் திவ்ய நன்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் ஆயராக இருந்தாலும் சரி, பாப்பரசராகவே இருந்தாலும் சரி, அவர்களுக்கும் இதுவே சட்டமாக இருந்தது.

உதாராணமாக, பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர், 1914 ஆகஸ்ட் மாதத்தில் தமது மரணப் படுக்கையில் இருந்தபோது, அவருக்கு அவஸ்தை நன்மை கொண்டு வரப்பட்டது. அப்போது, அவர் கத்தோலிக்கத் திருச்சபையின் திருச்சட்டப்படியும், வழக்கப்படியும் நாவில் தான் நன்மை பெற்றுக் கொண்டார்.

இது ஓர் அடிப்படை உண்மையை உறுதிப்படுத்துகிறது. திவ்ய நற்கருணை நாதர் நம் சர்வேசுரனாக, பழைய ஏற்பாட்டில் தமது ஆவிக் குரிய பிரசன்னத்தைக் கொண்டிருந்த புனித உடன்படிக்கைப் பேழையைத் தொடத் துணிந்த ஓஸா என்பவனை அந்த இடத்திலேயே அடித்து வீழ்த்திய (2 அரசர். 6:6,7) அதே சர்வேசுரனாக, ஆனால் இப்போது, எரிச்சலுள்ள தேவனாக அன்றி, அளவற்ற இரக்கமுள்ள சர்வேசுரனாக இருக்கிறார். ஆகவே, குருக்களானாலும் சரி, விசுவாசிகளானாலும் சரி, காரணமும் தேவையுமின்றி அவரைத் தொடுபவர்கள் யாவரும் அவர் நீதியுள்ள நடுவராக வரும்போது, நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை .