கர்த்தர் பிறந்ததை தியானிப்போமாக.

பெத்லகேம் கிராமம். சூசையப்பர் பெயரைப் பதிவு செய்த பின், உடனே கண்டுபிடித்தாக வேண்டிய ஒரு தங்குமிடம் பற்றி நினைக்கிறார். துரிதமாய் நடக்கிறார். வீடு வீடாய்ப் போகிறார். ஓர் அறை கிடைக்குமா என்று கேட்கிறார். கிடைத்தபாடில்லை. எல்லாம் நிரம்பிவிட்டன. அவர்கள் விடுதிக்கு வந்து சேர்கிறார்கள். அங்கே யுள்ள பெரிய முற்றங்கள் கூட பயணிகளால் நிறைந்திருக்கின்றன. 

சூசையப்பர் மாதாவை அம்முற்றத்தில் கோவேறு கழுதை மீது இருந்த நிலையிலேயே விட்டுவிட்டு வெளியில் செல்கிறார். மற்ற வீடுகளில் இடம் கிடைக்குமா என்று கேட்டுப் பார்க்கிறார். ஆனால் மனம் ஒடிந்து போய் திரும்பி வருகிறார். ஒரு இடமும் அகப்படவில்லை. குளிர்கால மாலையின் அஸ்தமன நிழல் துரித மாய்ப் படருகிறது. விடுதித் தலைவனிடம் கெஞ்சிக் கேட்கிறார். சில பயணிகளிடமும் அவ்வாறே கேட்டுப் பார்க்கிறார். பிரசவிக் கும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு இடமளிக்க இரங்கக் கூடாதா என்று கேட்கிறார். ஒரு பலனும் இல்லை.

அவர்கள் புறப்பட்டு வெளியே வந்து, விடுதியின் சுவரோர மாய்ச் செல்கிறார்கள். விடுதிக்கும் சில வீடுகளுக்கும் நடுவே செல்லும் சிறிய தெருவின் வழியே வருகிறார்கள். விடுதிக்குப் பின்புறமாகத் திரும்பி தொழுவங்களைத் தேடுகிறார்கள். கடைசி யாக சில மலைக் கெபிகள் காணப்படுகின்றன. அவை எவ்வளவு தாழ்வாகவும், ஈரமாகவும் உள்ளனவென்றால், அவைகளைத் தொழு வங்கள் என்றுகூட சொல்ல முடியாது. நில அறைகள் எனலாம். அதிலும் நல்லவை ஏற்கெனவே எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டன. சூசையப்பர் மனம் உடைந்து விட்டார்.

''கலிலேயனே! அந்த அற்றத்தில் அந்த இடிபாடுகளுக்கடியில் பாரும். அங்கே ஒரு குகை உள்ளது. அங்கே யாரும் ஒருவேளை போய்த் தங்கியிருக்க மாட்டார்கள்” என்று ஒரு வயதான மனிதன் சூசையப்பரிடம் சத்தமாய்க் கூப்பிட்டுச் சொல்கிறான்

அவர்கள் அந்தக்குகைக்கு விரைவாகச் செல்கிறார்கள். உண்மை யிலேயே அது ஒரு குகைதான் : ஒரு பழைய கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு நடுவில் ஒரு துவாரம். மலையில் ஒரு குடைவு தெரிகிறது. அது கெபியும் அல்ல. பழைய அஸ்திவாரங்களில் முரடான மரங்களால் தாங்கப்பட்ட காரைக்கட்டி உடைவுகள் கூரையாக உள்ளன.

வெளிச்சமில்லை. சூசையப்பர் தோள் பையிலிருந்து உரசும் கற்களை எடுத்து ஒரு சிறு விளக்கைப் பொருத்துகிறார். குகைக் குள்ளே நுழைகிறார். அங்கிருந்து ஒரு மாடு கூப்பிடும் சத்தம் வருகிறது. "மரியா உள்ளே வாருங்கள். இது காலியாக இருக்கிறது. ஓர் எருது மட்டுமே உள்ளது'' என்று கூறி புன்னகையுடன் “ஒன்றுமில்லாததற்கு இது தாவிளை...'' என்கிறார். மாதா கோவேறு கழுதையிலிருந்து இறங்கி உள்ளே செல்கிறார்கள்.

சூசையப்பர், விளக்கை ஒரு மரத்தூணில் இருந்த ஓர் ஆணியில் தொங்க விட்டிருக்கிறார். மேலே பார்த்தால் ஒரே சிலந்திக் கூடு - உடைந்து கிடக்கும் மண் தரை - அதில் குழிகள், குப்பை, சாணம், வைக்கோல் சிதறிக் கிடக்கிறது. குகையின் உட்புறத்தில் பெரிய கண்களுடன் ஓர் எருது, அதன் வாயில் வைக்கோல் தொங்க விழித்து சுற்றிப் பார்க்கிறது. ஒரு கரடுமுரடான முக்காலி போன்ற இருக்கையும் ஒரு மூலையில் ஒரு துவாரத்தின் பக்கத்தில் இரண்டு பெரிய கற்களும் அங்கே கிடக்கின்றன. அந்த மூலையில் கரி பிடித் திருப்பதிலிருந்து அங்குதான் வழக்கமாக நெருப்பு மூட்டப்படும் என்று தெரிகிறது.

மாதாவுக்குக் குளிருகிறது. அந்த எருதுவின் அருகில் அவர்கள் செல்கிறார்கள் அதன் கழுத்தில் உஷ்ணத்திற்காக கையை வைக் கிறார்கள். அதுகலையவில்லை. அது கண்டுபிடித்தது போல் தெரிகிறது. சூசையப்பர், மாதாவுக்கு ஒரு படுக்கை தயாரிப்பதற்காக அதன் முன்னிட்டியிலிருந்து கூடுதலாக வைக்கோலை எடுப்பதற்கு அந்த எருதை ஒரு பக்கமாகத் தள்ளுகிறார். அப்போதும் அது அமைதி யாக நிற்கிறது. அந்த முன்னிட்டி இரண்டு தட்டுகளை உடையது. எருது வைக்கோல் தின்னும் தட்டிற்கு மேலே உள்ள தட்டில் வைக் கோல் சேகரித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை சூசையப்பர் கீழே இழுத்துப் போடுகிறார். அப்போது அங்கு வரும் கழுதைக்கும் எருது இடங்கொடுக்கிறது. பசித்துக் களைத்திருந்த கழுதையும் உடனே தின்னத் தொடங்குகிறது.

அங்கே ஒரு தகட்டால் அடித்த வாளி கவிழ்த்து வைக்கப்பட் டிருப்பதை சூசையப்பர் எடுத்து, வரும் வழியில் தாம் பார்த்த ஒரு சிற்றோடைக்குப் போய் அதில் கழுதைக்குத் தண்ணீர் கொண்டு வருகிறார். ஒரு ஓரமாக ஒரு கட்டு குச்சிகள் காணப்படுகிறது. அதைக் கொண்டு சூசையப்பர் தரையைச் சுத்தம் செய்கிறார். எருது நின்றதற்குப் பக்கத்தில் தான் அக்குகைக்குள் பாதுகாப்பான ஈரமில்லாத இடம். அதில் வைக்கோல் படுக்கை தயார் செய் கிறார். ஆனால் அந்த வைக்கோல் ஈரமாயிருக்கிறது. பெருமூச்சு விடுகிறார். பின் நெருப்புப் பற்றவைத்து யோபின் பொறுமை யோடு வைக்கோலை உலர்த்துகிறார். ஒரு தடவைக்கு ஒரு கைப்பிடி வைக்கோலை நெருப்பின் பக்கத்தில் பிடித்துச் சூடாக்குகிறார்.

மாதா அந்த இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். களைத்துப் போயிருக்கிறார்கள். எல்லாவற்றையும் பார்த்து புன்னகை செய்த படி இருக்கிறார்கள். வைக்கோல் பரப்பி முடிகிறது. மாதா மரத் தூண் ஒன்றில் சாய்ந்தபடி கீழே வைக்கோலில் உட்கார்ந்திருக் கிறார்கள்.... சூசையப்பர் வாசலாக உதவிய குகையின் துவாரத்தில் தம் மேலாடையை ஒரு திரையாகத் தொங்க விடுகிறார். அதன் பின் கொஞ்சம் ரொட்டியும், பால் கட்டியும், பாத்திரத்திலிருந்து தண்ணீரும் மாதாவுக்கு எடுத்துக் கொடுக்கிறார்.

"மரியா உறங்குங்கள். நான் விழித்திருந்து நெருப்பு அணைந்து விடாதபடி கவனிக்கிறேன். கொஞ்சம் விறகு கிடந்தது நல்ல தாயிற்று. அது எரிக்க போதுமானதாயிருக்கும். விளக்கிலுள்ள எண்ணையை மீதப்படுத்திக் கொள்ளலாம்'' என்கிறார்.

கீழ்ப்படிதலுடன் மாதா படுத்துக்கொள்கிறார்கள்..... சூசையப்பர், வஸ்திரத்தையும், போர்வையையும் கொண்டு மாதாவை மூடுகிறார். மாதா : "உங்களுக்குக் குளிருமே'' என்கிறார்கள். " இல்லை. நான் நெருப்பின் பக்கம் இருந்து கொள்வேன். ஓய்வெடுங்கள். நாளைக்கு எல்லாம் நன்றாயிருக்கும்'' என்கிறார் சூசையப்பர்.

மாதா கண்ணை மூடுகிறார்கள். சூசையப்பர் முடிந்த அளவு சத்த மில்லாமல் ஒவ்வொரு குச்சியாக ஒடித்து நெருப்பில் இட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி நெருப்பு அணைந்து விடாமலும் குச்சிகள் நீடிக்கும்படியும் பார்த்துக் கொள்கிறார். நெருப்பின் வெளிச்சம் மட்டுமே அக்குகையில் உள்ளது.

...... சூசையப்பரும் கண்ணயர்கிறார். மாதா தலையை உயர்த்தி சுற்றுமுற்றும் பார்க்கிறார்கள். அசதியால் சூசையப்பர் உறங்கி விட்டதைக் கண்டு மாமரி புன்னகை செய்கிறார்கள். பின் ஒரு ரோஜாவில் அமரும் வண்ணத்துப் பூச்சி எழுப்பும் சத்தத்தைவிடக் குறைவான ஓசையுடன் எழுந்து அமர்கிறார்கள். முழங்காலிடு கிறார்கள். அவர்கள் வதனத்தில் மோட்சத்திற்குரிய புன்முறுவல் அரும்ப ஜெபிக்கிறார்கள். கரங்களை ஏறக்குறைய சிலுவை அடை யாளமாக, உள்ளங்கைகளை முன் நீட்டி மேலே நோக்கியபடி ஜெபிக்கிறார்கள். அதன்பின் சிதறிக் கிடக்கும் வைக்கோலில் முகம் படும்படி பணிந்து முன்னைவிட அதிக உருக்கமாக ஜெபிக் கிறார்கள். நீண்ட நேரம் ஜெபத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

சூசையப்பர் விழித்துக் கொள்கிறார். நெருப்பு ஏறக்குறைய அணைந்துவிட, அந்தத் தொழுவம் வெளிச்சமற்று இருக்கிறது. ஒரு கைப்பிடியளவு கூளத்தை அள்ளி நெருப்பில் அவர் போடவும் நெருப்பு பற்றிக்கொள்கிறது. பின் அவர் சிறு சுள்ளிகளையும், பிறகு விறகுக் குச்சிகளையும் போடுகிறார். குளிர் மிகக் கடுமையாயிருக் கிறது.

மாமரி தொடர்ந்து ஜெபிக்கிறார்கள். சூசையப்பர், தாம் உறங்கிவிடாதபடி நெருப்புப் பக்கத்தில் முழங்காலிட்டு ஜெபிக் கிறார். முகத்தை கைகளில் புதைத்தபடி ஜெபிக்கிறார். இடைக் கிடையே நெருப்பில் குச்சி எடுத்துப் போடுகிறார். பின் உருக்க மாக ஜெபிக்கிறார். எல்லாம் நிசப்தமாயிருக்கிறது.

கூரையிலுள்ள ஒரு வெடிப்பின் வழியாக நிலா வெளிச்சத்தில் ஒரு கதிர் உள்ளே பாய்கிறது. நிலா மேலே வர வர அது மாதாவை எட்டுகிறது. இப்பொழுது அவ்வொளி மாதாவின் தலைமேல் படிந்து தெளிந்த ஒளிவட்டம் போல் காணப்படுகிறது.

மாதா ஏதோ மோட்ச அழைப்பைக் கேட்டதுபோல் தலையை உயர்த்துகிறார்கள். பின் எழுந்திருந்து மறுபடியும் முழங்காலிடு கிறார்கள். ஓ! இந்த இடம் இப்பொழுது எவ்வளவு அழகாயிருக் கிறது! மாதா தலையை நிமிர்த்துகிறார்கள். அவர்களின் முகம் நிலா வெளிச்சத்தில் அழகுடன் பிரகாசிக்கிறது. அதில் படரும் ஒரு மோட்ச புன்னகையால் அம்முகம் தெய்வீகமாய் மாறுகிறது. அவர்கள் தேவனுடைய தாயாகப் போகும் ஒளி சூழும் அந்நேரத் தில், தான் காண்பதையும், கேட்பதையும், உணர்வதையும் அவர்கள் மாத்திரமே கூறக்கூடும். அவர்களைச் சுற்றிலும் ஒளி கூடிக்கொண்டே வருகிறது. அந்த ஒளி மோட்சத்திலிருந்து வருவது போலிருக்கிறது. இன்னும் மேலாக அது மாதாவிட மிருந்தே வருவதுபோல் தெரிகிறது.

மாதாவின் சரீரத்திலிருந்து வரும் அந்த ஒளி வரவர அதிக கூர்மை யான பிரகாசமடைகிறது. நிலா வெளிச்சத்தை அது உட்கொண்டு விட்டது. பரலோகத்திலிருந்து இறங்கக்கூடிய எல்லா ஒளியையும் மாதா தன்னிடம் இழுத்துக்கொள்வது போலிருக்கிறது. இப்போது மாதா ஒளியின் உறைவிடமாயிருக்கிறார்கள். இந்த ஒளியை அவர்கள் உலகிற்குத் தர வேண்டும்.

அக்குகையின் மேல் பாகத்தில் நிறைய வெடிப்புகளும் சிலந்திக் கூடுகளும் உள்ளன. உடைந்த காரைக் கட்டிகள் இயற் பியல் அற்புதமாய் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இருண்டு வெறுப்பூட்டும் புகைபடிந்த அந்தக் கூரை இப்பொழுது ஒரு அரச அவையின் மேற்கூரை போல் காணப்படுகிறது. ஒவ்வொரு கற்பாளமும் ஒரு வெள்ளிக்கட்டி போலும், ஒவ்வொரு வெடிப் பும் நீலமணிக் கல்லின் ஒளிப் பாய்ச்சல் போலும், ஒவ்வொரு சிலந்திக் கூடும் வெள்ளிக்கம்பிகளாலும் வைரங்களாலும் பின்னப் பட்ட குடை போலுமிருக்கிறது. முன்னிட்டியின் மேல் தட்டி லிருந்து நீண்டு தொங்கும் வைக்கோல் தாள்கள் சுத்தமான வெள்ளிக் கம்பிகளாக காற்றில் அசையும் முடியைப் போல் ஆடுகின்றன.

பிரகாசம் மேலும் மேலும் அதிகரிக்கிறது. தற்சமயம் அது கண் தாங்கக் கூடாததாகிறது. பரிசுத்த கன்னிகை அத்தனை ஒளியினுள் மறைந்து போகிறார்கள்... அதிலிருந்து தேவனுடைய தாய் வெளிப் படுகிறார்கள்.

ஆம், மீண்டும் என் கண்கள் ஒளியைத் தாங்கக் கூடுமாயிருந்த போது, பிறந்த பாலனைத் தன் கரங்களில் ஏந்தியவர்களாக மாதா வைக் காண்கிறேன். ஒரு சிறு குழந்தை, ரோஜா வண்ணத்தில், குண்டாக, சுறுசுறுப்பான ரோஜா மொட்டளவு சிறு கரங்களுடன், ஒரு ரோஜா மலரின் நடுவில் அடங்கிவிடக் கூடிய பாதங்களுடன், கால்களை உதைத்துக்கொண்டு, மெல்லிய நடுங்கும் குரலில் புதிதாய்ப் பிறந்த ஆட்டுக் குட்டியைப் போல் அழுது கொண்டு, முசுக்கொட்டைக் கனி போன்ற சிறு வாய் திறந்து, அச்செவ்வாயி னுள் அசைந்து நடுங்கும் நாவுடன் மாதாவின் கைக்குள் அடங்கும் உருண்டை சிரசுடன் காணப்படுகிறது. அச்சிறு இளம் பொன்னிற சிரசில் முடி இல்லாதது போலிருக்கின்றது. மாதா ஒரே சமயத்தில் அழுகிறார்கள், புன்னகை பூக்கிறார்கள். பாலனைப் பார்க்கிறார்கள். ஆராதிக்கிறார்கள். குனிந்து அவருடைய மாசற்ற சிரசிலல்ல, நெஞ்சின் நடுவில் முத்தமிடுகிறார்கள். அதனுள் நமக்காகத் துடிக் கிறது அவருடைய சின்ன இருதயம். ஒருநாள் அது காயப் படுத்தப்படும். அவருடைய தாய் தன் மாசற்ற முத்தத்தினால் அந்தக் காயத்திற்கு முன்கூட்டியே மருத்துவம் செய்கிறார்கள்.

பளிச்சிடும் வெளிச்சத்தால் கலைந்த எருது, குளம்புகளை உதைக் கும் ஓசையுடன் எழுந்து கூப்பிடுகிறது. கழுதையும் திரும்பிப் பார்த்து கத்துகிறது. ஒளியின் பிரகாசம்தான் அவைகளை எழுப்பி விட்டன. ஆயினும் அவை தங்கள் சார்பிலும் எல்லா விலங்கினங்கள் சார்பிலும் தங்கள் இரட்சகரை வரவேற்பதாகத் தோன்றுகின்றன.

சூசையப்பர், கரங்களால் முகத்தை மூடியபடி ஏறக்குறைய பரவசமான நிலையில் அந்தச் சூழலிலிருந்தே தனிப்பட்டவராய் உருக்கமாக ஜெபித்துக் கொண்டிருந்தவர், அவரும் விழித்து அவருடைய விரல் இடைகள் வழியாக அந்த அதிசய மான ஒளியைக் காண்கிறார். கையை அகற்றி தலையை நிமிர்த்தி சுற்றிலும் பார்க்கிறார். எழுந்து நிற்கிற எருது மாதாவை அவரிடமிருந்து மறைக்கிறது. ஆனால் மாதா : " சூசையே இங்கு வாருங்கள்" என்று அழைக்கிறார்கள்.

சூசையப்பர் உடனே செல்கிறார். பார்க்கிறார். மேரை மரியாதை உணர்வு மேலிட நின்றுவிடுகிறார். தாம் நின்ற இடத்திலேயே முழங்காலிடப் போகிறார். மாதா " வாருங்கள்'' என்று வற்புறுத்திக் கூப்பிடுகிறார்கள். தன் வலது கரத்தால் பாலனை நெஞ்சோடு அணைத்த படி இடது கையை வைக்கோலில் ஊன்றி எழுந்திருக்கிறார்கள். சூசையப்பரிடம் வருகிறார்கள். சூசையப்பர் பாலன் அருகில் போக விரும்பினாலும் மரியாதை குன்றிவிடக் கூடாதே என்ற மனப் போராட்டத்தில் தயங்குகிறார். இருவரும் வைக்கோல் படுக்கையருகே சந்திக்கிறார்கள். ஒருவர் ஒருவரைப் பார்க் கிறார்கள். மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்துகிறார்கள்.

"வாருங்கள், சேசுவை நாம் பிதாவுக்கு ஒப்புக்கொடுப்போம்” என்கிறார்கள் மாதா. சூசையப்பர் முழங்காலிடுகிறார். இரு மரத் தூண்களுக்கு மத்தியில் நின்றபடி மாதா திருப்பாலனை தன் கரங்களில் உயர்த்திப் பிடித்து : "சர்வேசுரா! இதோ நான் உமது திருச்சுதனின் சார்பில் இவ்வார்த்தைகளைப் பேசுகிறேன். இதோ உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற நான் இருக்கிறேன். மரியா வாகிய நானும் என் மணாளரான சூசையும் அவரோடிருக்கிறோம். ஆண்டவரே! இதோ உம் ஊழியர்கள் நாங்கள். எப்பொழுதும், ஒவ்வொரு மணி நேரத்திலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உமது மகிமைக்காகவும் உமது அன்பிற்காகவுமே உம் சித்தத்தை நாங்கள் நிறைவேற்றுவோமாக!" என்று சொல்கிறார்கள்.

அதன்பின் மாதா குனிந்து : "சூசையே, பாலனை வாங்குங்கள்'' என்று கூறி சூசையப்பரிடம் திருப்பாலனைக் கொடுக்கிறார்கள். அதற்கு சூசையப்பர்: "என்ன! என்னிடமா? ஓ! வேண்டாம்! நான் தகுதியற்றவன்'' என்று மறுக்கிறார். கடவுளைத் தொடுவது பற்றி அவர் ஏதும் பேச இயலாமல் வாயடைத்து நிற்கிறார்.

ஆனால் மாதா புன்னகையுடன் : "நீங்கள் தகுதியுடையவர் தான். உங்களைவிடத் தகுதி பெற்றவர்கள் வேறு யாருமில்லை. அதனால் தான் தேவன் உங்களைத் தெரிந்து கொண்டார். பாலனை ஏந்திக் கொள்ளுங்கள். நான் துணிகளை எடுக்கிறேன்'' என்று கூறி சேசுவை அவரிடம் கொடுக்கிறார்கள்.

சூசையப்பர் சேசுபாலனை தம் கைகளை நீட்டி அன்போடு வாங்கு கிறார். பாலனோ குளிர் தாங்கமாட்டாமல் வீறிட்டு அழுகிறார். சூசையப்பர் அவரைக் கையில் ஏந்தி தம்மிடமிருந்து தூரத்தில் வைக்கும் கருத்தை மாற்றி, அவரைத் தம் மார்போடணைத்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே : "ஓ ஆண்டவரே! என் தேவனே!'' என்கிறார். திவ்விய பாலனின் பாதங்களை முத்தமிடுகிறார். பாதங்கள் மிகக் குளிர்ந்திருப்பதை உணர்கிறார். அப்படியே தரை யில் அமர்ந்து பாலனைத் தம்மோடு அரவணைத்து, மேற்போர்வையால் அத்திருப்பாதங்களை நன்றாக மூடி இரவின் கொடிய குளிர் காற்று தாக்காதபடி செய்கிறார். நெருப்புப் பக்கம் போகலாமென் றால் வாசலிலிருந்து ஒரு குளிர்வாடை வீசுகிறது. இருக்கிற இடத் தில் இருந்துவிடுவதே நல்லதாகத் தெரிகிறது. இல்லை, குளிர் காற்றைத் தடை செய்து உஷ்ணம் தருகிற இரண்டு மிருகங்களுக் கிடையில் போவது தாவிளை. அப்படியே எருதுக்கும், கழுதைக் கும் நடுவே போகிறார். வாசலுக்கு முதுகைத் திருப்பி, பாலனுக்கு தம் உடலால் பாதுகாப்பளித்தபடி குனிந்திருக்கிறார்.....

மாதா சிறு பெட்டிக்குள்ளிருந்து சில துண்டுகளையும் கட்டுத் துகிலையும் எடுக்கிறார்கள். பின் நெருப்படிக்குப் போய் அவற்றை உஷ்ணப்படுத்துகிறார்கள். பின் சூசையிடம் வந்து வெதுவெதுப் பான துகில்களால் குழந்தையைச் சுற்றி, தன் மேல் வஸ்திரத்தால் அவருடைய தலையையும் மூடியபின் : "பிள்ளையை எங்கே கிடத்த லாம்?" என்று கேட்கிறார்கள்.

சூசையப்பர் சுற்றிலும் பார்த்து சிந்தித்து ... "பொறுங்கள். இந்த மிருகங்களையும் வைக்கோலையும் இங்கே கொண்டு வருவோம். மேல் தட்டிலுள்ள வைக்கோலை இழுத்து இங்கே ஒழுங்கு செய்யலாம். பக்கவாட்டில் இருக்கும் மரப்பலகை அவரை காற்றுப்படாமல் பாதுகாக்கும். வைக்கோல் தலையணையாக இருக் கும். எருது தன் மூச்சால் கொஞ்சம் உஷ்ணம் தரும். கழுதையை விட எருது நல்லது. அதுதான் பொறுமையாயும் அமைதியாயும் இருக்கிறது'' என்று சொல்லி அவற்றை சுறுசுறுப்புடன் செய்கிறார். மாதா பாலனை அரவணைத்துத் தாலாட்டுகிறார்கள். தன் கன்னத்தை அவர் தலையில் வைத்து குளிரைப் போக்க முயல்கிறார்கள்.

சூசையப்பர் நெருப்பை நன்றாக மூட்டி வைக்கோலை அதில் காட்டி உஷ்ணமாக்குகிறார். போதிய அளவு சேர்ந்ததும் அதை ஒரு மெத்தை போல் பரப்பி, பின் அதை முன்னிட்டியில் போட்டு தொட்டில் போலாக்குகிறார். “இனி ஒரு போர்வை வேண்டும். வைக்கோல் குத்தும். அவரை மூடவும் வேண்டும்'' என்கிறார். "என் மேல் வஸ்திரம் இதோ" என்று மாதா சொல்ல, ''உங்களுக்குக் குளிருமே" என்கிறார் சூசையப்பர்.

''பரவாயில்லை. எனக்குக் குளிராகவே இல்லை. போர்வை முரடா யிருக்கிறது. மேல் வஸ்திரம் மிருதுவாயும் உஷ்ணமாயுமிருக்கிறது. அவர் துன்பப்பட விடக்கூடாது.''

சூசையப்பர் அந்த இருண்ட நீல மெல்லிய கம்பளி மேல் வஸ்திரத்தை எடுத்து, நான்காக மடித்து வைக்கோலில் பரப்பி, ஒரு பகுதியை முன்னிட்டிக்கு வெளியே நீட்டி விடுகிறார். இரட்சகரின் முதல் படுக்கை தயாராயிற்று.

மாதா மெல்ல நடந்து வந்து பாலனை அதில் கிடத்தி நீண்டு தொங்கும் பாகத்தால் அவரை மூடி, தலையைச் சுற்றிலும் பொதிந்து வைக்கிறார்கள். அவரின் முகம் மட்டுமே தெரிகிறது. துணியின் உஷ்ணம் அவருடைய அழுகையை நிறுத்திவிட்டது. அவருக்கு உறக்கம் வருகிறது. சேசு பாலனின் முதல் உறக்கத்தை அவர்கள் இருவரும் மிக்க மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.