கர்த்தர் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை தியானிப்போமாக.

மாதாவும் சூசையப்பரும் ஒரு எளிமையான வீட்டிலிருந்து புறப்படுவதைக் காண்கிறேன். இளம் தாய் ஒரு வீட்டின் வெளிப் புறமாய் அமைந்த படிக்கட்டில், வெண்துகிலால் பொதியப்பட்ட தன் குழந்தையைக் கைகளில் ஏந்தி, கீழே இறங்கி வருகிறார்கள்.

மாதா வெளிறி, இளம் பொன் நிறத்தில் காணப்படுகிறார்கள். சுறுசுறுப்பாகவும், கருணையோடும் நடந்துகொள்கிறார்கள். வெள்ளை உடையணிந்து, இளநீல மேல் வஸ்திரம் தரித்து, தலையில் வெண் துகில் முக்காடிட்டிருக்கிறார்கள். தன் பிள்ளையை வெகு கவனமாய் ஏந்தி வருகிறார்கள்.

படிக்கட்டின் அடியில் சூசையப்பர் ஒரு கோவேறு கழுதை யுடன் நிற்கிறார். அவர் வெளிறிய பழுப்பு நிற ஆடையணிந்திருக் கிறார். அவருடைய ஆடையும் மேல் வஸ்திரமும் அதே நிறத்தில் உள்ளன. மாதாவைப் பார்த்து அவர் புன்னகை செய்கிறார். மாதா கழுதையின் பக்கம் வந்ததும், அவர் அதன் கடிவாளத்தை இடது கையில் போட்டுக்கொண்டு அமைதியாக உறங்கும் திருப்பாலனை ஏந்திக்கொள்கிறார். அதனால் மாதா கழுதையின் மீது வசதியாக அமர்ந்து கொள்ள முடிகிறது. பின் சேசுவை மாதாவிடம் திருப்பிக் கொடுக்கிறார். அவர்கள் புறப்படுகிறார்கள். சூசையப்பர் கழுதை யின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு மாதாவின் பக்கமாய் நடந்து செல்கிறார். கழுதை இடறாமல் நேராகப் போகும்படி கவனிக்கிறார். மாதா தன் மடிமேல் சேசுவை வைத்திருக்கிறார்கள். அவருக்குக் குளிராதபடி தன் மேல் வஸ்திர ஓரத்தை அவர் மேல் போர்த்துகிறார்கள்.

அங்கே ஒரு கதவின் பக்கமாக வாகனக் கழுதைகளின் தொழுவம் ஒன்று உள்ளது. மிருகங்களைக் கட்ட வளையங்கள் பொருத்தப்பட்ட கழைகளும் உள்ளன. மாதா அங்கே கழுதையை விட்டு இறங்குகிறார்கள்.

அப்போது அங்கு வருகிற ஓர் ஆளிடம் சூசையப்பர் சில நாணயங்களைக் கொடுக்கிறார். கொஞ்சம் வைக்கோல் வாங்கி கழுதைக்குப் போட்டு ஒரு ஓரத்திலுள்ள கரடான ஒரு கிணற்று வாளியில் தண்ணீர் இறைத்து தண்ணீரும் காட்டுகிறார். பின் மாதாவும் சூசையப்பரும் தேவாலய அடைப்பிற்குள் செல் கிறார்கள்.

முதலில் அவர்கள், வியாபாரிகள் இருக்கிற வில்வளைவு நடை பாதைக்குப் போகிறார்கள். ஆட்டுக்குட்டிகள் விற்பவர்களும் புறா விற்பவர்களும் நாணய மாற்றுக்காரர்களும் அங்கே இருக் கிறார்கள். சூசையப்பர் இரண்டு வெள்ளைப் புறாக்களை வாங்கு கிறார்...

பின் அவர்கள் ஒரு பக்கமாக இருக்கிற எட்டுப் படிகள் கொண்ட வாசலுக்கு வருகிறார்கள். அநேகமாக எல்லா வாசல்களும் இப்படித்தான் உள்ளன. காரணம் தேவாலயத்தின் மத்திய பாகம் சூழ இருக்கும் தளத்திலிருந்து உயர்ந்த மேட்டில் அமைக்கப்பட் டுள்ளது. அந்த வாசல் ஒரு பெரிய அறைக்குள் இருக்கிறது. இந்த அறை பெரிதாக இருக்கிறது. அலங்காரமாகவும் உள்ளது. அதிலே வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் பீடங்கள் போன்ற இரண்டு அமைப்புகள் உள்ளன. இரு நீண்ட சதுர அமைப்புகள். அவற்றின் உட்பாகம் சில சென்டி மீட்டர்கள் குழிவாக்கப்பட்டு, குழிந்த பாத்திரம் போலிருக்கிறது.

ஒரு குரு அவர்களிடம் வருகிறார். மாதா அவ்விரண்டு சின்னப் புறாக்களையும் அவரிடம் கொடுக்கிறார்கள். குரு மாதா மீது தண்ணீர் தெளிப்பது பக்கவாட்டில் தெரிகிறது. அது தண்ணீ ராகவே இருக்க வேண்டும். ஏனென்றால் அது மாதாவின் ஆடை மேல் கறை எதுவும் ஏற்படுத்தவில்லை. குரு புறாக்களுடன் கொஞ்சம் காணிக்கைப் பணமும் கொடுத்தார்கள். அவர்கள் குருவுடன் ஆலயத்திற்குட் செல்கிறார்கள்.

அது மிகவும் அலங்கரிக்கப்பட்ட இடமாயிருக்கிறது. தூண் களிலும் சுவர்களிலும் உட்புறக் கூரையிலும் சம்மனசுக்களின் தலைகளும் குருத்துக்களும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. நீண்ட பலகணிகள் வழியாக வெளிச்சம் வருகிறது.

மரியா முன்னே செல்கிறார்கள். பின் நின்றுவிடுகிறார்கள். அவர்கள் நிற்குமிடத்திலிருந்து சில மீட்டர் தள்ளி மேலும் படிகள் ஏறுகின்றன. அதன் உச்சியில் ஒரு பீடம் போன்ற அமைப்பு உள்ளது. அதற்கப்பால் இன்னொரு அமைப்பு காணப்படுகிறது. அவர்கள் இன்னும் தேவாலய ஸ்தலத்தைச் சுற்றிய இடத்தில் தான் இருக்கிறார்கள். உண்மையான தேவாலய ஸ்தலம் என்பது, அதைக் கடந்து குருக்களைத் தவிர வேறு யாரும் போகக் கூடாத இடம். நான் தேவாலயம் என்று நினைத்தது தேவாலயத்தை மூன்று பக்கங்களிலும் சூழ்ந்திருக்கிற அடைப்பட்ட மூன்றில்களில் ஒன்று தான். தேவாலயத்திற்குள்தான் திருப்பேழை வைக்கப்பட்டுள்ளது.

சேசு பாலன் விழித்துக் கொள்கிறார். தம் மாசற்ற விழிகளை குரு பக்கமாகத் திருப்புகிறார். சில நாள்களே ஆன சிசுவின் அதிசயிக் கும் பார்வை. அவரை மாதா குருவிடம் கொடுக்கிறார்கள். குரு பாலனை வாங்கி தேவாலயத்தை நோக்கி உயர்த்துகிறார். சேசுவின் கரங்கள் முழுவதும் நீண்டிருக்கின்றன. படிகளின் உச்சியில் பீடம் போலுள்ள அமைப்பிற்கு எதிராக குரு நிற்கிறார். சடங்கு முடிந்தது. குழந்தையைத் தாயிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு குரு செல்கிறார்.

ஒரு சிறு கூட்டம் இதைப் பார்த்தபடி நிற்கிறது. அவர்கள் மத்தியிலிருந்து மூப்பால் குறுகி நடக்க சிரமப்படும் ஒருவர் கம்பு ஊன்றியபடி வருகிறார். அவருக்கு எண்பது வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அவர் மாதாவிடம் போய் திருப்பாலனைத் தம்மிடம் தரும்படி கேட்கிறார். மாதா மகிழ்ச்சியோடு கொடுக்கிறார்கள்.

சிமியோன் குருவல்ல, ஒரு சாதாரண விசுவாசிதான். அவர் சேசு பாலனை வாங்கி முத்தமிடுகிறார். பாலருந்தும் சிசுக்கள் சிரிப்பது போலவே சேசு குழந்தை அவரைப் பார்த்துச் சிரிக்கிறார். வயோதிபரை துருவிப் பார்ப்பது போல் காணப்படுகிறார். சிமியோன் ஒரே சமயத்தில் அழுகையும் மகிழ்ச்சியும் கொள்ள, பிரகாசிக்கிற அவருடைய கண்ணீர் , அவர் முகத்தின் திரைகள் வழியாக உருண்டு தாடியில் வழிந்தோடுகிறது. சேசு பாலன் தம் சிறு கரங்களை அவற்றை நோக்கி நீட்டுகிறார். அவர் சேசுதான். ஆயினும் இன்னும் அவர் ஒரு சிசுவே. தமக்கு முன் அசைகிற எதுவும் அவர் கவனத்தை ஈர்க்கிறது. அதைப் பற்றிக்கொள்ளவும் அது என்னவென்று பார்க்கவும் அவர் ஆவல் கொள்கிறார். மாதாவும் சூசையப்பரும் மற்ற அனைவரும் அவரைப் பார்த்துச் சிரிக் கிறார்கள். அவருடைய அழகை மற்றவர்கள் பாராட்டு கிறார்கள்.

மூப்பரான சிமியோன் தம்மால் முடிந்த வரை, சேசு பாலனை மேல்நோக்கி உயர்த்தி, "ஆண்டவரே! உம்முடைய வாக்கியத் தின்படியே உம்முடைய தாசனை இப்பொழுது சமாதானத்தோடு போக விடுவீர்; ஏனெனில் தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஏற்படுத்திய உம்முடைய இரட்சிப்பை என் கண்கள் கண்டு கொண்டன. அது புறஜாதிகளைப் பிரகாசிப்பிக்கிற ஒளியாகவும், உமது மக்களினமாகிய இஸ்ராயேலருக்கு மகிமையாகவும் இருக் கிறது" என்று கூறி சர்வேசுரனைப் போற்றித் துதிக்கிறார். அதன்பின் அவர் மாதாவைப் பார்த்து : "அம்மா! இதோ, உம்முடைய இந்த திவ்ய பாலகன் இஸ்ராயேலில் அநேகருக்குக் கேடாகவும் உயிர்ப் பாகவும், விரோதிக்கப்படும் குறியாகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். உம்முடைய ஆத்துமத்தையும் ஓர் வாள் ஊடுருவும்; இதனாலே அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படும்" என்று அறிவிக் கிறார். அவரது வார்த்தைகளைக் கேட்டு மாதா ஆச்சரியப்படுகிறார்கள், உருகுகிறார்கள், முதலில் புன்னகையும் செய் கிறார்கள்.

ஆனால் சிமியோன் சேசுவின் துயரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது மாதாவின் புன்னகை மறைகிறது. மாதாவுக்குத் தெரியும் தான். ஆயினும் அந்த சொல் அவர்கள் ஆன்மாவை ஊடுருவு கிறது. ஆறுதலுக்காக அவர்கள் சூசையப்பரின் அருகில் செல் கிறார்கள். சேசுவை ஆர்வமாய் அரவணைத்துக் கொள்கிறார்கள். பானுவேலின் மகளாகிய அன்னாளின் வார்த்தைகளை தாகமுள்ள ஆன்மாவைப்போல் பருகுகிறார்கள். அன்னாள் ஒரு ஸ்திரீ என்பதி னிமித்தம் மாதாவின் துயரங்களுக்கு இரக்கப்பட்டு, அந்தத் துயர நேரம் பரமபிதாவினால் இதமாக்கப்படும் என்று வாக்களிக்கிறாள்.