சேசுநாதர் சுவாமி சிலுவை சுமந்துகொண்டு போனதை தியானிப்போமாக.

சேசுவைக் கொலைப்படுத்தும் அலுவல் ஒப்படைக்கப்பட்டுள்ள லோஞ்ஜினுஸ் கட்டளை கொடுக்கிறான். சேசு தம் சிலுவையைப் பெற்றுக்கொண்டு புறப்படுவதற்கு அவரை இன்னும் அவன் வெளியே தெருவிற்குக் கொண்டு வரவில்லை. அவன் இன்னொரு படை வீரனுடன் சேசுவை அணுகி அவருக்குத் தாக சாந்திக்காக பானம் வழங்குகிறான். இளஞ்சிவப்பு மஞ்சளான ஒரு பானத்தை ஒரு இராணுவ பருகுகலத்திலிருந்து ஊற்றிக் கொடுத்து : "இது உமக்கு நல்லது. நீர் தாகமாயிருக்க வேண்டுமே. வெளியே வெயிலாயிருக் கிறது. இடமும் தூரம்'' என்கிறான்.

சேசு அதை மறுக்கவில்லை. அந்தப் பானத்தில் ஒரு மிடறு பருகு கிறார். அவரே அதை வாங்கிப் பருக முடிகிறது. ஏனென்றால் அவரு டைய கரங்கள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. அவர் கையில் கோலும் இல்லை. சிவப்புச் சால்வையும் அகற்றப்பட்டிருந்தது. அந்த நல்ல குளிர்ந்த பானம் அவரது காய்ச்சலுக்கு ஒரு பெரும் ஆறுதலாக இருந் திருக்குமென்றாலும், அதற்கு மேல் பருக அவர் மறுத்து விட்டார். வெளிறிய அவருடைய கன்னங்களில் சிவப்புக் கோடுகளாகவும் உதடுகளின் வறட்சியிலும் அந்தக் காய்ச்சல் காணப்படுகிறது.

இரு கள்வர்களும், ஒவ்வொருவனும் பத்து படை வீரர்கள் சூழ வந்து சேருகிறார்கள். புறப்பட நேரமாயிற்று. இறுதிக் கட்டளைகளைக் கொடுக்கிறான் லோஞ்ஜினுஸ்.

நூறு போர்ச் சிப்பாய்கள் இரு வரிசைகளாக ஒரு சேவகனுக்கும் அடுத்தவனுக்குமிடையில் சுமார் மூன்று மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்படுகிறார்கள். அப்படியே அவர்கள் சதுக்கத்துக்கு வருகிறார்கள். அங்கே வேறு நூறு சேவகர்கள் சதுர வடிவில் ஆள் தடுப்பு வேலியாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் - கூட்டத்தைப் பின்னால் தள்ளும்படி. ஊர்வலத்தை ஜனக் கூட்டம் தடை செய்யாமலிருக்க இந்த ஏற்பாடு. சதுக்கத்தில் ஏற்கெனவே பத்துப் பேர் கொண்ட குதிரைப் படை நிற்கிறது. படையில் பதவி வகிக்காத, உரோமைச் சின்னம் தாங்கும் ஓர் இளம் ஆணையன் அதற்குத் தலைமை தாங்குகிறான். செந்தூரிய னான லோஞ்ஜினுஸ் கறுப்புக் குதிரையின் கடிவாளம் ஒரு காலாட்படை வீரனின் கையில் உள்ளது. லோஞ்ஜினுஸ் தன் குதிரையில் ஏறி குதிரைப் படையின் பதினொரு பேருக்கும் முன்னால் சுமார் இரண்டு மீட்டர் தூரத்தில் தன் இடத்தில் போய் நிற்கிறான்.

சிலுவைகள் கொண்டு வரப்படுகின்றன. இரண்டு கள்வரின் சிலுவைகளும் குட்டையானவை. சேசுவின் சிலுவை அதிக நீளமா யிருக்கிறது. அதன் நேர்கம்பு நான்கு மீட்டர் நீளத்துக்குக் குறையாது.

சிலுவையை அவர்கள் கொண்டு வந்தபோதே அது முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது. அது உறுதியாக இருக்கிறது. சிலுவையின் கரங்கள் பொருந்தும் இடத்தில் நன்றாக துளைப் பொருத்தம் செய்யப் பட்டு, ஆணிகளாலும், திருகு தளையாலும் இறுக்கப்பட்டுள்ளது.

சேசுவிடம் சிலுவையைக் கொடுப்பதற்கு முன், "சேசு நசரேன் யூதர்களின் இராஜா" என்று எழுதப்பட்ட பலகையை அவருடைய கழுத்தில் கட்டுகின்றனர். அதன் கயிறு சேசுவின் முள்முடியில் சிக்கிக் கொள்கிறது. அதனால் முள்முடி அசைக்கப்பட்டு, முன்பு முட்கள் கீறாத இடங்கள் கீறப்படுகின்றன. புது இடங்களில் முட்கள் இறங்கு கின்றன. ஆண்டவருக்குப் புது வேதனைகளைத் தருகின்றன. மீண்டும் இரத்தம் பீறிட்டுப் பாய்கிறது.

எல்லாம் தயாராகி விட, நடக்கும்படி லோஞ்ஜினுஸ் உத்தரவிடு கிறான். "நசரேயன் முதலில். அதற்குப் பின் இரு கள்வர்களும். பத்து சிப்பாய் கொண்ட அணி ஒவ்வொருவரைச் சுற்றியும். மற்ற எழுபது பேரும் இரு பக்கங்களிலும் - கூடுதல் காவலராக. தீர்ப்பிடப்பட்ட வர்கள் மரணமடையக் கூடிய வகையில் தாக்கப்பட அனுமதிக் கிறவர்கள் அதற்குப் பொறுப்பாளிகளாவார்” என்று கூறுகிறான்.

முகப்பு மண்டபத்திலிருந்து சதுக்கத்துக்கு இறங்குகிற மூன்று படிகளிலும் சேசு இறங்கி வருகிறார். அவர் மிக மிகப் பலவீனமாக இருக்கிறார் என்பது உடனே தெரிந்துவிடுகிறது. ரணங்களால் நிரம்பி யிருக்கிற அவரது திருத்தோளின் மீது பாரமாய்ப் படிந்திருக்கிற சிலுவையும், கழுத்தில் அறுத்தபடி முன்னால் தொங்கி ஆடும் எழுத்துப் பலகையும், படிகளிலும், நிரப்பில்லாத தரையிலும் பட்டு எவ்வுகிற சிலுவையின் நெடுங்கோலும் தடை செய்வதால், சேசு இறங்கி வரும்போது ஆடி அசைந்து தள்ளாடுகிறார்.

லோஞ்ஜினுஸ் தன் குதிரையைச் செலுத்த, ஊர்வலம் மெல்ல நகர்கிறது. செந்தூரியன், சேசு எவ்வளவு தூரம் தாங்குவார் என்று ஐயப்பட்டதால் கொல்கொத்தாவுக்கு சீக்கிரம் போய்ச் சேர குறுக்குப் பாதையில் செல்ல எண்ணுகிறான். ஆனால் கட்டுப்பாடற்ற கூட்டம் அதை விரும்பவில்லை. அவர்களில் அதிக தந்திரமுடைய வர்கள் முன்கூட்டி ஓடிச் சென்று பாதை பிரிகிற சந்தியில் நின்று கொள்கிறார்கள். பாதையின் ஒரு பிரிவு மதில்களை நோக்கியும், மற்றொரு பிரிவு பட்டணத்தை நோக்கியும் செல்கிறது. லோஞ்ஜினுஸ் மதில்கள் பக்கம் போகிற பிரிவில் ஊர்வலத்தைச் செலுத்தத் தொடங்கியபோது அவர்கள் கூச்சலிட்டு : "நீர் இப்படிச் செய்யக் கூடாது. தீர்ப்பிடப்பட்டவர்கள் தாங்கள் குற்றம் புரிந்த பட்டணத்தில் காட்டப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது'' என்று கத்துகிறார்கள். பின் வரிசைகளில் இருந்த யூதர்கள், முன்னால் போகிறவர்கள் தங்களின் உரிமையைப் பறிப்பதாகக் கருதி தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து கூச்சலிடுகிறார்கள்.

அமைதியைக் காக்க லோஞ்ஜினுஸ் பட்டணத்தை நோக்கிச் செல்லும் பாதை வழியே திரும்புகிறான். பெருமூச்சு வாங்கியபடியே சேசு நடக்கிறார். தரையில் காணப்படும் ஒவ்வொரு குண்டும் குழியும் அவருடைய தள்ளாடும் பாதங்களுக்கு ஒரு கண்ணி போலிருக்கிறது. காயங்களால் நிறைந்த அவருடைய திருத்தோள்களுக்கு வதைப்பாக இருக்கிறது. முள்முடி சூட்டப்பட்ட அவரது திருச்சிரசு சித்திர வதைப்படுகிறது. அனலாயிருக்கிற வெயிலும் அவ்வாதனைக்குக் காரணமாகிறது. அவ்வப்போது சூரியன் கனத்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்தாலும் அது நேரே உச்சியில் பிரகாசிப்பதால் வெயில் எரியத்தான் செய்கிறது. சேசு களைப்பாலும் காய்ச்சலாலும் உஷ்ணத்தாலும் இறுக்கமுற்றிருக்கிறார். வெயிலும், கூச்சல்களும் அவருக்குக் கொடிய வேதனையாயிருக்கின்றன. இவ்வளவு கரடான கூச்சல்களைக் கேட்காமலிருக்க அவரால் தம் காதுகளை மூட முடியவில்லை. ஆனால் பாதை சூரிய ஒளியில் மினுங்குவதைப் பாராம் லிருக்க கண்களைப் பாதி மூடிக்கொள்கிறார். ஆயினும் கண்களை அவர் திறக்காமலும் இருக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் கற்களிலும் குழிகளிலும் இடறுகிறார். ஒவ்வொரு இடறுதலும் சிலுவையைக் குலுக்குகிறது. முள்முடியுடன் மோத வைக்கிறது. திருத்தோளுடன் உராயச் செய்து காயங்களை அகலப்படுத்தி வேதனையை அதிகரிக்கச் செய்கிறது.

இப்போது யூதர்கள் நேரடியாக சேசுவைத் தாக்க முடியவில்லை. ஆயினும் அவ்வப்போது சில கற்கள், தடிகள் அவர் மேல் வீசப்படு கின்றன. ஜனக் கும்பல் கூடி நிற்கும் சதுக்கங்களிலிருந்து கற்கள் வீசப் படுகின்றன. ஒடுக்கமான தெருக்களின் வளைவுத் திருப்பங்களில் சேசு மேல் கம்பால் அடி விழுகிறது... அந்த இடங்களில் ஊர்வலம் மெல்லத் தான் போக முடிகிறது. அப்போது, உரோமையரின் ஈட்டிகளுக்கும் சவால் கொடுக்கும் சிலர், வதைக்கப்பட்டு, வேதனையின் சிகரமாக இருக்கிற சேசுவின் வேதனையை முழுமை பெறச் செய்ய எப்போதும் முன்வருகிறார்கள்.

போர்ச் சேவகர் தங்களால் முடிந்த வரை சேசுவைப் பாதுகாக் கிறார்கள். ஆனால் அப்படிப் பாதுகாக்க முயலும் போது அவர்களா லும் ஆண்டவர் மேல் அடி விழுகிறது. ஏனென்றால் அவர்களுடைய நீண்ட ஈட்டிகளை அவ்வளவு குறுகலான தெருக்களில் வீசும்போது அவை அவர்மேல் தாக்குகின்றன. ஊர்வலம் ஒரு குறிப்பட்ட இடத் திற்கு வந்ததும் போர்ச் சேவகர்கள் கூச்சல்களையும், எச்சரிப்புகளையும் சட்டை பண்ணாமல் திடீரென திசையை மாற்றி நேராக மதில்களை நோக்கி கீழிறங்கிப் போகிற பாதையில் அதைச் செலுத்துகிறார்கள். கொலைக்களத்திற்கு சரியான குறுக்குப் பாதை அது. சேசு மேலும் மேலும் மூச்சுத் திணறுகிறார். அவரது முகத்திலிருந்து வடியும் வியர்வை முள்முடியின் காயங்களிலிருந்து ஒழுகும் இரத்தத்துடன் கலந்து வடிகிறது. ஈரமாயிருக்கும் அவர் முகத்தில் புழுதி ஒட்டிக் கொண்டு அதில் ஒருவிதமான கறையாகப் படிகிறது. காரணம் இப்போது காற்றும் சுழன்று வீச, தூசி மேலே எழுப்பப்பட்டு பின் கண்களுக்குள்ளும் தொண்டைக்குள்ளும் புகுகிறது .....

நியாயவாத வாசலின் அருகே அநேக மக்கள் கூடி நிற்கிறார்கள். அதாவது, முன்யோசனையோடு, நின்று பார்ப்பதற்கு நேரத்தோடே வந்து நல்ல இடமாக பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த இடத்திற்கு சேசு வந்து சேருமுன் அவர் கீழே விழப் பார்த்தார். ஒரு போர்வீரன் சடாரென்று அங்கு வந்து அவர் கீழே விழாமல் காப்பாற்றுகிறான். அவன் மேல் சேசு சாய்ந்ததால் தரையில் விழாமல் தப்பினார்.

அந்த வாசலுக்கு அப்புறமாக ஒரு சிற்றோடையும் ஒரு சின்னப் பாலமும் உள்ளன. அதிலே போட்டிருக்கிற சமமில்லாத பலகைகளில் நடப்பது சேசுவுக்கு வேறு விதமான களைப்பைக் கொடுக்கிறது. ஏனென்றால் சிலுவையின் நெடுங்கோல் அதிலே பட்டு கூடுதலாக எவ்வுகிறது. மேலும் அங்கே யூதர்களுக்கு அவர் மேல் வீச நிறைய கற்கள் கிடைக்கின்றன. ஓடையின் கற்கள் பறந்து வந்து அவரைத் தாக்குகின்றன....

கல்வாரியின் ஏற்றம் தொடங்குகிறது. சாலை வெறுமையாயிருக்கிறது. ஒரு சிறு நிழல் கூட இல்லை. சாலையில் பதிக்கப்பட்டுள்ள கற்கள் நிரப்பில்லாமல் உள்ளன. சாலையும் நேரே மேலே ஏறுகிறது. கல்வாரி நிச்சயமாக ஒரு மலையல்ல. அது ஒரு குன்று... நல்ல ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் இருப்பவனுக்கு அது அவ்வளவு உயரமில்லைதான். ஆனால் பலவீனப்பட்ட ஒரு இருதயம் அது உயரமா இல்லையா என்று உணர்ந்துகொள்ளும்.....

ஆகவே மேலே ஏறுவதில் சேசு மிகவும் அதிகமாக வேதனைப்படு கிறார். சிலுவையும் மிக நீளமாயிருந்தால் மிகவும் பாரமாக இருந் திருக்க வேண்டும். பாதையிலே ஒரு கல் நிமிர்ந்து நிற்கிறது. அவர் மிகுந்த சோர்வடைந்துள்ளதால் பாதங்களை ஒரு சிறு அளவுதான் உயர்த்த அவரால் முடிகிறது. அதனால் அவர் இடறி, வலது முட்டு ஊன்றிக் கீழே விழுகிறார். இடது கையால் தம்மையே பிடித்துக் கொள்கிறார். ஜனக் கும்பல் அக்களிப்பால் ஊளையிடுகிறது.

சேசு மீண்டும் எழுகிறார். தளர்ந்து போய் குனிந்து மேலும் மேலும் மூச்சு வாங்கியபடி, இறுக்கமுற்று காய்ச்சலால் தகித்து முன்செல் கிறார். அவருடைய கழுத்திலிருந்து முன்னால் தொங்குகிற தீர்ப்புப் பலகை அவருடைய பார்வையை மறைக்கிறது. அவருடைய அங்கி யின் முன்பாகம், இப்பொழுது அவர் குனிந்தபடி நடப்பதால் காலுக் கடியில் அகப்பட்டு அவரை நடக்க விடாமல் தடுக்கிறது. மறுபடி யும் அவர் இடறி இரண்டு முழங்காலில் கீழே விழுகிறார். ஏற்கனவே காயம்பட்ட அந்த முழங்கால்களில் மறுபடியும் காயம் ஏற்படுகிறது.

சிலுவை அவரது பிடியிலிருந்து விலகி, முதுகில் வலுவாகத் தாக்கி தரையில் விழுகிறது. அவரோ குனிந்து அதை எடுத்து திரும்ப வும் தோளில் வைக்க மிக்க வேதனையோடு சிரமப்படுகிறார். அப்படி அவர் செய்யும் போது, அவரது வலது தோளில் சிலுவை அழுத்தி தேய்த்த தால் ஏற்பட்ட காயத்தைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அந்தக் காயம் கசையடியால் ஏற்பட்ட பல வடுக்களையும் திறந்து எல்லாம் சேர்ந்து ஒரே காயமாகி விட்டது. இரத்தமும், நிணநீரும் சவ்வூடு கசிவாக வெளிவருகின்றன. அதனால் அவரது வெள்ளை உள் அங்கி சிவப்பாகக் கறைபட்டிருக்கிறது. அவர் அவ்வளவு மோசமாய்க் கீழே விழுந்தது பற்றி சந்தோஷத்தால் கைகொட்டுகிறது ஜனக்கூட்டம்...

லோஞ்ஜினுஸ் அவசரப்படுத்துகிறான். போர்ச் சேவகர் தங்கள் உடைவாளின் தட்டைப் பகுதியால் சேசுவைத் தள்ளி முன்செல்லச் செய்கிறார்கள். அவர் அப்படி உந்தப்பட்டாலும் மிக மெதுவாகவே நகர்கிறார். மயக்கமுற்றவர் போல் தள்ளாடுகிறார். சாலையில் அங்கு மிங்கும் அலைந்து காவலர் வரிசையில் மோதுகிறார்.

சில இடையர்கள் சில இடிபாடுகளுக்குப் பின்னாலிருந்து வருவதைக் காண்கிறேன். அவர்கள் ஆறுதலற்றவர்களாய்ப் புழுதி படிந்து கந்தைகள் அணிந்து காணப்படுகிறார்கள். தங்கள் பார்வை யின் சக்தியால் சேசுவின் கவனத்தை ஈர்க்கிறார்கள். அவர் தம் திருச் சிரசைத் திருப்பி அவர்களைக் காண்கிறார்..... அவர்களின் முகங்களை சம்மனசுக்களின் முகங்களைப் போல் கண்ணெடுக்காமல் நோக்கு கிறார். அதிலே தம் தாகத்தைத் தணித்துக் கொள்பவர் போலவும், அவர்களின் கண்ணீரைக் கொண்டு தம்மைத் திடப்படுத்துவது போலவும் காணப்படுகிறார். மெல்ல புன்னகை புரிகிறார்... முன்செல் லும்படி கட்டளை பிறக்கிறது. சேசு அவர்கள் முன்பாக கடந்து செல் கிறார். அவர்களுடைய மனங்கசிந்த அழுகை அவருக்குக் கேட்கிறது. கஷ்டத்தோடு சிலுவை நுகத்தின் அடியிலேயே தம் முகத்தைத் திருப்பி இன்னொரு முறை சிறுநகை புரிகிறார்..... அவருடைய ஆறுதல் ... அந்தப் பத்து முகங்கள்... எரியும் வெயிலில் ஒரு இளைப்பாற்றி ..

உடனேயே மூன்றாம் முறை தரையில் விழும் வேதனை - முழு வீழ்ச்சி. இந்தத் தடவை அவர் இடறவில்லை. திடீரென ஏற்பட்ட பலக் குறைவினால் விழுகிறார். தலைகீழாய் விழுந்து நிரப்பில்லாத கற்களின் மேல் அவருடைய திருமுகம் மோதி, அவர் மேல் விழுந்த சிலுவைக்கடியில் அகப்பட்டு புழுதியில் கிடக்கிறார். போர்ச் சேவகர் அவரைத் தூக்க முயல்கிறார்கள். ஆனால் அவர் செத்தவர் போலாகி விட்டதால் அவர்கள் செந்தூரியனிடம் போய்ச் சொல்கிறார்கள். அவர்கள் போய்த் திரும்பும் இடைவெளியில் சேசு உணர்வு பெறு கிறார். மிக மெதுவாக சேசு இரு சேவகரின் உதவியால் எழுகிறார். ஒருவன் சிலுவையைப் பிடித்துக்கொள்ள, மற்றவன் அவர் எழுந்து நிற்க உதவி செய்கிறான். சேசு மீண்டும் சிலுவையைத் தோளில் ஏந்தி நிற்கிறார். அவர்மெய்யாகவே முழுவதும் களைத்துப் போய்விட்டார்.

''அவன் சிலுவையில் தான் சாக வேண்டும் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூட்டம் கத்துகிறது. " அதற்கு முன் அவனைச் சாக விட்டால் தேசாதிபதிக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். குற்றவாளி கொலைக்களத்திற்கு உயிருடன் வந்து சேர வேண்டும்" என்று தலைமை வேதபாரகன் போர்ச் சேவகரிடம் சொல் கிறான். சேவகர் அவர்களை எரிச்சலுடன் பார்க்கிறார்கள். ஆயினும் சட்டம் அவர்களைப் பேசவிடாது தடுக்கிறது.

யூதர்களைப் போலவே லோஞ்ஜினுஸும் கிறீஸ்துநாதர் எங்கே வழியில் இறந்து போவாரோ என்று அஞ்சுகிறான். ஆகவே, மலையைச் சுற்றிக் கொண்டு மேலே செல்லும் பாதை வழியாக ஊர்வலம் போகும்படி கட்டளையிடுகிறான் - அது இந்த அளவு செங்குத்தா யிராது என்பதினால்.

சேசுவைப் பின்தொடர்ந்து போகிறவர்கள் கோபாவேசத்துடன் கத்துகிறார்கள். அவர் கீழே விழுவதைக் காண்பது அவர்ளுக்கு அதிக சுவையாயிருக்கிறது. தீர்ப்படைந்த அவரையும் அவரை இட்டுச் செல்கிறவர்களையும் அசுத்த மொழிகளால் வசை பேசும் அவர்களில் சிலர் ஊர்வலத்துடன் வருகிறார்கள்.