இஸ்பிரீத்து சாந்துவானவர் தேவமாதா பேரிலும் அப்போஸ்தலர்கள் பேரிலும் இறங்கி வந்ததை தியானிப்போமாக.

இராப்போஜன அறை அகலமாகத் தோன்றுகிறது. ஏனென்றால் இருக்கைகள் வித்தியாசமான முறையில் போடப்பட்டுள்ளன. மேஜைக்கு செங்குத்தாக போடப்பட்டுள்ள ஒரே ஒரு மஞ்சம் முழுவதும் திவ்ய கன்னிகைக்கானது. இராப் போஜனத்தின் போது சேசு இருந்த இடத்தில், மேஜையின் மையத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

ஜன்னல்கள் மூடப்பட்டு, குறுக்கே கனமான உலோக சட்டங் களால் தாழிடப்பட்டுள்ளன. திவ்ய கன்னிகை, தனியாக தனது இருக் கையில் அமர்ந்திருக்கிறார்கள். இராயப்பரும், அருளப்பரும் மாதா வுக்கு இருபுறமும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கிறார்கள். இராயப்பர் மாதாவுக்கு வலமும், அருளப்பர் இடமுமாக இருக் கிறார்கள். புதிய அப்போஸ்தலரான மத்தியாஸ் மாதாவுக்கு முன்பாக, அல்பேயுஸின் யாகப்பருக்கும், ததேயுஸுக்கும் நடுவில் இருக்கிறார். நம் இராக்கினி இருண்ட நிறமுள்ள மரத்தினாலான ஒரு பெரிய பெட்டியைத் தனக்கு முன்னால் வைத்திருக்கிறார்கள். அது மூடியிருக் கிறது. மாதா ஆழ்ந்த நீலத்தில் உடுத்தியிருக்கிறார்கள். அவர்களது தலைக் கேசம் ஒரு வெள்ளை மூடுதுகிலால் மூடப்பட்டுள்ளது. அதன் மீது அவர்களது மேற்போர்வையின் விளிம்பு போர்த்தப்பட்டுள்ளது. மற்ற அனைவரும் மூடாத சிரசுகளோடு இருக்கிறார்கள்.

மாதா உரத்த குரலில் மெதுவாக வாசித்துக் கொண்டிருக் கிறார்கள். ஆனாலும் அங்கே ஒளி மிக மங்கலாயிருப்பதால், அவர்கள் தான் விரித்துப் பிடித்திருக்கிற ஏட்டுச்சுருளில் எழுதியுள்ள வார்த்தை களை வாசிப்பதற்குப் பதிலாக, மனப்பாடமாகத் சொல்வதாகத் தோன்றுகிறது. மற்றவர்கள், தியானித்தபடி, அவர்கள் வாசிப்பதைக் கவனிக்கிறார்கள். பொருத்தமான இடங்களில் அவர்கள் பதில் சொல்கிறார்கள்.

மாதாவின் முகம் ஒரு பரவசமான புன்னகையால் மறுரூபமாகியிருக்கிறது. இரண்டு தெளிவான நட்சத்திரங்களைப் போல அவர் களுடைய கண்களை சுடர் வீசச் செய்ய வல்லதாக, அப்படி அவர்கள் என்ன காண்கிறார்கள் என்று நான் வியக்கிறேன். மாதா மிக மென்மை யாக புன்னகைத்தபடி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது குரல் ஒரு சம்மனசானவரின் பாடலைப் போல ஒலிக்கிறது. அவ்வேளை யில் அப்போஸ்தலர்கள் ஒரு பக்கமாக அமர்ந்து, மாதாவின் முகத் தைக் காணும்படி முன்னோக்கிக் குனிகிறார்கள். இராயப்பர் எந்த அளவுக்கு நெகிழ்ந்து போயிருக்கிறாரென்றால், இரு பெரிய கண்ணீர்த் துளிகள் அவரது கண்களிலிருந்து விழுந்து, அவரது மூக்கின் இரு பக்கமும் உள்ள சுருக்கங்களின் மீது வழிந்து இறங்கி, அவருடைய நரைத்த அடர்த்தியான தாடிக்குள் போய் மறைகின்றன. ஆனால் அருளப்பர் கன்னிகையின் அமல் புன்னகையைக் கண்டு தியானித்துக் கொண்டிருக்கிறார். அவர்களைப் போலவே அவரும் நேசத்தால் பற்றி யெரிகிறார். அதே வேளையில் ஏட்டுச் சுருளில் பரிசுத்த கன்னிகை வாசித்துக் கொண்டிருக்கிற பகுதியைத் தம் கண்களால் பின்பற்றுகிறார். அவர்களிடம் ஒரு புதிய ஏட்டுச் சுருளை அவர் கொடுக்கும் போது, அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.

வாசகம் முடிந்து விட்டது. பார்ச்மென்ட் சுருள்கள் விரிக்கப் படுவதும், சுருட்டப்படுவதுமான சரசரப்பொலியும் முடிந்து விடுகிறது. மாதா தன் மார்பின் மீது கரங்களைக் குவித்து, தன் சிரசை நெஞ்சின் மீது சாய்த்தபடி மௌன ஜெபத்தில் ஒருமுகப்படுகிறார்கள். அப்போஸ்தலர்கள் அவர்கள் செய்வதைக் கண்டுபாவிக்கிறார்கள்.....

அப்போது காற்றையும், யாழையும் ஒத்ததும், மனித பாடலையும், மிகச்சிறந்த ஹார்மோனிய இசையையும் ஒத்ததுமான ஒரு மிகப் பலத்த, மனதிற்கு இணக்கமான முழக்கம், அந்தக் காலைப் பொழுதின் அமைதியில் திடீரென்று அதிர்ந்து ஒலிக்கிறது. அதிகமதிகம் இணக்க முள்ளதாகவும், உரத்ததாகவும் அது நெருங்கி வருகிறது. தன் அதிர்வு களைக் கொண்டு, அது பூமியை நிரப்புகிறது. அவற்றைப் பரப்பி, அந்த வீட்டின் மீதும், சுவர்களின் மீதும், இருக்கைகளின் மீதும் அவற்றைப் பதிக்கிறது. மூடிய அறையின் அமைதியில் கொத்து விளக்கின் சுடர், காற்றடித்தது போல் படபடக்கிறது.

அச்ச வசப்பட்டவர்களாக அப்போஸ்தலர்கள் தங்கள் சிரசுகளை உயர்த்துகிறார்கள். பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் சர்வேசுரன் தந்த சகல அதியற்புதமான ஸ்வரங்களையும் தன்னுள் கொண்டிருக்கிற அந்த சகலத்திலும் அழகான முழக்கமானது, அப்போஸ்தலர்களை அதிகமதிகமாக நெருங்கி வருகிறது. சிலர் தங்கள் சிரசுகளைத் தங்கள் கரங்களாலும், மேல் வஸ்திரங்களாலும் மூடியபடி தரையின் மீது பதுங்குகிறார்கள், அல்லது தங்களை மன்னிக்குமாறு கடவுளிடம் மன்றாடியபடி தங்கள் மார்பில் அறைந்து கொள்கிறார்கள். சிலர் மகா பரிசுத்த மாதாவிடமிருந்து சங்கையோடு எப்போதும் தாங்கள் விலகியே இருப்பதை மறக்கும் அளவுக்கு அதீத பயம் கொண்டு, தங்களையும் அறியாமல் மாதாவை நெருக்குகிறார்கள். ஆனால் அருளப்பர் மட்டும் அச்சப்படாதிருக்கிறார். ஏனென்றால் அவர் மாதா வின் திருமுகத்தில் அழுத்தமாகத் தெரிகிற மகிழ்ச்சியின் பிரகாச முள்ள சமாதானத்தைக் காண்கிறார். அவர்கள் தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு பொருளை நோக்கிப் புன்னகைத்தபடி தன் திருச்சிரசை உயர்த்துகிறார்கள். அதன்பின் தன் கரங்களை விரித்தபடி முழங்காலில் மெல்ல விழுகிறார்கள். இரு நீல நிற இறக்கைகள் போல் விரிந்திருக் கிற அவர்களது மேற்போர்வை, மாதாவைக் கண்டு பாவித்து முழந் தாளிட்டிருக்கிற இராயப்பர் மீதும், அருளப்பர் மீதும் படர்கிறது.

அதன்பிறகு, ஒளியும், நெருப்புமாகிய தேவ இஸ்பிரீத்து சாந்துவானவர், எந்த ஒரு கதவையும், ஜன்னலையும் அசைக்காமல், மூடியுள்ள அறைக் குள் ஓர் இறுதியான, இன்னிசையான உரத்த ஒலியோடு, மிகப் பிரகாசமான எரிகிற கோளத்தின் வடிவத்தில் பிரவேசிக்கிறார். ஒரு நிமிட நேரத்திற்கும் மேல் மாதாவின் திருச்சிரசிற்கு மேல், சுமார் மூன்று சாண் உயரத்தில் அப்படியே நிலைத்திருக்கிறார். மாதாவின் திருச்சிரசு இப்போது மூடப்படாதிருக்கிறது, ஏனென்றால் தேற்றுகிற வராகிய நெருப்பைக் கண்டவுடன், மாதா அவரிடம் மன்றாடும்படி தன் கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள். ஒரு மகிழ்ச்சிக் கதறலோடு, அத்தியந்த நேசத்தின் புன்னகையுடன் தன் சிரசை அவர்கள் பின்னுக் குத் தள்ளியிருக்கிறார்கள். இஸ்பிரீத்து சாந்துவின் எல்லா நெருப்பும், எல்லா நேசமும் அவரது பரிசுத்த மணவாட்டியில் ஒன்று கூட்டப் பட்ட அந்த ஒரு கணத்திற்குப் பிறகு, அந்த மகா பரிசுத்த கோளம், எந்த உலக ஒப்புவமையாலும் விவரிக்க முடியாத மிகப் பிரகாசமான ஒளியுள்ள, இனிய இசையதிர்வுடன் கூடிய, பதின்மூன்று ஒளிமய மான தீச்சுடர்களாகப் பிரிகிறது. அதன்பின் அது கீழிறங்கி ஒவ்வொரு அப்போஸ்தலருடையவும் நெற்றியை முத்தமிடுகிறது.

ஆனால் மாதாவின் மீது இறங்குகிற தீப்பிழம்பு, அவர்களுடைய நெற்றியை முத்தமிடுகிற ஒரு நேரான தீப்பிழம்பின் நாக்கு அல்ல. மாறாக, அது ஒரு மலர்க்கிரீடத்தைப் போல, கன்னிமையுள்ள திருச் சிரசை அரவணைத்து, அதை ஒரு வளையமாகச் சூழ்ந்து, சர்வேசுர னுடைய மகளும், தாயாரும், மணவாட்டியும், கேட்டுக்கு உட்படாத கன்னிமையுள்ளவர்களும், பூரண அழகுள்ளவர்களும், நித்தியமாய் நேசிக்கப்படுகிறவர்களும், யாரும், எதிலும் இழிவுபடுத்த முடியாத வர்களும், துக்கத்தினால் அதிக வயதானவர்களாகத் தோன்றினாலும் உயிர்ப்பின் மகிழ்ச்சியால் மீண்டும் புத்துயிர் பெற்று, தன் திருச் சுதனோடு, சரீரங்களுடையவும், பார்வைகளுடையவும், உயிரோட்டத் தினுடையவும் அழகையும், புத்துணர்வையும் பகிர்ந்து கொள்பவர் களும், அதனால் மோட்சத்தின் திவ்ய மலராயிருக்கும்படி பரலோகத் தில் பிற்பாடு வரவேற்கப்படவிருக்கிற தனது மகிமையுள்ள திருச் சரீரத்தின் அழகின் ஒரு அச்சாரத்தை ஏற்கெனவே பெற்றுள்ளவர் களுமாகிய இராக்கினிக்கு சூட்டப்படும் மகுடமாக இருக்கிறது.

இஸ்பிரீத்து சாந்து தம் நேசத்திற்குரியவளின் திருச்சிரசைச் சுற்றித் தம் சுவாலைகள் பிரகாசிக்கச் செய்கிறார். அவர்களோடு அவர் என்ன வார்த்தைகளைப் பேசுகிறார்? அது பரம இரகசியம்!! அவர்களது ஆசீர் வதிக்கப்பட்ட திருமுகம் சுபாவத்திற்கு மேற்பட்ட அக்களிப்பால் மறு ரூபம் அடைந்திருக்கிறது. பத்திராசனர்களின் புன்னகைகளைக் கொண்டு நம் ஆண்டவளாயிருக்கிற தேவ மணவாட்டி புன்னகைக்கிறார்கள். அதே வேளையில் மாசற்ற திவ்ய கன்னிகையின் பேரானந்தமுள்ள கண்ணீர்த் துளிகள், இஸ்பிரீத்து சாந்துவின் ஒளியால் ஊடுருவப் படுவதால், அவை அவர்களது பரிசுத்த கன்னங்களின் மீது வைரங்களைப் போலச்சுடர் வீசுகின்றன.

அந்த நெருப்பு கொஞ்ச நேரத்திற்கு அப்படியே இருக்கிறது .... அதன்பிறகு அது மறைகிறது.... அது இறங்கி வந்ததன் ஞாபகமாக, உலகின் எந்த ஒரு மலரும் வெளியிட முடியாத ஒரு இனிய நறுமணம் அங்கே நிலைத்திருக்கிறது... பரலோகத்தின் வாசனைத் திரவியம்...

அப்போஸ்தலர்கள் தன்னுணர்வுக்கு வருகிறார்கள்... தேவ மணவாளி தன் பரவசத்திலேயே நிலைத்திருக்கிறார்கள். அவர்கள் தன் கரங்களைத் தன் மார்பின் குறுக்காக மடித்து வைத்து, கண்களை மூடி, சிரந்தாழ்த்தி யிருக்கிறார்கள். மற்ற எதனாலும் உணரப்பட முடியாததாக, சிநேக தேவனுடனான அவர்களுடைய உரையாடல் தொடருகிறது ... அவர்களுக்குத் தொந்தரவு தர யாரும் துணியாதிருக்கிறார்கள்.

மாதாவைச் சுட்டிக்காட்டியபடி, அருளப்பர்: ''அவர்களே பலிபீடமாயிருக்கிறார்கள். ஆண்டவருடைய மகிமை அவர்களுடைய மகிமையின் மீது தங்கியிருக்கிறது...'' என்கிறார்.

''ஆம். அவர்களுடைய ஆனந்தத்தை நாம் குலைத்து விடாதிருப் போம். நாமோ போய், ஆண்டவரைப் போதிப்போமாக. அவரது செயல்களும், வார்த்தைகளும் மக்களுக்கு அறிவிக்கப்படுவனவாக' என்கிறார் இராயப்பர் சுபாவத்திற்கு மேற்பட்ட ஏவுதல் பெற்றவராக

"நாம் போவோம்! நாம் போவோம் ! சர்வேசுரனுடைய இஸ்பிரீத்துவானவர் என்னில் எரிந்து கொண்டிருக்கிறார்" என்கிறார் அல்பேயுஸின் யாகப்பர்.

''அவர் நம்மைச் செயல்படத் தூண்டுகிறார். நம் எல்லோரையும். நாம் போய் மக்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்போமாக.''

ஒரு காற்றினாலோ, அல்லது ஒரு உயிரோட்டமுள்ள விசை யாலோ தள்ளப்படுகிறவர்களைப் போல, அல்லது ஈர்க்கப்படுகிறவர் களைப் போல அவர்கள் வெளியே போகிறார்கள்.