ஒருநாள் எல்லாம் முடிந்து போகும்!

1. மரண சிந்தனை 

"நீ மரிக்கும்போது உன் ஆத்துமம் கெட்டுப்போகுமானால், ஐயோ, உனக்கு எல்லாம் கெட்டுப் போயிற்று! "நீ மரிப்பது தப்பாத சத்தியமாதலால் நீ உயிரோடு சீவிக்கும் போதே செத்தவனைப் போல் எண்ணிப் பாவித்துக்கொள்'' என்று அர்ச். லாரென்ஸ் யுஸ்தீனியன் கூறுகிறார். நீ மெய்யாகவே செத்துப் போனதாக இப்போது எண்ணிக்கொள். அப்போது ஐயோ, சீவிய காலத்தில் என்னென்ன புண்ணிய மெல்லாம் செய்திருக்கலாமே என்றெண்ணுவாய் அல்லவா! ஆதலால் இன்னும் உனக்கு உயிர் இருப்பதால் அதையெல்லாம் இப்போது ஆராய்ந்து எண்ணிச் செய்யப் பார். சாவைப்பற்றி அடிக்கடி நினை. அடிக்கடி மரணத்தை நினைப்பவன் தன் ஆத்துமத்தைப் பரிசுத்தமாய்க் காப்பாற்ற முயற்சி எடுக்கிறான்.

ஆம். மனிதன் வாழ்வின் நிலையற்ற தன்மையைப் பற்றி எப்போதும் சிந்திக்க வேண்டியவனாக இருக் கிறான். பரிசுத்த வேதாகமம் இந்த மாபெரும் சத்தியத்தை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவு படுத்துகிறது. "மனித ஜீவியம் அற்ப நேரம் தோன்றி மறையும் ஓர் புகை போலாம்” என்று அர்ச். யாகப்பர் சொல்கிறார் (யாகப்பர்4:15). "மனிதனின் ஜீவிய காலம் சொற்பம். ஓர் பூவைப் போல பூத்து வாடி விழுந்து அழிந்து போகிறான்'' என்கிறார் யோபு (14:1, 2). மனுக்குலம் எல்லாம் அற்பப் புல்லே. சகல ஜாதி ஜனங்களும் ஓர் புல்லுக்கு சமானம். புல் வாடி வறண்டு, பூவும் விழுந்து மடிந்து போகும்" (இசையாஸ் 40:6).

மரண நேரம் நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. அது செல்வந்தன், ஏழை, படித்தவன், படிக்காதவன், பாவி, புனிதன் என்று வேறுபாடு பார்ப்பதில்லை . கடவுள் மனிதனுக்கு நியமம் செய்துள்ள நேரம் வந்ததும் அவனது நித்தியம் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் தொடங்கி விடுகிறது. நாம் எப்போதும் மரணத்திற்கு ஆயத்தமாயிருக்கும்படி நமது நன்மைக்காகவே, நம் மரண நேரத்தை நாம் அறியாதபடி அவர் மறைத்து வைத்திருக்கிறார்" என்று அர்ச். கிரகோரியார் கூறியிருக்கிறார்.

மனிதன் தன் வாழ்நாளில் ஒவ்வொரு கணமும் மரணத்தை எதிர்பார்த்து அதற்கு ஆயத்தமா யிருக்கும்படியாகவும், இன்றைய நாள்தான் தனது கடைசி நாள் என்பது போல ஒவ்வொரு நாளும் மரணத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்தும்படியாகவுமே கடவுள் அவனது மரண நாளை அவனிட மிருந்து மறைத்து வைத்திருக்கிறார். இவ்வாறு மரணத்திற்குத் தன்னை ஒருவன் ஆயத்தம் செய்வது, தேவ இஷ்டப்பிரசாத அந்தஸ்தில், அதாவது, சாவான பாவமில்லாத நிலையில் நிலைத்திருப்பதில் அடங்கியிருக்கிறது. முடிந்த வரையில் கடவுள் தரும் எல்லா வரப்பிரசாதங்களையும் பயன்படுத்தி, பாவத்தை, குறிப்பாக சாவான பாவத்தை எதிர்த்துப் போராடுவதிலும், அதில் விழும் நிர்ப்பாக்கியம் ஏற்பட்டால், சற்றும் தாமதியாமல் உடனே நல்ல பாவசங்கீர்த்தனத்தின் மூலம் அதிலிருந்து எழுந்து, உரிய பரிகாரம் செய்யத் தேடுவதிலும் அது அடங்கியிருக்கிறது.

"மனிதன் எங்கே, எப்படி இறக்கிறான் என்பது முக்கியமல்ல, இறக்கும்போது, அவன் சாவான பாவ அந்தஸ்தில் இருக்கிறான் என்றால், தன்னால் முடிந்த போதே அவன் மனந்திரும்பவில்லை என்றால், அவன் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய கொடூர வேதனையோடு பசாசு அவனது ஆன்மாவை சரீரத்திலிருந்து கிழித்தெடுத்துத் தன்னோடு இழுத்துச் செல்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் மற்ற அனைத்திலும் பயங்கரமானது" என்று அர்ச். பிரான்சிஸ் அசிசியார் கூறுகிறார்.