முண்முடியின் காரணம்: மனித ஆங்காரம்!

நம் சேசு அருவருக்கிற ஒரு பெரும் பாவம் ஆங்காரம். ஆன்மாக்களின் ஆங்காரமாகிய பாவத் திற்கு பரிகாரம் செய்வதற்காகவே அவர் முண்முடியின் கொடூர வாதையை ஏற்றுக்கொண்டார்.

சிலர் தங்கள் பாவங்களைப் பற்றிப் பிறரிடம் கூறுவார்கள். தாங்கள் எவ்வளவு பெரிய பாவிகள் என்பதை மற்றவர்கள் முன் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் கேட்பவர் "ஆம், உண்மைதான், நீ பெரிய பாவிதான்" என்று சொன்னால் அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

இன்னும் சிலர் தாங்கள் செய்த ஒரு நன்மை பிறரால் புகழப்பட வேண்டும் என்பதற்காகவே அதைப் பற்றிப் பிறரிடம் குறைத்துப் பேசுவார்கள். ''இல்லையில்லை, நீ மிக நன்றாகச் செய்தாய்" என்ற வார்த்தை களை எதிர்பார்த்தே அப்படிச் செய்வார்கள். ஆனால் நேர்மாறாக, அவன், ''உண்மைதான், நீ அதை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாம்'' என்று சொல்லி விட்டால், நொந்து போவார்கள்.

வெளிப்படையாகத் தெரிகிற ஆங்காரப் பாவங்கள் அநேகம். ஆனால் மேற்கூறிய இரு உதாரணங்களிலும் நம் ஒவ்வொருவரிலும் இரகசியமாக மறைந்திருக்கிற உள் ஆங்காரப் பாவத்தை நாம் உணர முடிகிறதல்லவா? எனவே மிக விழிப்பாயிருந்து இரகசியமாய் ஒளிந்திருக்கும் ஆங்காரத்தின் ஒவ்வொரு வடிவத்தையும் நீக்க இடைவிடாமல் முயலுவோமாக.

உலகம் சார்ந்த தலைமைப் பொறுப்பானாலும் சரி, அல்லது துறவற மடங்களில் தலைமைப் பொறுப்பானாலும் சரி, அது ஆண்டவர் தந்தது என்பதை ஏற்றுக்கொண்டு, நமக்குக் கீழ்ப்பட்ட அனைவரையும் சகோதர, சகோதரிகளாக பாவித்து நடத்த வேண்டும். கல்வியாலும், பணத்தாலும் உயர்வு ஏற்பட்டால், அதன் காரணமாக யாரையும் இழிவாகக் கருதாமல், என்னுடைய திறமையெல்லாம் கடவுள் எனக்குக் கொடுத்தது என்ற மனப்பான்மையோடு வாழ வேண்டும். இதற்கு விரோதமாக நடப்பது ஆங்காரம் என்னும் மிகப் பெரும் பாவமாகும்.

பொதுவாக சிலுவை மரணத்திற்குத் தீர்வையிடப்பட்டவர்கள் உட்படாத இரண்டு கொடிய வாதைகளுக்கு சேசுநாதர் தம்மை உட்படுத்துவதை அவரது திருப்பாடுகளில் காண்கிறோம்.

ஒன்று கசையடிகள், மற்றொன்று முண்முடி. அவரே கடவுள்-மனிதனின் காவியத்தில் வெளிப்படுத்துகிறபடி, தம் திரு இருதயம் நைந்து போகும் அளவுக்கும், ஏறக்குறைய சரீரத்தின் தோல் முழுவதும் உரித்தெடுக்கப்படும் அளவுக்கும் மகா கொடூரமாக அவர்கசைகளால் அடித்து நொறுக்கப்படத் தம்மையே அனுமதித்தது ஏன்?

ஏனெனில், நம் சேசு நம் அசுத்த பாவங்களுக்கு இப்படிப் பரிகாரம் செய்கிறார். நம் ஐந்து சரீரப் புலன்களாலும், நினைவு, மனது, சித்தம், ரூபிகரம் என்னும் ஆன்ம புலன்களாலும் நாம் கட்டிக் கொண்ட அசுத்த மோக பாவங்களுக்கு அவர் இவ்வாறு பரிகாரம் செய்கிறார்.