“ நரகம் என்பிக்கும் உந்நத தேவ நீதி “ – தொடர்ச்சி
முப்பது வயது வரை, தம் தாய் தந்தையருக்குக் கீழ்ப்படிந்து, தச்சனின் மகனாக, தாமே ஒரு தச்சனாகக் கூலி வேலை செய்து வாழ்வு நடத்திய தேவ சுதன், காலம் நிறைவுற்ற போது, தமது பொது வாழ்வைத் தொடங்கி, பாலஸ்தீனமெங்கும் கால நடையாகவே சுற்றித் திரிந்து, போதித்து, தமது புதுமைகளால் தமது தெய்வீகத்தை எண்பித்து வந்தார். கிடைத்ததை உண்டார். வெயிலிலும், மழையிலும், குளிரிலும் நடந்து சோர்ந்தார். வானத்தையே கூரையாகக் கொண்டு படுத்து உறங்கினார். இரவு முழுவதும் விழித்திருந்து ஜெபம் செய்தார்.
தமது நேரம் வந்தபோது, கொடிய மரணத்திற்கு தம்மைக் கையளித்தார். ஒலிவத்தோப்பில், தமது திருப்பாடுகளை இன்னும் தீர்க்கமாகக் கண்டு துடித்தார். இவ்வளவு பாடுகளுக்குப் பின்னும், பிடிவாதமாக மனந்திரும்பாமல் நரகத்தில் விழும் கோடிக்கணக்கான ஆன்மாக்களுக்குத் தம் திவ்ய இரத்தம் பயனற்றுப்போவதைக் கண்டு, “ கூடுமானால் இந்தப் பாத்திரம் தம்மை விட்டு அகலும்படி” ஜெபிக்குமளவுக்கு கொடூர வேதனைக்குள்ளாகி, இரத்த வியர்வை சிந்தினார். தமது பிதாவால் கைவிடப்பட்டு, நமக்கு வர வேண்டிய ‘ நரக வேதனையை ‘ அவர் அனுபவித்தார்.
நண்பனாயிருந்த ஒரு துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு, தம் அப்போஸ்தலர்களால் கைவிடப்பட்டு, கற்றூணில் கட்டுண்டு 6600-க்கும் அதிகமான அடிகளால் அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, மரணத்தீர்வை பெற்று, இசையாஸ் கூறுவது போல, மனித சாயலையே இழந்து, சிலுவைப்பாதையில், பதினைந்தடி நீள சிலுவையை சுமந்து, கூரிய ஆணிகளால் சிலுவையில் அறையப்பட்டு, ஏறக்குறைய ஆடையற்றவராக இரண்டு கள்வர்களுக்கிடையே மூன்று மணி நேரம் தொங்கி மரித்தார். எதற்காக?
நமது ஆண்டவர் எதற்காக:
1. ஜெத்சமெனித் தோட்டத்தில் இரத்தவியர்வை சிந்தி, பிதாவே, “ தேவரீருக்கு சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கப் பண்ணியருளும் ( லூக்.22:42) என்று மன்றாடினார், காரணம்?
2. சிலுவைப் பாதையில் ஒன்பதாம் ஸ்தலத்தில் கொடூர வேதனையால் விழுந்தார். ஏன் ?
3. “ என் சர்வேசுரா, என் சர்வேசுரா, நீர் என்னைக் கைநெகிழ்ந்தது ஏன்? என்றார். ஏன்?
4. “ மனிதனின் தீவிர ஒத்துழைப்பில்லாமல் “ சர்வேசுவரனால் அவனை இரட்சிக்க முடியாது. தேவ நீதிப்படி அப்படிப்பட்டவன் நரக தண்டனை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு தேவ நீதி நிலை நாட்டப்படுகிறது.
5. “சுயாதீன சித்தத்தால் “ “ சொந்த பிடிவாத்த்தால் “ நரகத்தில் விழும் ஆன்மாக்களை ஆண்டவர் காண்கிறார். அவற்றைத் தாங்க முடியாததால், ஒவ்வொரு ஆன்ம இழப்பினாலும் என் இரட்சகர் கொடூர வேதனைப்படுகிறார், தம் பிதாவிடம் அரற்றுகிறார்.
6. “சிலுவையில் மனித புத்திக்கெட்டாத அளவில் தம் பிதாவின் கைவிடுதலை “ சேசு உணர்கிறார். நரகத்தில் விழும் ஆன்மா தன் கடவுளை நித்தியத்திற்கும் இழந்ததால் உணரும் கைவிடுதலை “ மனித அவதாரம் எடுத்த கடவுள் உணர்ந்தார். அவருடைய கூக்குரல் இதனை வெளிப்படுத்துவதோடு கூட “ சர்வேசுரனைத் தகப்பனாகக் கொண்டுள்ள் நாமும் “ அவரைப்போல நம் மரண கைவிடுதலின் மீது வெற்றி பெற, அதை சேசு அனுபவித்த கைவிடுதலோடு இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நரகம் இல்லையென்றால் இவைகளையெல்லாம் நம் ஆண்டவர் செய்திருக்க மாட்டோர் அன்றோ?
நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !