நரகம் தவிர்க்க.. பதிவு -2 :

 “ நரகம் என்பிக்கும் உந்நத தேவ நீதி “

நல்லவரும், கருணையே உருவானவருமான சர்வேசுரன், இவ்வளவு பயங்கரமுள்ள நரகத்தைக் கொண்டு ஆன்மாக்களை தண்டிப்பாரா? இதெல்லாம் கட்டுக்கதை என்று விசுவாசிகள் சில குருக்கள், சில கன்னியர் பதில் சொல்கிறார்கள். இவர்கள் இந்த நரகத்திலிருந்து ஆத்துமங்களைக் காப்பாற்ற சவேசுரன் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

சர்வேசுவரன் யார்? சகலத்தையும் படைத்தவர்; சகலத்தையும் காண்கிறவர்; சகலத்தையும் அறிகிறவர்; சர்வ நன்மைச் சுரூபியானவர்; சகலத்திற்கும் ஆதியும் அந்தமுமானவர்; ஆதியும் அந்தமும் இல்லாதவர்; சர்வ வல்லபர்; மகா பரிசுத்த அரூபியானவர்; எங்கும் வியாபித்திருப்பவர்; அளவில்லாத நீதியுள்ளவர்.

தமத்திருத்துவ சர்வேசுவரன் தம்மிலே சகல சந்தோஷமும், திருப்தியும் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் தமது புற வெளிப்பாட்டில், தம் நன்மைத்தனத்தால் படைத்த மனிதன் பாவத்தை செய்து பிரிந்து போனபோது, அவனைக் கைவிட்டிருந்தால், அவருக்கு வந்திருக்கக் கூடிய பாதிப்பு எதுவுமில்லை. பாவம் கட்டிக்கொண்ட கணமே சம்மனசுக்களில் மூன்றில் ஒரு பகுதியினரை அவர் தண்டித்து, நரகத்தில் தள்ளினார். இதனால் அவரது பேரின்பக் கடலில் ஒரு துளி முதலாய்க் குறையவில்லை. மனிதனை அவன் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிப்பது அவர் பூரண மகிழ்ச்சியாயிருப்பதற்கு எந்த விதத்திலும் அவசியமேயில்லை.

நாம் அவருக்குத் தேவையில்லை, அவர் சிருஷ்ட்டித்த எதுவுமே அவருக்குத் தேவையில்லை. தம் நன்மைத்தனத்தால் – அவருடைய பாக்கியங்களை நாமும் அனுபவித்து அவருடன் மகிழ வேண்டும் என்று சித்தங்கொண்டு நம்மைப் படைத்தார். ஒரு தகப்பனைப் போல் செயல்படுவது நம் கடமை என்பது போல் அவரே ஆக்கிக்கொண்டார். அதே சமையத்தில் அவர் நீதியையும் செலுத்துகிறார்.

பாவத்திலிருந்து மனுக்குலத்தை மீட்கும்படி மனிதனாக வந்த தேவன் ஒரு செல்வந்தராக அல்ல. மாறாக, சகலராலும் கைவிடப்பட்டவராக, மாட்டுத்தொழுவத்தில் வந்து பிறந்தார்.

அந்தத் தீவனத்தொட்டியின் மேலே வைக்கோலின் மீது படுத்திருக்கும் குழந்தையைப் பார். இன்னும் கண்களை திற்க்க முடியாதிருக்கிறார். குளிரில் வருந்தி அழுகிறார்! ஒரு தாயின் அமுதிலும், அர்ச் சூசையப்பரின் அரவணைப்பிலும் அமைதி கொள்கிறார்; ஓர் அரசனின் கோபத்திற்கு தப்பி அந்நிய தேசத்திற்கு ஓடிப்போகிறார். அங்கே அகதியாய்க் காலம் கழிக்கிறார். ஆயினும் அவர் சவேசுரன். உலகமெல்லாம் அவருடையது; காண்பவையும், காணதவையும் அவருடையது.

“ உன் 33-ம் வயதில் சாலை விபத்தில் இறந்து போவாய் “ என்று கடவுள் ஒருவனுக்கு அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள். இனி அவன் ஒரு வினாடியாவது அமைதியாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? அவன் பெரிய கோடீஸ்வரனாக இருக்கலாம். உலகமே அவனைத் துதி பாடலாம். விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைக்கலாம். பட்டும் பொன்னும், பொன்னும், வைர வைடூரியம் அணிந்து நாள்தோறும்  விருந்தாடலாம்.  ஆனால் அவன் மகிழ்ச்சியாய் இருப்பானா? தனது அவல மரணத்தைப் பற்றிய நினைவு அவனை அரித்துக் தின்று கொண்டேயிராதா?

ஆ. நமக்காக மனிதனாய் வந்து பிறந்த சர்வேசுரன் இதே நிலையில்தான் இருந்தார். எதிர்காலத்தையும், அது நமக்கென வைத்திருக்கும் துன்பங்களையும் அறியாதிருக்க நமக்கெல்லாம் இருக்கிற பாக்கியம் முதலாய் நம் சேசுவுக்கு இல்லையே ! சர்வேசுவரனாய் இருந்ததால், தம் கொடிய மரணத்தின் ஒவ்வொரு வேதனையையும், துன்பத்தையும் நம் ஆண்டவர் உணர்ந்திருந்தாரே! அவர் வளர வளர, இந்தக் கொடிய துன்பமும் அவரோடு சேர்ந்து வளர்ந்து கொண்டே வந்ததே..

இடைவிடாத சகாய மாதா படம் மேற்கூறிய காரியத்தை துல்லியமாக விவரிக்கிறது. அதில் தமது திவ்ய அன்னையின் கரத்தில் இருக்கும் சேசு பாலனுக்கு அர்ச். மிக்கேல் அதிதூதரும், அர்ச். கபரியேல் தூதரும் தோன்றி, அவருடைய சிலுவைப்பாடுகளின் கருவிகளியக் காண்பிக்கிறார்கள். ஆண்டவர் அவற்றைக் கண்டு மிரண்டு தம் தாயை அச்சத்தோடு ஒண்டிவர, மாதா வேதனையோடு அவரை ஆதரவாக அணைத்துக்கொள்ளும் அதே வேளையில், அந்தப்பரபரப்பினால் சேசு பாலனின் ஒரு காலணி கழன்று கீழே விழுகிறது..

ஆம் பிறப்பு முதலே தம் திருப்பாடுகளை எந்நேரமும் தம் கண் முன்பாகக் கொண்டு வாழ்ந்தார் நம் ஆண்டவர்..

நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479,

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !