இடியின் மைந்தன் இவர் (பொவர்னகேசு – Thunder of son )
அர்ச். சந்தியாகப்பர், அர்ச்.அருளப்பருடைய பெற்றோர்கள் படித்திருந்தாலும் இவர்கள் பள்ளிக்கூடம் சென்றதில்லை. கடலில் மீன் பிடிக்கும் தொழிலை தன் தந்தையோடு செய்து வந்தார்கள். கடல்புறத்து மக்களுக்கே உரிய வெள்ளை மனமும், முரட்டு குணமும் இவர்களுக்கும் இருந்தது. அர்ச். இராயப்பர், அர்ச்.பிலவேந்திரர் இவர்களுக்கு பங்காளி முறை உறவினர்கள். அவர்களும் மீன் பிடிக்கும் தொழில்தான் செய்தார்கள். இவர்கள் நால்வரும் ஒரே நாளில் சேசுவால் முதல் சீடர்களாக அழைக்கப்பட்டவர்கள். (மாற்கு 1 : 16-20) அதாவது அர்ச்.இராயப்பரை அழைத்த கொஞ்ச நேரத்தில் அர்ச்.சந்தியாகப்பரையும், அர்ச்.அருளப்பரையும் அழைத்தார் நம் சேசு.
அர்ச்.சந்தியாகப்பர், அர்ச்.அருளப்பர் இரண்டு சகோதரர்களின் குழந்தை மனமும் முரட்டு குணமும், கபடற்ற உள்ளமும் சேசுவை ரொம்பவே ஈர்த்தது. அதுவும் போக அர்ச்.சந்தியாகப்பர், அர்ச்.அருளப்பரின் தாய் புனித சலோமி தேவமாதாவுக்கும் உறவினர்தான். இப்போது நிகழ்ச்சிக்கு வருவோம்
அர்ச். சந்தியாகப்பரையும், அர்ச்.அருளப்பரையும் இடியின் மக்கள் என்று அழைக்க காரணமான நிகழ்ச்சிக்கு வருவோம்..
ஒரு முறை சமாரியர்களுடைய ஊர் ஒன்றில் சேசு சுவாமியை ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களுடைய ஊருக்குள் நுழைய வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். உடனே கோபம் அர்ச்.சந்தியாகப்பருக்கும், அர்ச்.அருளப்பருக்கும் தலைக்கு ஏறியது. வெகுண்டெழுந்தார்கள். ஆண்டவர் சேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களை உடனே அழிக்க நினைத்தார்கள். கோபம் கொப்பளிக்க வார்த்தைகள் அணலாக வெளிப்பட்டது.
“ ஆண்டவரே வானத்திலிருந்து நெருப்பு(இடி) வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா (லூக்காஸ் 10 : 54)
என்று தன் சகோதரனோடு கேட்டார். அவர்களுக்கு கோபம் வர இன்னுமொரு காரணம் அவர்கள் சேசுவின் மீது கொண்ட அளவில்லாத அன்பு, பாசம், உரிமை. இவைகள்தான் அவர்களை இந்த அளவுக்கு கோபம் கொள்ள வைத்தது. கோபம் இருக்கும் இடத்தில்தானே குணமும் இருக்கும். இப்போது சேசு இந்த சகோதரர்கள் மேல் கொண்ட அன்பை பார்ப்போம்.
சேசு சுவாமி இவர்களை கடிந்து கொண்டாலும் இவர்களுக்கு “இடியின் மக்கள் “ ( மாற்கு 3:17) என்னும் பட்ட பெயரை சூட்டுகிறார். இதே போல இன்னும் ஒரு சில வேறு சூழ்நிலைகள் நடந்திருக்கலாம். அதனால்தான் இவர்களுக்கு இந்த பெயர். சேசு சுவாமி இவர்களது நியாயமான கோபத்தையும், எதையும் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் வெளிப்படையாக பேசும் சுபாவத்தையும் ரசித்ததால்தான் இவர்களுக்கு “ இடியின் மக்கள் “ என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.
மேலும் மேலே உள்ள நிகழ்ச்சி சேசு சுவாமி அவர்கள் மீது அவர் கொண்ட அளவில்லாத பாசத்தையும், நெருக்கத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது..
இன்னொன்று இந்த வார்த்தையை அர்ச்.சந்தியாகப்பர் உபயோகப்படுத்துவதற்கு மற்றொரு காரணம் என்ன என்று ஏன் சற்று சிந்தித்து பார்த்தால் சேசுதான் கடவுளின் மகன் என்பது இந்த அறிவிலிகளுக்கு ஏன் தெறியாமல் போனது என்பதுதான்.
“ நம் தலைவர் கடவுளின் மகன். மெசியா. இது கூட இந்த சமாரியர்களுக்கு தெறியவில்லையா ? அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் அவர்கள் ஊருக்கு நம் தலைவரை வரவேண்டாம் என்று சொல்வார்கள் என் தலைவரை மதிக்காதவர்கள் இருந்து என்ன புரயோஜனம் “ என்று நினைத்தார்.
இந்த சம்பவத்தில் நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால் அர்ச்.சந்தியாகப்பர் அவ்வளவு கோபத்திலும் “ இதைச் செய்யவேண்டும் என்பது உமக்கு விருப்பமா? “ என்று கடவுளின் அனுமதியைக்கேட்கிறாரே அதுதான் அவரின் நிதானத்தையும், கீழ்படிதலையும் காட்டுகிறது. மற்றும் அவரின் சிறப்பான குணாதிசயத்தையும் காட்டுகிறது. இந்த அளவில்லாத கோபத்தில் அவர் கொண்ட நிதானம் நம்மிடம் இருப்பதில்லை.
அர்ச். சந்தியாகப்பருக்கு இன்னும் அதே பழைய கோபம் (தப்பு செய்பவர்களிடம்) இருக்கிறது. அதே போல் அவரிடம் அன்பும், பாசமும் வைத்துவிட்டால் ஓடி வந்து (அவரே) உதவி செய்யும் குணமும் அவரிடம் இருப்பது அவரை நேசிக்கும் அத்தனைபேருக்கும் தெறியும். உண்மையான அன்புக்காக எதையும் செய்வார் எதையும் இழப்பார். அன்று அவர் தலைவர் அவர் மீது கொண்ட அன்பிற்காக தன் இன்னுயிரை பரிசாக (மகிழ்ச்சியோடு ) அளித்தார்.
ஜெபம் : அர்ச்.சந்தியாகப்பரே சேசுவினால் உம் சகோதரனோடு இடியின் மைந்தன் என்று அன்பாக அழைக்கப்பட்ட புனிதரே ! உம்முடைய கோபத்தில் இருந்த நிதானம் எங்களிடம் இருப்பது இல்லை. நாங்கள் சில வேளைகளில் அல்ல பல வேளைகளில் கோபம் என்ற அரக்கணை கட்டுப்படுத்த முடியாமல் அடி, உதை அல்லது வித்தியாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல் என்ற பாவமான காரியங்களில் ஈடுபட்டு விடுகிறோம். சிலர் கொலை வரை சென்றுவிடுகிறார்கள்.
அன்று உம் கோபம் நியாயமானது. ஆனால் பல வேளைகளில் எங்கள் கோபம் நியாமற்றதாகவும், தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதாகவே இருக்கிறது. உம் நிதானத்தையும், சேசுவின் மீது நீ கொண்டிருந்த தீவிர அன்பையும், பாசத்தையும் எங்களுக்கு தாரும். ஆமென்
மீண்டும் வருவேன் ஆற்றல் தரும் அருட்துணையோடு..
சேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !