"தூய கார்மேல் அன்னை" அல்லது "தூய கார்மேல் மலை அன்னை" அல்லது "புனித உத்தரிய மாதா" என்பது கார்மேல் சபையின் பாதுகாவலராகிய, இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயராகும். கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை திருநாட்டில் உள்ள கார்மேல் மலையில் வனவாசிகளாக வாழ்ந்தனர். தங்களின் துறவு இல்லத்தருகில் ஒரு கோவிலை மரியாளின் பெயரில் கடவுளுக்கு கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே மரியாளுக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று.
15ம் நூற்றாண்டில், மரியாயின் உத்தரியம் என்னும் அருளிக்கத்தின் பக்தியானது பரவ துவங்கியது. மரியாளே உத்தரியத்தை புனித சைமன் ஸ்டாக் என்னும் கார்மேல் சபை புனிதருக்கு ஒரு காட்சியில் அளித்ததாக நம்பப்படுகின்றது. 16 ஜூலை கத்தோலிக்க திருச்சபையில் கார்மேல் அன்னையின் விழா நாள் மற்றும் கார்மேல் உத்தரிய திருவிழாவாகும்.
தூய கார்மேல் அன்னை, சிலி நாட்டின் பாதுகாவலி ஆவார்.
இவ்விழாவானது, கார்மேல் சபையினரின் அதிமுக்கியமான விழாவாகும். கார்மேல் சபையினர் இந்த பெயரைத் தெரிந்து கொள்ள முக்கியமான ஒரு காரணம் உண்டு. கார்மேல் மலையிலே புனித கன்னி மரியாளுக்குத் தோத்திரமாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கபட்டது. அன்னை பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் முன்னரே அந்த ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.
எபிரேய மொழியில் "கார்மேல்" என்ற சொல்லுக்கு "தோட்டம்" என்பது பொருள். பாலஸ்தீன நாட்டில் ஹைபா வளைகுடாவில், 1800 அடி உயரத்திலிருக்கும் தோட்டத்தில்தான் பழைய ஆகமத்தில் இறைவாக்கினர் எலியா தங்கி தன் செபத்தில் நாட்களை கழித்தார். 12ம் நூற்றாண்டில் வனத்துறவியர் சிலர் இதே மலைக்கு சென்று அங்கு வாழ்ந்து வந்தனர். பின்பு இவர்கள் ஒரு சபையை நிறுவினர்.
ஜூலை 16, 1251ல் கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித சீமோன்ஸ்தோக் என்பவருக்கு இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் தேவதாய் காட்சி கொடுத்தாள் என்பது ஐதீகம். இவருக்கு, அன்னை மரியாள் உத்தரியம் அணிந்து கொண்டு வந்து காட்சி கொடுத்து, உத்தரிய பக்தியை இவ்வுலகில் பரப்பும்படியாக கேட்டுக் கொண்டதன் பேரில், இன்றும் அப்பக்தி பரப்பப்பட்டு பலன் அடையப்படுகின்றது.
நம் பரலோக அன்னை உத்தரியத்தைக் கண்பித்தாள்.
அந்த உத்தரியத்தைத் தரித்திருக்கும் அனைவருக்கும் பரலோக கொடைகளையும் தனது பாதுகாப்பையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினாள். வெறுமனே உத்தரியத்தைத் தரித்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும். உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க அதிகாரம் பெற்ற ஒரு குரு, உத்தரியத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
சிந்தனை :
உத்தரியத்தையோ, உத்தரிய சுரூபத்தையோ தரித்திருந்தால் மட்டும் போதாது. ஆனால், உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ பெருமுயற்சி செய்ய வேண்டும்.
செபம் :
தாயே, உம்முடைய உத்தரிய திருஉருவத்தை தரித்திருப்பவர்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ இறை இயேசுவை மன்றாடும்.
ஆமென் † Ver menos