நரகம் மறுக்க முடியாத ஒரு நித்திய உண்மை!

உலகம் மிக வேகமாகத் தன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆன்ம மேய்ப்பர்கள் உலகின் பின்னால் ஓடிக் கொண்டிருக்க, ஆன்மாக்களோ உறங்கிக் கொண்டிருக்கின்றன! 

நோவேயின் நாட்களில் எப்படியிருந்ததோ, அப்படியே மனுமகனின் வருகையிலும் இருக்கும். எவ்வாறெனில் பெருவெள்ளத்திற்கு முந்தின நாட்களிலே, நோவா என்பவர் பேழையில் பிரவேசிக்கும் நாள் வரையில் ஜனங்கள் உண்டும், குடித்தும், பெண் கொண்டும், கொடுத்துமிருந்து, பெருவெள்ளம் வந்து சகலரையும் வாரிக்கொண்டு போகும் வரைக்கும் உணராதிருந்தார்கள். அவ்விதமே மனுமகனுடைய வருகையிலும் இருக்கும்" என்ற நம் ஆண்டவரின் தீர்க்கதரிசனம் எழுத்துப் பிசகாமல் நிறைவேறிக் கொண்டிருப்பதை எங்கும் காண்கிறோமே! ஐயோ! ஆத்துமங்களை இந்த பயங்கரத்திலிருந்து காப்பாற்ற யார் முன்வருவார்கள்! 

''நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது பரலோகத்தினின்று வருகிற தேவதூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவான்" (கலாத்.1:8) என்று அப்போஸ்தலர் எச்சரிப்பதை ஆன்ம மேய்ப்பர்கள் கவனத்தில் கொள்ளட்டும்! 

பாத்திமாவில் 1917 ஜூலை 13 அன்று பரிசுத்த ஜெபமாலை மாதா மூன்று குழந்தைகளுக்கு நரகத்தைத் திறந்து காட்டினார்கள். இந்தக் குழந்தைகளில் இளையவளான ஜஸிந்தாவுக்கு அப்போது ஆறு வயதுதான் ஆகியிருந்தது. இந்தக் காட்சி எந்த அளவுக்கு அவர்களை நடுங்கச் செய்தது என்றால், லூஸியா தனது மூன்றாம் நினைவுக் குறிப்பேட்டில் "இக்காட்சி ஒரு கண நேரம்தான் நீடித்தது. நமது மோட்ச அன்னைக்கு நன்றி. நாங்கள் மோட்சம் செல்வோம் என்று முதல் காட்சியிலேயே அவர்கள் கூறியிருந்தார்கள். இல்லாவிட்டால் திகிலாலும், பயத்தாலும் நாங்கள் இறந்தே போயிருப்போம்" என்று எழுதுகிறாள். 

ஆம். உள்ளபடியே சில வினாடிகள் மட்டும் காண்பிக்கப்பட்ட அந்த நரகக் காட்சியும் கூட, அவர்களுடைய உயிரைப் பறிக்கும் அளவுக்கு மிக பயங்கரமானதாக இருந்தது. கொடிய பசாசுக்களும், சபிக்கப்பட்ட ஆத்துமங்களும் அந்த மகா பயங்கரமுள்ள நெருப்புக் கடலில் சொல்லிலடங்காத கொடூர வேதனைகளுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்டு அந்தக் குழந்தைகள் நடுங்கிப் போனார்கள். ஆயினும் ஞானத்துக்கு இருப்பிடமாகிய திவ்ய கன்னிகை, நரகத்தை அக்குழந்தைகளுக்குத் திறந்து காட்ட சற்றும் தயங்கவில்லை. நரகத்தைப் பற்றிய போதனை எந்த அளவுக்கு அனைத்திலும் மிக முக்கியமானது என்பதை நிரூபிக்க இந்த ஒரு சாட்சியமே போதுமானது. 

எனவே, ஒரு போலியான காரணத்தைக் கூறி, நரகப் பசாசைப் போல், தேவ அன்னையை விடத் தங்களை அதிக ஞானமுள்ளவர்களாகக் காட்டிக்கொள்ள யாரும் இனி துணிய வேண்டாம்! 

வேத போதகர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் புதிய வேத போதகக்களங்களைத் தேடி ஆத்துமத் தாகத்தோடு செல்லக் காரணமாயிருப்பது இந்த நரக சத்தியமே. பாரிஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராயிருந்த நம் ஞானத் தகப்பன் அர்ச். சவேரியாரை, இந்த இந்திய நாட்டிற்கு இழுத்து வந்து, எந்த வசதியும் இல்லாத இந்நாட்டில் கால்நடையாகவே சுற்றித் திரியச் செய்ததும் இந்த நரக சத்தியமே. கிறீஸ்து நாதர் ஏற்படுத்திய தேவத் திரவிய அநுமானங்கள், அவற்றின் மூலமாகவும், ஜெபம் முதலிய வேறு வழிகளின் மூலமாகவும் மனிதர் மீது வெகு தாராளமாக சர்வேசுரனால் பொழியப்படும் வரப்பிரசாதம் ஆகியவற்றின் நோக்கம் ஆன்மாக்களை நரகத்திலிருந்து மீட்டு இரட்சிப்பதே தவிர வேறு எதுவுமில்லை. 

நரகம் இருக்கிறது! உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் அதில் விழும் ஆபத்து இருக்கிறது. அதிலிருந்து தன் ஆன்மாவைக் காத்துக்கொள்வது ஒன்றே மனித வாழ்வின் ஏக இலட்சியமாக இருக்கிறது. இதற்கு மாறான போதனையெல்லாம் பசாசிடமிருந்தே வருகிறது. 

எனவே ஆண்டவரே வெளிப்படுத்திய இந்த சத்தியத்தை விசுவசித்து, முழு மனதோடு அதை ஏற்றுக்கொண்டு, அநுதினமும் அதைப் பற்றி சிந்தித்து, முடிந்த வரை அதைப் பிறருக்கு போதித்து, உங்களுடையவும், பிறருடையவும் இரட்சணியத்தை அடைந்து கொள்ள முன்வருவீர்களாக!