சத்தியம் 1: கத்தோலிக்க திருச்சபை தெய்வீகமானது
“மேலும், நாம் உண்மையான விசுவாசத்தை ஏற்று, அதில் தொடர்ந்து நீடித்திருக்கும் கடமையை நாம் சரிவர செய்யும்படியாக, சர்வேசுரன் தமது ஒரே பேறான சுதன் வழியாக திருச்சபையை ஏற்படுத்தி, அது தம்முடைய ஏற்பாடுதான்; என்பதற்கான மிகத் தெளிவான அடையாளங்களை அதற்கு தந்து, சகல மனிதரும் அது, வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையின் போதகன், என்பதை கண்டுபிடிக்கும்படி செய்துள்ளார்''.
- (1ம் வத்திக்கான் சங்கம் (Dz-1793)
சத்தியம் 2: கத்தோலிக்க திருச்சபை மட்டுமே இரட்சண்யத்தின் ஒரே பேழையாக இருக்கிறது.
“கத்தோலிக்க திருச்சபை உறுதியாக விசுவாசித்து, வெளிப்படுத்தி போதிப்பது என்னவென்றால், திருச்சபையில் உட்பட்டு வாழாதவர்கள், அஞ்ஞானிகள் மட்டுமல்ல, ஆனால் யூதர்கள், பதிதர்கள், பிரிவினைக்காரர்கள் ஆகியோர் நித்திய வாழ்வுக்கு பங்காளிகள் ஆக முடியாது. ஆனால், அவர்கள் வாழ்வு முடியும் முன்பாக, சேசுகிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்படாவிட்டால் அவர்கள், சாத்தானுக்கும், அவன் தூதர்களுக்கும் தயாரிக்கப்பட்ட நித்திய நெருப்புக்குள் போவார்கள். (மத் 25:41”
- (பிளாரன்ஸ் சங்கம், (Dz-174)
சத்தியம் 3: கத்தோலிக்க திருச்சபை அழியாமல், எப்போதும் தெளிவாக கண்ணுக்குப் புலப்படும்.
“மேலும், மேய்ப்பர்களின் தலைவரும், ஆடுகளின் உன்னத மேய்ப்பருமான ஆண்டவர் சேசு கிறிஸ்து , இடைவிடாத இரட்சணியத்திற்கும் திருச்சபையின் நிலையான நன்மைக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட அப்போஸ்தலரான அர்ச். இராயப்பரில் நிலை நிறுத்திய ஏற்பாடு, பாறைமேல் கட்டப்பட்ட திருச்சபையில் அதே சிருஷ்டிகரால் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். காலங்கள் முடியும் வரை உறுதியாக நிலைத்திருக்கும்.
- (1ம் வத்திக்கான் சங்கம், (Dz-1824) ''கிறிஸ்துவின் ஒரே திருச்சபை எல்லோரும் காணும்படி விளங்குகிறது. அதனுடைய சிருஷ்டிகரின் சித்தப்படியே, அவர் அதனை ஏற்படுத்தியப்படியே விளங்கும்"
- (பாப்பரசர் 9ம் பத்திநாதர்)
சத்தியம் 4: திருச்சபை அர்ச். இராயப்பர் மேலும், அவருடைய வாரிசுகள் மேலும் என்றென்றைக்கும் ஸ்தாபிக்கப்பட்டது.
“எவனாவது, அகில திருச்சபையின் மேலும் முதன்மைப் பெற்ற இடைவிடாத அர்ச். இராயப்பரின் வாரிசுகள்(பாப்பரசர்கள்) தோன்றுவது, ஆண்டவராகிய சேசு கிறிஸ்துதாமே நிறுவிய ஏற்பாட்டால் அல்ல என்றோ, அல்லது தெய்வீக உரிமையால் அல்ல என்றோ கூறினால், அவன் சபிக்கப்படக்கடவான்...''
'யாராவது உரோமை பாப்பரசருக்கு ஆய்வு செய்யும் அல்லது வழிகாட்டும் அதிகாரம் மட்டுமே உண்டு, ஆனால் அகில திருச்சபையின் மேலும் முழுமையான , முதன்மையான அதிகாரமும், விசுவாசம் நல் ஒழுக்கம் தொடர்பான காரியங்களில் மட்டுமல்ல, ஒழுங்கு கட்டுப்பாடு, உலகம் முழுவதும் பரவியிருக்கும் திருச்சபையின் நிர்வாக ஆட்சியும் இல்லை என்று கூறினால் அவன் சபிக்கப்படக்கடவான்".
- 1ம் வத்திக்கான் சங்கம், (Dz-1825, 1831)
“ஆனால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மேற்றிராணியாரும் உரோமை பாப்பரசரின் அதிகாரத்திற்கு கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறார்கள். அதே சமயம் மேற்றிராணியார்கள் ஒன்று சேர்ந்தால் அவர்கள் கீழ்ப்படிய கடமையில்லை என்று கூறுவது சத்தியத்திற்கு எதிரானது, திருச்சபையின் தெய்வீக ஏற்பாட்டிற்கு முரணானது".
- (பாப்பரசர் 13 ம் சிங்கராயர்
சத்தியம் 5 : பாப்பரசரிடம் உள்ள அதிகாரம் (அவர்) கிறிஸ்து நாதரின் திருச்சபையை "இடிப்பதற்கு அல்ல, கட்டுவதற்கே (2 கொரி, 13:10) - பாரம்பரிய விசுவாசத்தை காப்பாற்றுவதற்கு மட்டுமே.!
"இராயப்பரின் வாரிசுகள் அவருடைய வெளிப்படுத்துதல் என்று கூறிக்கொண்டே புது சத்தியங்களை வெளியிடுவதற்கு இஸ்பிரித்து சாந்து அவர்களுக்கு வாக்களிக்கப்படவில்லை. ஆனால், அவருடைய உதவியோடு, அப்போஸ்தலர்கள் வழியாக வெளிப்படுத்தப் பட்டவைகளையும், விசுவாச சத்தியங்களின் இருப்பை (Deposit of Faith) பரிசுத்தமாக பாதுகாக்கவும், பிரமாணிக்கமாக அவற்றைப் போதிக்கவும் மட்டுமே இஸ் பிரித்து சாந்து அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டார்”.
- (1-ம் வத்திக்கான் சங்கம், (Dz-1836)
“நமது ஆண்டவர் சேசு கிறிஸ்து நாதர் ஏற்படுத்திய தேவ திரவிய அனுமானங்களுக்கு மாற்றாக வேறொன்றை திருச்சபை எக்காலத்திலும் ஏற்படுத்தியதில்லை. ஏற்படுத்தவும் முடியாது. ஏனெனில், திரிதெந்தீன் பொதுச் சங்கம் போதிப்பது போல திருச்சபையின் ஏழு தேவ திரவிய அனுமானங்களும் நமது ஆண்டவர் சேசுகிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த தேவ திரவிய அனுமானங்களின் பொருண்மையின் மேல், அதாவது தேவ வெளிப்பாடுகளின் மூலங்கள் சாட்சியாக, நமது ஆண்டவர் சேசுகிறிஸ்து தாமே , தேவ திரவிய அனுமானத்தின் அடையாளத்தில் காப்பாற்றும்படி கட்டளையிட்டவைகளின் மேல் திருச்சபைக்கு அதிகாரம் இல்லை''.
- (பாப்பரசர் 12ம் பத்திநாதர், SACRAMENTUM ORDINIS (Dz-2301)
“இது எல்லா மனிதருக்கும் தெரிந்ததே. எத்துணை பெரிய கவனத்தோடும் ஆயருக்குரிய விழிப்புணர்வுடனும் நமது முன்னோர்களான உரோமை பாப்பரசர்கள் அப்போஸ்தலர்களின் தலைவரான அர்ச். இராயப்பர் வழியாக நமதாண்டவர் சேசு கிறிஸ்து அவர்களிடம், ஒப்படைத்த பணியை நிறைவேற்றினார்கள். தளராமல், ஆடுகளுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கும் உணவளிக்கும் கடமையை நிறைவேற்றினார்கள். மிகுந்த கவனத்தோடும், பிரயாசையோடும், ஆண்டவரின் மந்தை முழுவதிற்கும் விசுவாச போதனையால் ஊட்டமளித்து, நன்மையான சத்தியங்களில் தோயச் செய்து, விஷமேறிய மேய்ச்சல் நிலங்களிலிருந்து காப்பாற்றினார்கள். அந்த முன்னோர்கள் உன்னத கத்தோலிக்க திருச்சபையை, சத்தியத்தை, நீதியை நிலைநாட்டுபவர்களாகவும், காவலர்களாகவும் ஆன்மாக்களின் இரட்சணியத்தில் தலையாய கவலை கொண்டவர்களாகவும் இருந்ததால் தங்களுடைய ஞானம் மிகுந்த சுற்று மடல்களிலும், ஏற்பாடுகளிலும் - நல்லொழுக்க நேர்மைக்கும், மனுக்குலத்தின் நித்திய இரட்சணியத்திற்கும் எதிரான எல்லா தப்பறைகளையும், தவறுகளையும் வெளிப்படையாக சுட்டிக் காட்டி கண்டனம் செய்யும் கடமையை விட, பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது ஒன்றுமில்லை என்றிருந்தார்கள்...''
- (பாப்பரசர் 9ம் பத்திநாதர்)
சத்தியம் 6 : திருச்சபையின் போதனை மாற முடியாது.
"கத்தோலிக்க திருச்சபையின் விசுவாச வெளிப்படுத்துதல் அப்போஸ்தலர்களோடு முடிவு பெறவில்லை என்பது அர்ச்.10ம் பத்திநாதரால் கண்டனம் செய்யப்பட்ட தப்பறை ''.
-(Lamentabile (Dz-2021)
"மேலும், தெய்வீக கத்தோலிக்க விசுவாசத்தால் எழுதப்பட்ட சர்வேசுரனின் வார்த்தையிலும், பாரம்பரியத்திலும் உள்ளடங்கிய, விசுவசிக்கப்பட வேண்டிய எல்லாவற்றையும் திருச்சபை தன் முறையான அறிக்கையினாலும் அல்லது சாதாரண போதிக்கும் வல்லமையாலும் போதிப்பவற்றை எல்லாம் தெய்வீக வெளிப்பாடு என்று விசுவசிக்க வேண்டும்...'
"எனவே அதன் தெய்வீக சத்தியங்களின் புரிந்து கொள்ளல் எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும்படி, பரிசுத்த தாய் திருச்சபை ஒரு முறை பிரகடனப்படுத்திய பின்னர் அந்த அர்த்தத்திலிருந்து ஒருபோதும் திரும்புதல் கூடாது. ஆழ்ந்த புரிந்து கொள்ளல் என்ற பசப்புதலின் அடிப்படையில் மாற்றுதல் கூடாது...''
- (1-ம் வத்திக்கான் சங்கம், (Dz-1792,1800,1839)
சத்தியம் 7 : புரோட்டஸ்டாண்டுகளும், கத்தோலிக்கர் அல்லாத மற்ற மக்களும் விசுவாசத்தை கொண்டிருக்கவில்லை.
"திருச்சபையின் போதனையை தவறமுடியாத சட்டம் என்று கடைபிடித்து வருபவன், திருச்சபையின் போதனையை ஏற்றுக் கொள்கிறான் என்பது புலனாகிறது. இல்லாவிட்டால் திருச்சபையின் போதனைகளில் அவனே தேர்ந்தெடுத்துக் கொண்டவைகளை ஏற்று, மற்றவற்றை மறுத்தால் அவன் திருச்சபையின் போதனையை கடைபிடிக்கவில்லை. தன் சொந்த விருப்பத்தையே கடைப்பிடிக்கிறான் .... அப்படிப்பட்ட பதிதன் ஒரு சத்தியத்தின் மேல் விசுவாசம் இல்லாதது போல் மற்ற சத்தியங்கள் மேலும் விசுவாசம் இல்லாமல், தன் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வகையான அபிப்பிராயமே கொண்டிருக்கிறான்''.
- (அர்ச். தாமஸ் அக்வினாஸ்)
சத்தியம் 8: மனித சட்டம் தெய்வீக சட்டத்திற்கு உட்பட்டது.
“அதிகாரத்தில் இருப்பவர்களின் சுதந்திரம், நியாயமான காரணம் இல்லாத, சடுதி உத்தரவுகளை, தமக்கு கீழே இருப்பவர்கள் மேல் சுமத்துவதில் இருக்கவில்லை ... ஆனால், மனித சட்டத்தின் இணைக்கும் சக்தி - அது அடிப்படையில் நித்திய சட்டத்தில் இல்லாத எதனையும் அனுமதிக்க இயலாததாய், நித்திய சட்டத்தின் நடைமுறை பயனாக இருப்பதிலேயே அடங்கி உள்ளது".
- (பாப்பரசர் 13-ம் சிங்கராயர், Libertas # 10)
சத்தியம் 9: தவறான சட்டங்கள், சட்டங்கள் அல்ல.
"அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஒருவர் நேரிய பொது உண்மைகளுக்கு புறம்பாக பொது நன்மைக்கு பங்கம் வருவிக்கும் ஒன்றுக்கு, காரியங்களை அனுமதித்தால் அந்த அதிகாரம் யாரையும் கட்டுப்படுத்தாது. அதோடு இயற்றப்பட்ட சட்டம் புத்திக்கு விரோதமாக அல்லது கடவுளின் சட்டங்களுக்கு விரோதமாக இருந்தால், அதற்கு கீழ்ப்படிவது சட்ட விரோதமாகும். ஏனெனில், மனிதனுக்கு கீழ்ப்படியும் போது கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போகக் கூடாது”.
- (பாப்பரசர் 13ம் சிங்கராயர்)
சத்தியம் 10 : சில சூழ்நிலைகளில் திருச்சபை சட்டங்கள் கட்டுப்படுத்தமாட்டா.
1. சந்தேகம் இருக்கும் போது: ஒரு சட்டம் சந்தேகமாக இருக்கும் போது, அது கட்டுப்படுத்தாது”.
- (1917 திருச்சபை சட்டம்)
2. கடந்த காலத்திற்கு பொருத்தும் போது: ஒரு சட்டம் பிரகடனப்படும்போது தான் அமுலாகிறது".
- (1917 திருச்சபை சட்டம்)
3. கடைப்பிடிக்க முடியாததாய் இருக்கும் போது : (உடல் நிலை அல்லது நல்லொழுக்க காரணங்களால்) பெரும் வசதி குறைவு ஏற்படும்போது, எந்த ஆக்க சட்டமும் கட்டுப்படுத்தாது”. என்பது நல்லொழுக்க இறையியல் கொள்கை . ((1917 திருச்சபை சட்டம் (2205, 2), 1983 திருச்சபை சட்டம் (1323, 4) கடைபிடித்தால் - ஆன்மாவிற்கு கேடு விளைவிக்கும் (ஆணைகள்) பெரும் வசதி குறைவை ஏற்படுத்துகின்றன. (எனவே அவை கட்டுப்படுத்தா) “ஆன்மாக்களின் இரட்சணியமே எப்போதும் திருச்சபையின் (முதன்மையான சட்டமாக இருக்க வேண்டும்"
- (1983 திருச்சபை சட்டம், 1752)
சத்தியம் 11 : திவ்விய பலிபூசை அடிப்படையில் ஒரு விருந்து அல்ல.
“யாராவது, திவ்விய பலிபூசையில் உண்மையானதும், நிஜமானதுமான பலி கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கப்படவில்லை என்றோ, அல்லது ஒப்புக் கொடுத்தல் என்பது உண்ணும்படி நமக்கு சேசுகிறிஸ்து கொடுக்கப்படுவதை தவிர வேறு அல்ல என்றோ கூறினால், அவன் சபிக்கப்படக்கடவான்".
- திரிதெந்தீன் பொதுச் சங்கம் (Dz-948)
சத்தியம்12: திவ்விய பலிபூசை கல்வாரிப் பலியின் காலத்தை ஊடுருவிய நிகழ்வாகும்.
(இராப்போசனத்தின் சித்தரித்தல் அல்ல)
“எனவே நமது சர்வேசுரனும், ஆண்டவருமானவர் தம்மையே ஒரே முறை பிதாவாகிய சர்வேசுரனுக்கு சிலுவையாகிய பலிபீடத்தில் ஒப்புக் கொடுக்க இருந்த போது, தமது குருத்துவம் தம் மரணத்தோடு முடிவு பெறாதபடி, இராப்போசனத்தில், அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில், அவருடைய பிரியமணவாளியான திருச்சபைக்கு கண்ணுக்கு புலப்படக்கூடிய ஒரு பலியை (மனித இயல்புக்கு தேவை என்பதால் விட்டுச் செல்லும் படியாக, அது சிலுவையின் மேல் ஒருமுறை இரத்தம் சிந்தி நிறைவேற்றப்படும் பலியாக ஆக்கப்பட்டு, அதன் நினைவு உலகம் முடியும் வரை நிலைத்திருக்கும்படி ... பிதாவாகிய சர்வேசுரனுக்கு தமது சரீரத்தையும், இரத்தத்தையும் அப்ப ரச குணங்களில் ஒப்புக் கொடுத்தார்...''
- திரிதெந்தீன் பொதுச் சங்கம் (Dz-938)
சத்தியம் 13 : திவ்விய பலிபூசை ஒரு சமுதாயக் கூட்டம் அல்ல.
“யாராவது குரு மட்டுமே நற்கருணை உட்கொண்டு நிறைவேற்றும் திவ்விய பலிபூசைகள் சட்ட விரோதமானவை, அவை ரத்துசெய்யப்பட வேண்டும் என்று கூறினால் அவன் சபிக்கப்படக்கடவான்”
- திரிதெந்தீன் பொதுச் சங்கம் (Dz-955)
சத்தியம் 14: திவ்விய பலிபூசையின் செபங்கள் கடவுளை நோக்கி சொல்லப்படுகின்றன, மனிதனை நோக்கி அல்ல.
“யாராவது, உரோமன் கத்தோலிக்க ரீதியின் நடுப்பூசை செபங்களும் வசீகர வார்த்தைகளும் மெல்லிய குரலில் சொல்லப்படுவது கண்டிக்கப்பட வேண்டும் என்றால், அவன் சபிக்கப்படக்கடவான்”.
- (திரிதெந்தீன் பொதுச் சங்கம் (Dz-956)
சத்தியம் 15: திவ்விய நற்கருணை இரண்டு குணங்களிலும் விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
''யாராவது, வணக்கத்திற்குரிய திவ்ய நற்கருணையாகிய தேவ திரவிய அனுமானம் முழுமையான கிறிஸ்துநாதரை, ஒவ்வொரு குணத்திலும், பிரிக்கப்படும் போது ஒவ்வொரு குணத்தின் ஒவ்வொரு பாகத்திலும் கொண்டிருக்கிறது என்பதை மறுத்தால், அவன் சபிக்கப்படக்கடவான்''
- திரிதெந்தீன் பொதுச் சங்கம் (Dz-885)
“யாராவது பரிசுத்த கத்தோலிக்க திருச்சபை திவ்விய நற்கருணையை அப்ப வடிவில் மட்டும் விசுவாசிகளுக்கும், திவ்விய பலிபூசை நிறைவேற்றாத பொழுது குருக்களுக்கும் கூட ; வழங்குவது நியாயமான காரணங்களால் அல்ல என்றோ அல்லது திருச்சபை இவ்விஷயத்தில் தவறியுள்ளது என்றோ கூறினால் அவன் சபிக்கப்படக்கடவான்”.
- திரிதெந்தீன் பொது சங்கம், (Dz-935)
சத்தியம் 16: ஆசீர்வதிக்கப்பட்ட திவ்விய நற்கருணையே நமது ஆண்டவர், எனவே அது ஆராதிக்கப்பட வேண்டும்.
“யாராவது, பரிசுத்த திவ்விய நற்கருணையாகிய தேவதிரவிய அனுமானத்தில் சர்வேசுரனின் ஒரே பேறான சுதன் வெளியரங்கமாகக் கூட வழிபாட்டில் ஆராதிக்கப்படக்கூடாது என்று கூறினால்.... அவன் சபிக்கப்படக்கடவான்”.
திரிதெந்தீன் பொது சங்கம், (Dz-888)
சத்தியம் 17: திவ்விய நற்கருணை அப்பத்தின் குணங்களிலும் இரசத்தின் குணங்களிலும் முழு கிறிஸ்துவை கொண்டிருக்கிறது.
"யாராவது பரிசுத்த தேவ நற்கருணையாகிய தேவதிரவிய அனுமானம் உண்மையாகவே, பொருண்மையாகவே நமது ஆண்டவர் சேசு கிறிஸ்துவின் சரீரத்தையும், இரத்தத்தையும், ஆன்மாவோடும் தேவ சுபாவத்தோடும் கொண்டிருப்பதால் முழு கிறிஸ்து என்பதை மறுத்து, அவர் அதில் ஓர் அடையாளமாக அல்லது உருவகமாக அல்லது சக்தியாக இருக்கிறார் என்று கூறினால் அவன் சபிக்கப்படக்கடவான்.
- திரிதெந்தீன் பொது சங்கம், (Dz-883)
சத்தியம் 18 : கத்தோலிக்க திருச்சபையின் குருத்துவம் சர்வேசுரனால் உருவாக்கப்பட்டது.
யாராவது ....... "என் ஞாபகமாக இதைச் செய்யுங்கள்" "(லூக். 22:19; 1 கொரி 11:24) என்ற வார்த்தைகளால் கிறிஸ்துநாதர் அப்போஸ்தலர்களை குருக்களாக்கவில்லை என்றோ, அல்லது அவர்களும் மற்ற குருவானவர்களும் அவருடைய சொந்த சரீரத்தை ஒப்புக் கொடுக்க கட்டளையிடவில்லை என்றோ கூறினால் அவன் சபிக்கப்படக்கடவான்”
திரிதெந்தீன் பொது சங்கம், (Dz-949)