சேசு-மாமரி இருதயங்களைப் பிரித்துப்பார்க்கக் கூடாது!

பாத்திமா தூதரின் மூன்று காட்சிகளிலும் அவர் சேசு-மாமரி  இருதயம் ஒரே மத்தியஸ்தராக இருப்பதை மிகத்தெளிவாக கூறுகிறார்.

முதல் காட்சியில், என் தேவனே நான் உன்னை விசுவசிக்கிறேன் “ என்ற ஜெபத்தை மும்முறை சொல்லி அனைவருக்காகவும் பரிகாரம் செய்தபின், “ இப்படி ஜெபியுங்கள் சேசி-மாமரி  இருதயங்கள் உங்கள் மன்றாட்டை செவியுற்றுக் கேட்கிறார்கள் “ என்று கூறினார்.

இரண்டாம் காட்சியில் : “ என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஜெபியுங்கள். மிக அதிகமாக ஜெபியுங்கள் “ என்று கூறியபின். “ சேசு மாமரி  இருதயங்கள் இரக்கமுள்ள திடங்களை உங்களுக்கென வைத்திருக்கிறார்கள் “ என அதே தூதர் கூறினார்.

மூன்றாம் காட்சியில், “ மகா பரிசுத்த தமதிரித்துவமே பிதாவே சுதனே இஸ்பிரித்துசாந்துவே (பரிசுத்த ஆவி) …” என்ற ஜெபத்தில், “ சேசுவின் திருஇருதயத்துனுடையவும், மரியாயின் மாசற்ற இருதயத்துடனுடயவும் அளவற்ற பேறுபலங்களைப் பார்த்து நிர்பாக்கிய பாவிகளை மனதிருப்பும்படி மன்றாடுகிறேன் “ என்று கூறினார்.

தூதரின் இம்மூன்று காட்சிகளிலும் சேசுவும் மாதாவும் கடவுளுக்கும், மனிதருக்குமிடையில் மத்தியஸ்தராக இருக்கிற உண்மையை எடுத்துக்காட்டினார். சேசுவையும், மாதாவையும் பிரித்துப்பார்க்க கூடாது என்பதை தெளிவாக்கினார்.

நாம் கடவுளைப் பார்த்து ஜெபிக்கும்போது, சேசு-மாமரியின்  இருதயங்களே அதை ஏற்றுக்கொண்டு நமக்கு வரப்பிராதங்களாக பொழிகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். அதே போல் நாம் கடவுளிடம் செல்லும் வழியாக இருப்பதும் சேசு-மாமரியின்  இருதயங்களே என்பதையும் விளக்கிக்காட்டினார்.

விவிலியத்தில் உள்ள உதாரணத்தைப் பார்ப்போம். இயேசுவை காணிக்கையாக ஒப்புக்கொடுக்க சென்ற போது அன்னை மரியாயைப் பார்த்து சொன்ன வார்த்தையான “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ (லூக்காஸ் 2 : 35) என்றாரே அது எப்போது நிகழ்ந்தது ?.

இயேசுவின் பாடுகளை அவரோடு இனைந்து கல்வாரிவரை அவரின் அத்தனைப் பாடுகளையும் உள்ளத்தில் சுமந்தார்களே அப்போதும் இருவரின் உள்ளங்களும் ஒன்று பட்டது. இயேசு கல்வாரி மலையில் உயிர்விட்டபின்பு தானே அவர் இருதயம் ஒரு படைவீரனால் குத்தப்பட்டது.

அப்போது யார் இருதயம் வலியால் துடித்தது? அந்த வலி இயேசுவுக்கு அல்ல எனென்றால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். அந்த வலியை முழுவதும் அனுபவவித்தவர்கள்  இயேசுவின் தாயும், நம் தாயுமான அன்னை மாமரியாள்.

இதுவே சிமியோன் முன்னுரைத்துக் கூறிய வாக்கு “ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ என்பது நிறைவேறியது.

ஆகவே இயேசுவின் இருதயம் துன்பப்பட்டால் அன்னை மரியாயின் உள்ளம் துன்பப்படும். அதே போல் அன்னை மரியாயின் இருதயம் துன்பப்பட்டால் இயேசுவின் இருதயம் துன்பப்படும்.

இதை உணராத எத்தனையோ பேர் இயேசுவின் பெயரை சொல்லிக்கொண்டு அன்னை மரியாயை  ஒதுக்குவதும், அவமானப்படுத்துவதும், அவசங்கைப்பத்துவதையே அன்றாட கடமையாக வைத்துள்ளார்கள். அப்படிச் செய்தால் இயேசு மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறார்கள்.

மாறாக இயேசு எவ்வளவு வேதனைப்படுகிறார் என்பது அவர்களுக்கு புரிவதில்லை. இயேசு வேதனையில் இருக்கும்போது அன்னையும் அதிகமாக வேதனைப்படுகிறார்கள்.

சேசு-மாமரியின்  இருதயங்களைப் பற்றி யார் கவலைப்பட்டாலும் படாவிடாலும் நாம் கவலைப்படுவோம் அந்த இருதயங்களுக்கு நாம் ஆறுதல் தருவோம் என்பதைவிட நாமாவது ஆறுதல் தருவோம்.

திருப்பலியில் அதிக பக்தியோடு பங்கேற்போம். தினமும் நம்மால் எவ்வளவு ஜெபமாலை சொல்ல முடியுமோ அவ்வளவு ஜெபமாலை ஜெபிப்போம்.

நமது அனைத்து தேவைகளையும் , உள்ளத்து விருப்பங்களையும் ,  நம் குடும்பங்களையும் , நம் மாவட்டத்தையும் , நம் நாட்டையும் , நம்  பங்கு ஆலயத்தையும் , இந்த உலகத்தையும் ,  அன்னையின் மாசற்ற இருதயத்தின் வழியாக மூவொரு இறைவனுக்கு  ஒப்புக்கொடுப்போம்.