கர்த்தர் கற்றூணில் கட்டுண்டு அடிபடுகிறார்.

கோழை உள்ளம்  கொண்ட பிலாத்து இயேசுநாதர் குற்றமற்றவர், நீதிமான் என்று தெளிவடைந்திருந்தும் துணிந்து நேர்முகமாக இயேசுவை விடுதலை செய்ய அஞ்சி பற்பல குறுக்கு வழிகளில் அவரை விடுவிக்கத் தேடினான் . பலனில்லை .யூதரின் மனத்தைக் கரைக்க எண்ணியவனாய் இயேசுவைக் கசையால் அடிக்கக் கற்பிக்கிறான் . என்ன கேவலமான தண்டனை . மனித யோக்கியதையை இழந்த பெரும் அக்கிரமிகளுக்குத் தான் இந்த ஆக்கினை . இந்த ஆக்கினைக்கு ஆளானவன் நாலு பேருக்கு முன் தலை காட்ட அஞ்சுவான். எத்தகைய குரூரமான ஆக்கினை . கசையடி தாங்க மாட்டாமல் கட்டுமஸ்தான சரீரம் உள்ளவர்களில் பலர் அடிபடும்போதே சோர்ந்து செத்து வீழ்ந்திருக்கிறார்கள் . இயேசுவுக்கு நேர்ந்த இந்தக் கொடூர ஆக்கினையை நினைக்கும் போதே நாம் இதன் அர்த்தத்தை கண்டுபிடிக்காமல் மயங்குகிறோம் . மெய்யாகவே இறைவனுடைய இரகசியங்களில் இது ஒன்று

ஒரு தூணின் உச்சி நுனியில் ஆண்டவரின் கரங்கள் கட்டப்பட்டிருக்கின்றன .கால் விரல்கள் தரையை தொட்டும் தொடாமலும் இருக்கின்றன .ஆண்டவர் தொங்குகிறார் என்று சொல்லலாம் . சாட்டை நுனியில் சிறு ஈயக் குண்டுகளோ , எலும்புத் துண்டுகளோ முடியப்பட்டிருக்கின்றன .சேவகர்கள் அடிக்க வருகின்றனர் . இதைக் கண்டு ஆண்டவரின் உடல் முதல் நிமிடம் நடுங்குகிறது .அடிக்கிறார்கள் , சதை புடிக்கிறது . இரத்தக் கீற்றுகள் பாய்கின்றன . தோல் உரிகின்றது சதை துண்டு துண்டாய்ப் பறக்கிறது . இரத்தம் ஆறாய் ஓடுகிறது . முதுகு, தோள், நெஞ்சு, முகம், கை, கால், தொடை எங்கும் சரமாரியாய் அடி . ஆண்டவர் கண்களிலிருந்து கண்ணீர் ஓடுகிறது ; பெருமூச்சு விடுகிறார். அனர்த்துகிறார். அடித்து முடித்தவுடனே எலும்புக்கூடாய் சதையும் குருதியும் சேர்ந்த சேற்றில் இயேசு விழுந்து புழுப் போல் நெளிகிறார். உருண்டு சென்று தன் ஆடையைத் தாமே தேடி எடுத்து அணிந்து கொள்ளுகிறார் .உதவிக்கு நாதியேது?

உடலின்பத்தைக் கருதி மக்கள் கட்டிக் கொள்ளும் அக்கிரமங்கள் எத்தனை எத்தனை வகை ! நூதனம் நூதனமாக எத்தனை இனம்! அவைகளுக்குப் பரிகாரமாக இக்கொடிய வேதனை! சென்ம பாவதோஷத்தினால் மனிதனுக்கு இயற்கையாயுள்ள பலவீனத்தை ஆற்றுகிறார். மனிதன் தன் உடலுக்குத் தபம் அவசியமென்று காட்டுகிறார் . இன்பசுக நாட்டத்தின் அடிமைத்தனத்தினின்று தப்பிக்க ஆசிக்கிறவர்கள் இக்கசையடியில் இயேசுவோடு ஒன்றிக்க வேண்டும் . ஒருத்தல் ஜெப முயற்சிகளால் தங்களைத் தாமே கசக்க வேண்டும். ஐம்புலன்களை அடக்காமல் ,ஈடேறலாம் என்று எண்ணி ஏமாந்து போகிறவர்கள், கற்றூணில் கட்டுண்டு கசையடிபட்ட இயேசுவின் காட்சியைக் கண்டு பொய்காரப் பேயை ஓட்ட வேண்டும்.

இயேசுவுக்கு நம் மேல் உள்ள அன்பு எத்தனை பெரிது ! எவ்வளவு தாராளமாய் நம் பாவங்களுக்குப் பரிகாரம் செய்கிறார் . இயேசுவின் ஒரு சொட்டு கண்ணீர் , ஒரு துளி இரத்தம் ஒரு உலகத்தை அல்ல ஓராயிரம் உலகத்தையே ஈடேற்றப் போதும் . ஆனால் மோகப் பேயின் வலையில் வீழ்ந்த மனிதனின் மனம் அதைக் கண்டு அசையாது . இக்கொடிய வாதனை தான் சில பேருக்காவது பாவத்தின் அக்கிரமத்தை உணர்த்தும் .இயேசுவின் அன்பை நாம் அறிய வருவோமாக

வியாகுலத்தாய் அதை அறிவார் . அவர்தான் ஆண்டவரின் அன்பின் பெருமையை நமக்கு விளக்க வேண்டும் . இச்சமயம் மாசற்ற மாமரி எங்கு இருந்தார் ? பிலாத்தின் அரன்மனையண்டை பழுதற்ற கன்னிகை இருந்தார் என்றனர் சிலர் . இக்கோரக் காட்சியை எவாறு அவர் சகிக்கக் கூடும் என்பாயோ ? அருகில் இல்லாவிட்டால் காட்சியால் இக்கண்ணறாவியை அவர் அவசியம் கண்டிருப்பார் . பல ஞானிகளின் எண்ணம் ஏதெனில் , பளீர் பளீர் என்னும் கசையின் அடியின் ஓசையையும் இயேசுவின் அனர்த்தத்தையும் பெருமூச்சையும் கேட்டார் , உள்ளது உள்ளபடி உணர்ந்தார் . தயையின் அரசி அதை எவ்விதம் தாங்கினார்?