வந் . மார்செல் லெபெப்ர் ஆண்டகையின் பிரசங்கம் 28/10/1979 (ஒரு பகுதி)

''கிறிஸ்துராஜாவின் திருநாளை ஏற்படுத்தி, அதற்கென வெளியிட்ட "Quas Primas" என்னும் ஆவணத்தில் பாப்பரசர் 11ம் பத்திநாதர் - கிறிஸ்துநாதர் ராஜாவாக இருப்பதற்கு இரண்டு ஆழமான காரணங்களை விளக்குகிறார்.

கிறிஸ்து ராஜா ஏனெனில் :

1. அவர் மனித அவதாரம் எடுத்த கடவுள்,

2. தமது இரத்தத்தால், சிலுவையால், கல்வாரியால் சகல ஆன்மாக்களையும் வென்று கைப்பற்றியவர் "Regnavit a ligno Deus - சிலுவையிலிருந்து (மரத்திலிருந்து சர்வேசுரன் ஆட்சி செய்கிறார்”.

1. அவர் மனித அவதாரம் எடுத்த கடவுள், ஆண்டவரின் மனித அவதாரத்தில், அவருடைய ஆன்மாவும், சரீரமும் தேவநிலைபெற்று, தேவ சுபாவமும், மனித சுபாவமும் கொண்ட ஒரே ஆளாக, சர்வேசுரனாக இருக்கிறார்.

சேசு, எளிமையாக, தரித்திரராய் - பிறந்து, வளர்ந்து, போதித்து, மரித்து, உயிர்த்த ஒவ்வொரு நொடியிலும் சர்வ வல்லமை மிக்க சர்வேசுரனாகவே இருந்தார், இருக்கிறார். (சேசு, மரித்த போது அவருடைய ஆன்மா சரீரத்தை விட்டு பிரிந்தது, ஆனால் அவருடைய தெய்வீகம் ஒரே சமயத்தில், அவருடைய ஆன்மாவுடனும், திருச்சரீரத்துடனும் பிரியாமல் இருந்தது.)

சர்வேசுரன் சர்வத்திற்கும் அதிபதி, ராஜா, சர்வேசுரனாகிய நமதாண்டவர் அளவற்ற மகத்துவம் பொருந்திய ராஜாவாக நம்மை ஆளவேண்டும், அப்படியே ஆட்சி செய்கிறார்.

2. தமது இரத்தத்தால் ...... கைப்பற்றியவர் - ஒவ்வொரு மனிதனின் ஆன்மாவும் சேசுவின் இரத்தத்தால் மோட்சத்திற்கு வெல்லப்பட்டது. எனவே நம்மை அரசாளும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. கிறிஸ்துராஜா, நமது அறிவின் எண்ணங்களின் ராஜாவாக இருக்க வேண்டும், ஏனெனில் அவரே சத்தியம், அவரே சர்வேசுரன்! நமதாண்டவர் சேசு கிறிஸ்து நடைமுறையில் 'நமது எண்ணங்களின் ராஜாவாக, ''நமது சிந்தனைகளின் ராஜாவாக,' 'நமது விசுவாச வாழ்க்கையின் ராஜாவாக, ''நமது சித்தத்தின் ராஜாவாக இருக்கிறாரா?

"அவரே நமது சட்டம்!..... இந்த சட்டத்தினாலேயே சகலமும் உருவாக்கப்பட்டன. நமதாண்டவர் மனிதரின் ஆன்மாவுக்கும், மனதிற்கும், சித்தத்திற்கும் மட்டுமல்ல - இயற்கைக்கும் அவரே சட்டமாக இருக்கிறார்"! இயற்கையில் நாம் காணும் (விஞ்ஞானத்தால் கண்டுப்பிடிக்கப்படும் விதிகள்) சட்டங்கள் அனைத்தும் நமதாண்டவர் இயற்றியவையே, சர்வேசுரனுடைய வார்த்தையிலிருந்தே இவை வந்துள்ளன! படைப்புகள் அனைத்தும் (மனிதனை தவிர?) இந்த சட்டங்களை, விதிகளை சிறிதும் பிறழாமல் கடைபிடிக்கின்றன.

பெளதிக விதிகள், வேதியியல் விதிகள், தாவரவியல் விதிகள், மிருக இன விதிகள்......... எப்போதும் கடைப்பிடிக்கப்படுகின்றன

நாமும், மனச் சுதந்திரமாக, நமது மகிழ்வும், நித்திய ஜீவியத்தின் வழியுமான இந்த சட்டத்துடன் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்..!

ஆனால் மனிதன் இச்சட்டத்தை விட்டு விலகி உள்ளான். மறுபடியும் சேசு கிறிஸ்து நமது சித்தத்தின் ராஜாவாக வேண்டும். அவருடைய சட்டத்திற்கு நமது சித்தத்தை உள்ளடக்க வேண்டும்! அவருடைய சட்டம் சிநேகத்தின் சட்டம்! "தேவ சிநேகம், பிறர் சிநேகம் "

சேசுகிறிஸ்து நமது இருதயங்களின் அரசராக வேண்டும். சேசுவே நமக்கு சகலமும்! என்பதை நாம் உணருகிறோமா? நமது தேவமாதாவும், நமது நல்ல தந்தை அர்ச். சூசையப்பரும் சர்வேசுரனோடு வாழ்ந்தார்கள். நாமும் சர்வேசுரனோடு வாழ முடியும். அவர்களை விட நெருக்கமாக நாம் திவ்விய நற்கருணை சேசுவுடன் வாழ முடியும்! அவர் திவ்விய நற்கருணையில் நம்மிடம் வரும்போது, “ஆண்டவரே, நீரே என் ராஜாவாக இரும்” என்று மன்றாடுவோம்! மரியாயின் சிநேகத்தையும், அர்ச். சூசையப்பரின் சிநேகத்தையும் அவர் நமக்கு கொடுக்கும் படி வேண்டுவோம். சேசுவின் இனிய ராஜ்ஜியத்தில் நாங்கள் வாழ எங்களுக்கு உதவுங்கள் என்று நமது தேவதாயிடமும், அர்ச். சூசையப்பரிடமும் வேண்டுவோம்.

இவ்வுலகில் ஆண்டவரின் பாடுகளையும், சிலுவையையும் நாம் சுமந்து கடக்க வேண்டும், அப்போதுதான் நாம் அவருடைய உத்தானத்தின் மகிமையை அடைய முடியும். அந்த மகிமையே மோட்சம்! அவருடைய மகிமையே மோட்சத்திற்கு, ஒளி! இவ்வுலகில் நாம் அவரை ராஜாவாகக் கொண்டிருந்தால், நித்திய காலமும் நாம் அவரை ராஜாவாகக் கொண்டிருப்போம்".