சேசுநாதர் தமது தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உம் மகன் என்றார். பின்னும் சீடனை நோக்கி: இதோ உன் தாய் என்றார்

கல்வாரியின்மீது பல பெண்கள் தொலைவிலிருந்து சிலுவையின் மீதிருந்த சேசுவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் என்று அர்ச். மாற்கு சுவிசேஷத்தில் நாம் வாசிக்கிறோம். அவர்களில் மரிய மதலேனம்மாளும் இருந்தாள். இந்தப் பரிசுத்த பெண்களில் தேவமாதாவும் இருந்தார்கள் என்று நாம் நம்புகிறோம். ஆனால் அர்ச். அருளப்பர், திவ்விய கன்னிகை தொலைவில் அல்ல, மாறாக, சிலுவைக்கு அருகில் கிளேயோப்பா மரியம்மாளோடும், மரிய மதலேனம்மாளோடும் நின்று கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறார் (அரு.19:25). யூத்திமியுஸ் என்பவர் இந்த முரண்பாட்டைச் சரிசெய்யும் முயற்சியாக, திவ்விய கன்னிகை தனது திருமகன் மரணத்தை நெருங்கி வருவதைக் கண்டு மற்ற பெண்களிடமிருந்து விலகி, சிலுவைக்கு நெருக்கமாக வந்தார்கள், அதைச் சூழ்ந்து நின்ற போர்வீரர்கள் பற்றிய அச்சத்தின் மீது அவர்கள் வெற்றி கொண்டார்கள், தன் நேச மகனுக்கு அருகில் வரும்படியாக, தண்டனைத் தீர்ப்பிடப்பட்டவர்களுக்குக் காவலாக இருந்த போர்வீரர்களின் அவமானங்கள், எதிர்ப்புகளை தேவ அன்னை பொறுமையோடு தாங்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறார். சேசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மற்றொரு அறிஞரான ஞான ஆசிரியர் சொல்வதாவது: ""அங்கே அவரது நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் தொலைவிலிருந்தே அவரைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் திவ்விய கன்னிகையும், மரிய மதலேனம்மாளும், மற்றொரு மரியாளும் அருளப்பரோடு சிலுவைக்கு அருகில் நின்றார்கள்; ஆகவே, சேசுநாதர் தமது தாயாரையும், அருளப்பரையும் கண்டபோது, மேலே குறிப்பிடப் பட்ட வார்த்தைகளை அவர்களிடம் கூறினார். உண்மையாகவே அவர்கள் ஒரு தாயாக இருந்தார்கள். மரண பயத்திலும் கூட அவர்கள் தன் திருமகனைத் தனியே விட்டு விடவில்லை. சில தாய்மார் தங்கள் குழந்தைகள் மரிப்பதைக் காணும்போது, அங்கிருந்து ஓடிப் போகிறார்கள். சாவிலிருந்து தங்கள் குழந்தைகளை விடுவிக்கத் தங்களால் இயலாதபோது, அந்தச் சாவை சகித்துக் கொள்ள முடியாதபடி குழந்தைகளின் மீது அவர்களுக்கு உள்ள அன்பு அவர்கள் ஓடிப் போகச் செய்கிறது. ஆனால் பரிசுத்த அன்னை, தன் திருமகன் எவ்வளவு அதிகமாக மரணத்தை நெருங்கிச் சென்றாரோ, அவ்வளவு அதிகமாக அவரது திருச்சிலுவையை நெருங்கி வந்தார்கள்.''

கொடிய வியாகுலத்தால் நொறுக்கப்பட்ட தேவமாதா இவ்வாறு சிலுவையின் அருகில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களது திருமகன் தம் உயிரைப் பலியாக்கிக் கொண்டிருந்தது போலவே, அவர்களும் தனது பயங்கர வேதனைகளை மனிதர்களின் இரட்சணியத்துக்காக ஒப்புக்கொடுத்தார்கள். இவ்வாறு தனது திருமகன் தமது மரணத்தில் அனுபவித்த எல்லா வேதனைகளையும், அவமானங்களையும் பூரண அமைதலோடு அவர்கள் அவரோடு பகிர்ந்து கொண்டார்கள். மாமரி துக்க மிகுதியால் சிலுவையின் அடியில் மயங்கி விழுந்தார்கள் என்று சொல்பவர்கள் மாமரியின் திடமனதையும் நிலைத்த தன்மையையும் அவமதிக்கிறார்கள். அவர்கள் வீரமிக்க பெண்ணாக இருந்தர்கள். அவர்கள் மயங்கி விழவுமில்லை, அழவுமில்லை. ""அவர்கள் அழுது கொண்டிருப்பதைப் பற்றியல்ல, நின்று கொண்டிருப்பதைப் பற்றியே நான் வாசிக்கிறேன்'' என்கிறார் அர்ச். அம்புரோஸ்.

தனது திருமகனின் திருப்பாடுகளில் திவ்விய கன்னிகை அனுபவித்த கொடிய வியாகுலம் மனித இருதயம் தாங்கக் கூடிய வேதனைக்கெல்லாம் அப்பாற்பட்டதாயிருந்தது. ஆனால் மாமரியின் கொடும் துயரம், தங்கள் குழந்தைகளின் துன்பங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிற மற்ற தாய்மாரின் துயரங்ளைப் போலப் பலனற்ற துயரமாக இருக்கவில்லை. அவர்களுடைய பெரும் வியாகுலத்தின் வழியாகவும், நேசத்தின் வழியாகவும், அர்ச். அகுஸ்தினாரின் கருத்துப்படி, நம் சிரசாயிருப்பவருக்கு அவர்கள் சுபாவமான தாயாராக இருப்பது போலவே, அவரது பிரமாணிக்கமுள்ள உறுப்பினர்களாகிய நமக்கு அவர்கள் அந்த நேரத்தில் ஆன்ம தாயார் ஆனார்கள். இவ்வாறு தனது அன்பைக் கொண்டு, அவரோடு ஒத்துழைத்து, நாம் திருச்சபையின் மக்களாகப் பிறக்கவும், இருக்கவும் காரணமாக இருக்கிறார்கள்.

கல்வாரி மலையின் மீது சேசு மரியாயாகிய இந்த இரண்டு மாபெரும் வேதசாட்சிகளும் மவுனமாக இருந்தார்கள், ஏனெனில் அவர்கள் அனுபவித்த பெரும் வேதனை பேசும் திறனை அவர்களிடமிருந்து எடுத்து விட்டிருந்தது என்று அர்ச். பெர்னார்ட் எழுதுகிறார். தாயார் தன் திருமகனைச் சிலுவையின் மீது மரண அவஸ்தையில் காண்கிறார்கள். திருமகன் தாம் அனுபவிக்கும் வேதனைகளைக் கண்ட பரிதாபத்தால் முழுவதும் காயப்பட்டவர்களாக, சிலுவையின் அடியில் மரண அவஸ்தையோடு நிற்கும் தாயைக் காண்கிறார். அங்கு நிலவிய பெரும் அமளிக்கு மத்தியிலும் சேசுநாதரின் வார்ததைகளை அதிக எளிதாகக் கேட்கவும், அவரது பார்வைகளைக் குறித்துக் கொள்ளவும், மாமரியும், அருளப்பரும் மற்றவர்களை விட சிலுவைக்கு அதிக நெருக்கமாக நின்றார்கள். 

"சேசுநாதர் தமது தாயாரையும், அங்கு நின்ற தம்மால் சிநேகிக்கப்பட்ட சீஷனையும் கண்டபோது, தம்முடைய தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உம் மகன் என்றார். பின்னும் சீஷனை நோக்கி இதோ உன் தாய் என்றார்'' என்று அர்ச். அருளப்பர் எழுதுகிVர் (அரு.19:26). ஆனால் மரியாயோடும், அருளப்பரோடும் மற்ற பெண்களும் நின்றிருந்தார்கள் என்றால், சேசு மற்றவர்களைக் கவனிக்கவில்லை என்பது போல, தம் தாயாரையும் சீடரையும் அவர் கண்டார் என்று ஏன் சொல்லப்பட்டுள்ளது? நேசம் எப்போதும் நம் நேசத்திற்குரியவரை அதிக நெருக்கமாகக் காணும்படி செய்கிறது என்று அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் எழுதுகிறார். அர்ச். அம்புரோஸும் இதே விதமாக: ""மற்ற யாருக்கும் முன்பாக நம்மால் நேசிக்கப்படுபவர்களை நாம் காண்பது இயல்பானதே'' என்று எழுதுகிறார். சேசுநாதர், சிலுவைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த தமது தாயாரைப் பார்க்கும்படியாக, முதலில் தாம் தெளிவாகக் காண முடியாதபடி தடுத்துக் கொண்டிருந்த இரத்தத்தைத் தமது கண்புருவங்களை நெறிப்பதன் மூலம் அகற்ற வேண்டியிருந்தது என்று திவ்விய கன்னிகை அர்ச். பிரிஜித்தம்மாளுக்கு வெளிப்படுத்தினார்கள்.

சேசு தம் அருகில் நின்று கொண்டிருந்த அர்ச். அருளப்பரை நோக்கித் தம் கண்களைத் திருப்பியபடி தம் தாயிடம்: ""ஸ்திரீயே, இதோ உம் மகன்'' என்றார். ஆனால் அவர் ஏன் தம் தாயாரை ""அம்மா!'' என்று அழைக்காமல் ""ஸ்திரீயே!'' என்று அழைத்தார்? ஏனெனில் தாம் மரணத்தை நெருங்கி வருகையில், மாமரியிடமிருந்து விடைபெறுபவரைப் போல் அவர் அவர்களிடம்: "ஸ்திரீயே, இன்னும் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன். நீங்கள் பூமியின் மீது உங்கள் மகனைக் கொண்டிருக்க மாட்டீர்கள். ஆகவே, நான் அருளப்பனை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன், அவன் ஒரு மகனாக உங்களுக்குப் பணிவிடை செய்து உங்களை நேசிப்பான்' என்பது போலப் பேசினார். இதிலிருந்து, அர்ச். சூசையப்பர் அப்போது ஏற்கெனவே இறந்திருந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் அவர் உயிரோடு இருந்திருந்தால், அவர் தான் இன்னும் திருத்தாயாரின் பாதுகாவலராக இருந்திருப்பார்.