இன்றே நீ என்னோடு கூடப் பரகதியில் இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்

சேசுநாதரோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்ளர்களைப் பற்றி அர்ச். லூக்காஸ் எழுதுகிறார். அவர்களில் ஒருவர் தொடர்ந்து பிடிவாதமுள்ளவனாக இருந்தான். மற்றொருவன் மனந்திரும்பினான். தனது பரிதாபத்திற்குரிய தோழன் சேசுகிறீஸ்துவுக்கு எதிராக, ""நீ கிறீஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள்'' என்று தேவதூஷணம் உரைப்பதைக் கேட்ட அவன், அந்தக் கெட்ட கள்ளனை நோக்கித் திரும்பி, தாங்கள் தண்டனை பெறுவது நியாயம்தான் என்றும், ஆனால் சேசுநாதர் மாசற்றவர் என்றும் கூறினான். அதன்பின் அவன் சேசுவிடம் திரும்பி,: ""சுவாமி, தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது, அடியேனை நினைத்தருளும்'' என்று விண்ணப்பம் செய்தான். இந்த வார்த்தைகளின் மூலம் அவன் சேசுகிறீஸ்துவை மெய்யான ஆண்டவர் என்றும் பரலோக அரசர் என்றும் அங்கீகரித்துக் கொண்டான். அதே நாளில் சேசுநாதர் அவனுக்குப் பரலோகத்தை வாக்களித்தார்: ""இன்றே நீ என்னோடு கூடப் பரகதியில் இருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்'' (லூக்.23:39-43). இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, ஆண்டவர் அதே நாளில், தமது மரணத்திற்குப் பின் உடனடியாக மனந்திரும்பிய கள்ளனுக்குத் தம்மை வெளிப்படையாகக் காண்பித்து, அவனுக்கு மோட்ச பாக்கியம் தந்தார் என்றாலும், அவன் மோட்சத்தில் நுழையும் வரை அதன் முழு இன்பத்தையும் அவர் அவனுக்குத் தரவில்லை என்று அறிஞரான ஒரு ஞான ஆசிரியர் கூறுகிறார்.

ஷார்த்தேயின் ஆர்னால்ட் ஏழு வாக்கியங்களைப் பற்றிய தமது ஆய்வுக் கட்டுரையில், நல்ல கள்ளன் தனது மரண நேரத்தில் செயல்படுத்திய எல்லாப் புண்ணியங்களைப் பற்றியும் குறித்துக் காட்டுகிறார்: ""அவன் விசுவசித்தான், மனஸ்தாபப்பட்டான், பாவ சங்கீர்த்தனம் செய்தான், போதித்தான், நேசித்தான், நம்பினான், ஜெபித்தான்.''

"தேவரீர் உமது இராச்சியத்தில் சேரும்போது'' என்று சொன்ன போது, அவன் விசுவாசத்தைச் செயல்படுத்தினான். சேசுநாதர் தமது மரணத்திற்குப் பிறகு, தமது மகிமையுள்ள இராச்சியத்திற்குள் நுழைவார் என்று அவன் விசுவசித்தான். மரிக்கிறவராக அவன் கண்டவர் ஆட்சி செலுத்த இருந்தார் என்பதை அவன் விசுவசித்தான் என்று அர்ச். கிரகோரியார் கூறுகிறார். ""நமக்கு இது நியாயம்தான், நம் செய்கைகளுக்குத் தக்க சம்பாவனையைப் பெறுகிறோம்'' என்று அவன் சொன்னபோது, அவன் தன் பாவங்களுக்கு மனஸ்தாபத்தையும், தனது பாவசங்கீர்த்தனத்தையும் செயற்படுத்தினான். தனது பாவசங்கீர்த்தனத்திற்கு முன் தன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நம்பும் துணிவு அவனிடம் இருக்கவில்லை, தன் குற்றத்தை அறிக்கையிட்டுத் தன் பாவங்களின் சுமையை இறக்கி வைக்கும் வரை, ""என்னை நினைவுகூரும்'' என்று சொல்ல அவன் துணியவில்லை என்று அர்ச். அகுஸ்தினார் அவதானிக்கிறார். இதைப் பற்றி அர்ச். அத்தனாசியார் ஆச்சரியத்தோடு: ""ஓ ஆசீர்வதிக்கப் பட்ட கள்ளனே, நீ அந்தப் பாவசங்கீர்த்தனத்தால் ஒரு இராச்சியத்தையே திருடிக் கொண்டாய்'' என்கிறார்.

இந்தப் பரிசுத்த மனிதன் வேறு மேன்மை மிக்க புண்ணியங்களையும் கொண்டிருந்தான். அவன் சேசுநாதரின் மாசற்றதனத்தைப் பற்றி அறிக்கையிட்டு போதித்தான். ""இவரோ ஒரு பொல்லாப்பும் செய்தவரல்ல.'' அவன் தேவசிநேகத்தைப் பயிற்சி செய்தான். ""நமக்கு இது நியாயம்தான், நமது செய்கைகளுக்குத் தக்க சம்பாவனையைப் பெறுகிறோம்'' என்று சொல்லி, அவன் தன் மரணத்தைத் தன் பாவங்களுக்குரிய தண்டனையாக அமைந்த மனதோடு ஏற்றுக் கொண்டான். இதன் காரணமாக, அர்ச். சிப்ரியனும், அர்ச். அகுஸ்தினாரும் எந்த மனவுறுத்தலும் இன்றி அவனை ஒரு வேதசாட்சி என்று அழைக்கிறார்கள்; கொலைஞர்கள், அவன் சேசுநாதரின் மாசற்றதனத்தை அறிக்கையிட்டான் என்பதால் அதிகரிக்கப்பட்ட கோப வெறியுடன் அவனது கால்களை முறித்தார்கள் என்பதால், பாக்கியம் பெற்ற இந்தக் கள்ளன் ஓர் உண்மையான வேதசாட்சியாக இருந்தான், தனது ஆண்டவரின் மீது தனக்குள்ள அன்பிற்காக, இந்த வாதையை இந்தப் புனிதன் மனமுவந்து ஏற்றுக்கொண்டான் என்று சில்வேயிரா கூறுகிறார்.

இந்தச் சூழ்நிலையில் கடவுளின் நன்மைத்தனத்தையும் நாம் குறித்துக் காட்ட வேண்டும். அர்ச். அம்புரோஸ் கூறுவது போல, நாம் கேட்பதை விட அவர் எப்போதும் நமக்கு அதிகமாகவே தருகிறார்: அந்தக் கள்ளன் தன்னை நினைவுகூரும்படி மட்டும்தான் ஜெபித்தான். ஆனால் சேசுநாதரோ, ""இன்றே நீ என்னோடு கூடப் பரகதியில் இருப்பாய்'' என்று வாக்களித்தார். மேலும், அர்ச். கிறிசோஸ்தோம் அருளப்பர் இதைப் பற்றி, இந்தக் கள்ளனுக்கு முன் பரலோகத்தை சொந்தமாக்கிக் கொள்வதற்கு யாரும் தகுதி பெறவில்லை என்கிறார். இவ்வாறு, கடவுள் எசேக்கியேலின் மூலம் சொன்னது உறுதிப்படுத்தப்படுகிறது: பாவியானவன் இருதய பூர்வமாகத் தன் பாவங்களுக்கு மனம் வருந்தும்போது, அவன் கட்டிக்கொண்ட எல்லாப் பாவங்களையும் தாம் மறந்து விட்டது போன்ற அதே முறையில் கடவுள் அவனை மன்னிக்கிறார். மேலும், கடவுள் நம் நலனைப் பற்றி எவ்வளவு அவசரமுள்ளவராக இருக்கிறார் என்றால், நாம் ஜெபிக்கும்போது, அவர் அதே கணத்தில் நம் ஜெபத்தைக் கேட்கிறார் என்று இசையாஸ் நாம் புரிந்து கொள்ளச் செய்கிறார். மனஸ்தாபப்படும் பாவிகளை அரவணைத்துக் கொள்ளக் கடவுள் எப்போதும் ஆயத்தமாய் இருப்பதாக அர்ச். அகுஸ்தினார் கூறுகிறார்.

இவ்வாறு, கெட்ட கள்ளனின் சிலுவை, பொறுமையின்மையோடு தாங்கிக் கொள்ளப்பட்டபோது, அது அவனை நரகத்திற்கு இட்டுச் செல்லும் செங்குத்தான மலைச்சரிவாக ஆனது. நல்ல கள்ளனின் சிலுவை, பொறுமையோடு அவனால் தாங்கப்பட்டபோது, அது அவனுக்கு மோட்சத்திற்கான ஏணியாக ஆனது. ஓ உன் மரணத்தை உன் இரட்சகரின் மரணத்தோடு இணைக்கும் பாக்கியத்தைப் பெற்ற பரிசுத்த கள்ளனே, நீ பேறுபெற்றவன்! ஓ என் சேசுவே, இன்றுமுதல் நான் என் வாழ்வை உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கிறேன். சிலுவையின் மீது கடவுளுக்கு நீர் ஒப்புக்கொடுத்த உமது பலியோடு என் வாழ்வின் பலியையும் இணைக்கும்படி, என் மரண நேரத்தில் எனக்கு உதவும்படி வரப்பிரசாதத்தைத் தேடுகிறேன். மேலும், ஒவ்வொரு உலக நாட்டமும் உரிந்து அகற்றப்பட்ட மாசற்ற நேசத்தோடு உம்மை நேசித்து, நித்திய காலமும் என் முழு வல்லமையோடும் உம்மை நேசிக்கும் வரத்தை அடைந்து கொள்வேன் என்றும் நம்பியிருக்கிறேன்.