முத். சாக்ஸனி ஜோர்டான் என்பவர் அர்ச். சாமிநாதரிடம் செய்த ஜெபம்

ஓ முத்திப்பேறு பெற்ற எங்கள் தந்தையாகிய அர்ச். சாமிநாதரே, சர்வேசுரனுடைய மிகப் பரிசுத்த குருவும், மகிமைமிக்க ஸ்துதியருமானவரே, அவரது திருவார்த்தையின் மேன்மை மிக்க போதகரே, தேவரீரை நோக்கி அடியேன் அபயமிடுகிறேன்.  ஓ ஆண்டவரால் தெரிந்து கொள்ளப் பட்டதும், அவருக்கு இன்பந் தந்ததும், உமது நாளில் மற்ற எல்லோருக்கும் மேலாக அவரால் நேசிக்கப்பட்டதுமான கன்னிமையுள்ள ஆத்துமமே,  ஜீவியத்திலும், போதகத்திலும், அற்புதங்களிலும் மகிமையோடு சிறந்து விளங்கிய புனிதரே, உம்மை நோக்கி  நான் மன்றாடுகிறேன்.  நம் சர்வேசுரனாகிய ஆண்டவருக்கு  முன்பாக   நீர்   எனக்காகப்  பரிந்து பேசுகிறவராய் இருக்கிறீர் என்பதை அறிந்து நான் களிகூர்கிறேன்.  சர்வேசுரனுடைய சகல புனிதர்களுக்கும், தெரிந்து கொள்ளப் பட்டவர்களுக்கும் மத்தியில், விசே­ பக்தியோடு நான் வணங்குகிற உம்மை இந்தக் கண்ணீர்க் கணவாயில் நின்று  கூவியழைக்கிறேன். ஓ நேசமுள்ள பிதாவே, வரப்பிரசாதத்திலும், புண்ணியத்திலும் குறைவுள்ளதாக மட்டுமின்றி, பற்பல தீமைகளாலும், பாவங்களாலும் கறைப்பட்டதாகவும் இருக்கிற என் பாவகரமான ஆத்துமத்திற்கு தேவரீர் உதவ வேணுமென்று உம்மைப் பிரார்த்திக்கிறேன்.

பரிசுத்த சாமிநாதரே, கடவுளின் மனிதரே, முத்திப்பேறு பெற்றவர்கள் மத்தியில் அதிக மகிழ்ச்சியோடிருக்கிற உம் திரு ஆத்துமமானது, மிகுந்த பரிதாபத்திற்குரியதும், சகல நன்மைகளும் குறைவுபடுவதுமாகிய என் ஆத்துமத்திற்கு உதவி செய்தருளும்.  உம் நிமித்தமாக மாத்திரமின்றி, மற்றவர்களுடைய நன்மைக்காகவும் தேவ வரப்பிரசாதமானது உமது ஆத்துமத்தை அபரிமிதமான ஆசீர்வாதங்களால் வளப்படுத்தியதே.  சர்வேசுரன் உம்மை இளைப்பாற்றிக்கும், பரலோகத்தின் சமாதானத்திற்கும், அர்ச்சிஷ்டவர்களின் மகிமைக்கும் உயர்த்த மட்டுமின்றி, உமது அற்புத ஜீவியத்தின் மாதிரிகையால் இன்னும் எண்ணிலடங்காத ஆத்துமங்களை அதே ஆசீர்வதிக்கப் பட்ட நிலைக்கு ஈர்த்துக் கொள்ளவும்  சித்தங்கொண்டார்.  உமது நேசமுள்ள ஆலோசனைகளைக் கொண்டு எண்ணற்ற ஆத்துமங்களை அவர் தூண்டியயழுப்பினார்.  உமது இனிய போதனைகளைக் கொண்டு அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.  உமது பக்தியார்வமுள்ள போதகத்தால் அவர் அவர்களைப் புண்ணிய நெறிக்குக் கவர்ந்திழுத்தார்.  ஆதலால், ஓ முத்திப்பேறு பெற்ற சாமிநாதரே, நீர் எனக்கு உதவி செய்து, என் மன்றாட்டின் குரலுக்கு நேச இரக்கத்தோடு செவிசாய்ப்பீராக.

எங்கள் பரிசுத்த தந்தையாகிய சாமிநாதரே,  எனக்கு உதவ நீர் வல்லவராயிருக்கிறீர் என்பதை முழு உறுதியுடன் மெய்யாகவே நான் அறிந்திருக்கிறேன்.  உமது மாபெரும் சிநேகப்பெருக்கத்தில் தேவரீர் எனக்கு உதவ ஆசையாயிருக்கிறீரென்றும் நான் நம்புகிறேன்.   நம் திவ்ய இரட்சகர் தமது எல்லையற்ற இரக்கத்தில் நீர் வேண்டி மன்றாடுகிற சகலத்தையும் உமக்கு அருளுவாரென்றும் நான் நம்புகிறேன். நீர் இந்தப் பூமியிலிருந்த போதும் கூட  “ஆயிரம் பேருக்குள் தேர்ந்து கொள்ளப் பட்டவராகிய” உமது திரு இருதயத்தின் பூரண நேசத்துக்குரியராகிய நம் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் பேரில் நீர் கொண்டிருந்த நேசமிகுதியைக் காணும்போது என்னுடைய இந்த நம்பிக்கை மேலும் உறுதிப்படுகிறது.  அவர் உமக்கு எதையும் மறுக்க மாட்டார்.  நீர் கேட்கிற சகல காரியங்களையும் பெற்றுக் கொள்வீர். அதேனென்றால் அவர் உமது ஆண்டவராயிருந்தாலும், அவ்வாறே அவர் உம்முடைய சிநேகிதராகவும் இருக்கிறார்.  இவ்வளவாக நேசிக்கிற ஒருவருக்கு, அப்படி நேசிக்கப்படுகிறவர் எதையும் மறுக்க முடியாது.  அவருக்காகச் சகலத்தையும் துறந்தவரும், அவருடைய நேசத்திற்காக உம்மையும், நீர் சொந்தமாகக் கொண்டிருந்த யாவற்றையும் கையளித்தவருமாகிய உமக்கு அவர் எல்லாவற்றையும் தந்தருள்வார்.

ஓ எங்கள் பரிசுத்த தந்தையான சாமிநாதரே, நீர் உம்மை முழுவதும் சேசுகிறீஸ்துநாதருக்கு அர்ப்பணித்ததினாலே அடியோர்கள் உம்மை ஸ்துதித்து வணங்குகிறோம். உமது பாலப் பருவத்திலேயே நீர் கன்னியர்களின் வசீகரமுள்ள மணவாளருக்கு உமது கன்னிமையின் ஆத்துமத்தை ஒப்புவித்தீர்.  தேவ இஸ்பிரீத்துவானவரின் வரப்பிரசாதத்தால் ஒளிவீசித் துலங்கிய உமது ஞானஸ்நான மாசற்றதனத்தில், நீர் உம் ஆத்துமத்தைப் பக்திப் பற்றுதலுள்ள நேசத்தோடு அரசர்க்கரசரான சர்வேசுரனிடத்தில் கையளித்தீர்.  மிகவும் இளம் பிராயத்திலேயே நீர் பரிசுத்த கத்தோலிக்க ஒழுக்கத்தின் பூரண ஆயுதந் தரித்து நின்றீர்.  உமது ஜீவியத்தின்  “விடியற்காலையிலேயே” கடவுளை நோக்கி உமது இருதயம் பல படிகளைத் தாண்டி உயர்ந்து சென்றதே!  தொடர்ந்து ஞானபலத்தில் முன்னேறினீர்.  நன்மைத்தனத்தில் இடையறாமல் உயர்ந்து கொண்டே சென்றீர்.  உமது சரீரத்தைக் கடவுளுக்கு உயிருள்ளதும், பரிசுத்தமானதும், பிரியமானதுமாகிய பலியாக ஒப்புக் கொடுத்தீர்.  தேவஞானத்தால் கற்பிக்கப் பட்டு, அவருக்கு உம்மைப் பூரணமாக அர்ப்பணித்தீர்.  பரிசுத்ததனத்தின் பாதையில்  நடக்கத் தொடங்கிய பிறகு நீர் ஒருபோதும் திரும்பிப் பார்க்கவில்லை.  ஆனால் நமக்காக சகலத்தையும் இழந்த கிறீஸ்துநாதருக்கு உமக்குரிய சகலத்தையும் கையளித்து, பூலோகத்தை விடப் பரலோகத்திலேயே உமது பொக்கி­த்தைக் கொண்டிருக்கத் தீர்மானித்து, அவரைப் பிரமாணிக்கத்தோடே பின்சென்றீர்.

ஓ எங்கள் பரிசுத்த தந்தையாகிய சாமிநாதரே, உம்மையே மறுதலிப்பதில்  நீர்  தீவிரமாயிருந்தீர்.  வெகு கம்பீரத்தோடு உமது சிலுவையைச் சுமந்து சென்றீர்.  நமது மெய்யான இரட்சகரும், வழிகாட்டியுமாயிருக்கிற கிறீஸ்துநாதரின் பாதச்சுவடுகளில் திடதைரியத்தோடு கால் பதித்தீர்.   உமது பக்திப் பற்றுதலுள்ள ஆத்துமத்தில் கொழுந்து விட்டுப் பிரகாசித்து எரிந்த தேவசிநேக அக்கினியில் உம்முடைய சகலமும் பற்றியயரிந்து கொண்டிருக்க, தரித்திர வார்த்தைப்பாட்டின் வழியாக நீர்  உம்மை முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணித்தீர்.  நீராகவே முன்வந்து அதை அரவணைத்துக் கொண்டீர். அன்றியும் இஸ்பிரீத்து சாந்துவானவரின் ஏவுதலால், மிகக் கடுமையான வேதபோதக தரித்திரத்தைக் கடைப்பிடிக்கும் போதக குருக்கள் சபையை ஸ்தாபித்தீர்.  உமது பேறுபலன்கள் மற்றும் நன்மாதிரிகையின் ஒளிப்பிரவாகத்தைக் கொண்டு  திருச்சபை முழுவதையும் ஒளிர்வித்தீர்.  உமது மாம்சத்தின் சிறையிலிருந்து பரலோக சபைக்கு பரிசுத்த தேவன் உம்மை அழைத்த போது, உமது ஆத்துமம் நித்திய மகிமைக்குப் பறந்து சென்றது.  இப்போது தேவரீர் ஒளிவீசும் ஆடைகளை அணிந்தவராக எங்களுக்காகப் பரிந்து பேசும்படி சர்வேசுரனுக்கு அருகாமையில்  நின்று கொண்டிருக்கிறீர். 

ஆகையினால் எனக்கு உதவும்படி உம்மை மன்றாடுகிறேன். எனக்கு மட்டுமல்ல, என் நேசத்துக்குரிய சகலருக்கும் தேவரீர் உதவி செய்வீராக.  இவ்வாறே குருத்துவ அந்தஸ்தில் இருக்கிறவர்களுக்கும், மக்களுக்கும், சர்வேசுரனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற பெண்களுக்கும் உதவுவீராக. இக்காரியங்களை மிகுந்த நம்பிக்கையோடு உம்மிடம் நான் கேட்கிறேன். ஏனென்றால் மனுக்குலம் முழுவதும் இரட்சிக்கப்பட வேணுமென்று நீர் எப்போதும் மிகுந்த ஆசை கொண்டிருந்தீர். கன்னியர்களின் பரிசுத்த இராக்கினிக்குப் பிறகு, மற்ற எல்லாப் புனிதர்களுக்கும் மேலாக, நீர்தாமே என் நம்பிக்கையாகவும், என் ஆறுதலாகவும், என் அடைக்கலமாகவும் இருக்கிறீர்.  உமது இரக்கத்தில் எனக்கு உதவ இறங்கி வாரும்.  ஏனென்றால்  உம்மிடமே  நான் பறந்து வருகிறேன்.  உம்மிடமே அடியேன் வந்து, உமது திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கிறேன்.

ஓ பரிசுத்த தந்தையே, உம்மை என் பாதுகாவலராக ஏற்றுக் கொள்கிறேன்.  ஆர்வத்தோடு உம்மிடம் ஜெபிக்கிறேன். பக்தியோடு உம்மிடம் என்னைக் கையளிக்கிறேன்.  என்னை அன்போடு ஏற்றுக் கொள்ளும்படியாக உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.  என்னை ஆதரித்துக் காப்பாற்றி, எனக்கு உதவி செய்தருளும்.  அதனால் உமது பரிவிரக்கத்தின் வழியாக, நான் இரக்கத்தையும், இவ்வுலகிலும், மறுவுலகிலும் என் ஆத்தும நலனுக்கு அவசியமான சகல  நன்மைகளையும் அடைந்து கொள்வதற்கு ஏதுவாக நான் விரும்புகிற தேவ வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள நான் தகுதி பெறுவேனாக.  ஓ என் எஜமானரே, எனக்கு இந்த வரத்தைப் பெற்றுத் தாரும்.  ஓ எங்கள் தந்தையும், தலைவருமாகிய முத்திப்பேறு பெற்ற சாமிநாதரே, இதை எனக்காகச் செய்தருளும்.  எனக்கும், உமது திருநாமத்தைக் கூவியழைக்கும் சகலருக்கும் துணையாக வருவீராக.  எங்களுக்கு நீர் சாமிநாதராக, அதாவது ஆண்டவருடைய மனிதராக இருப்பீராக.   ஆண்டவருடைய மந்தையின் அக்கறையுள்ள ஆயனாக இருப்பீராக. உமது நேசப் பாதுகாவலில் ஒப்படைக்கப் பட்டிருக்கிற எங்களைக் காத்து நடத்தி ஆண்டருளும்.  எங்கள் ஜீவியத்தைத் திருத்தி, எங்களைக் கடவுளோடு மீண்டும் ஐக்கியப் படுத்தியருளும்.  நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு, மகிமை பொருந்திய கன்னிமரியாயோடும், பரலோக சபை முழுவதோடும், நித்திய காலமும் மகிமையிலும், ஸ்துதி புகழ்ச்சியிலும், எல்லையற்ற சந்தோ­த்திலும், நித்திய மோட்சானந்தப் பேரின்பத்திலும் வாசஞ்செய்கிறவரும், நேசத்திற்குரியவரும், உயர்த்தப் பட்டவருமாயிருக்கிற தேவ சுதனும், எங்கள் ஆண்டவருமாகிய சேசுகிறீஸ்து நாதரிடத்தில் எங்களைக் கையளிப்பீராக. ஆமென்.