விசுவாசப் பிரகரணம், நம்பிக்கைப் பிரகரணம், தேவ சிநேகப் பிரகரணம்

விசுவாசப் பிரகரணம்

திவ்ய இஸ்பிரீத்து சாந்துவே, தேவரீரை உறுதிப் பூசுதல் என்னும் தேவத் திரவிய அனுமானத்தின் வழியாக நான் பெற்றுக் கொள்ள இருக்கிறேன் என்பதை உறுதியாக விசுவசிக்கிறேன். தேவரீர்தாமே இதை அறிவித்திருக்கிற படியினாலும், நீரே சத்தியமாக இருக்கிறதினாலும் இதை நான் விசுவசிக்கிறேன்.


நம்பிக்கைப் பிரகரணம்

பரிசுத்தரும், அர்ச்சிக்கிறவருமாயிருக்கிற தேவ இஸ்பிரீத்துவானவரே, உறுதிப்பூசுதலாகிய தேவத்திரவிய அனுமானத்தில் தேவரீரை அடியேன் பெற்றுக் கொள்வதன் வழியாக, உம்முடைய வரப்பிரசாதங்களை நான் அபரிமிதமாய்ப் பெற்றுக் கொள்வேன் என்று நம்பியிருக்கிறேன். மேலும் தேவரீர் என்னை ஓர் உத்தம கிறீஸ்தவனாக்குவீர் என்றும், என் உயிருக்கு ஆபத்து வரக் கூடுமாயிருந்தாலும் விசுவாசத்தை அறிக்கையிடுவதற்கான பலத்தை எனக்குத் தந்தருள்வீர் என்றும் நம்பியிருக்கிறேன்.


தேவ சிநேகப் பிரகரணம்

ஓ திவ்ய இஸ்பிரீத்துவானவரே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். அதேதென்றால், தேவரீர் எல்லையற்ற நன்மைத்தனமுள்ளவராகவும், நேசிக்கப்படத் தக்கவராகவும் இருக்கிறீர். உமது நேசத்தின் அக்கினியை என்னில் பற்றியெரியச் செய்தருளும். மேலும் உறுதிப் பூசுதலாகிய தேவத்திரவிய அனுமானத்தில் தேவரீரை அடியேன் பெற்றுக் கொண்டு, என் ஜீவிய கால முழுவதும் என் அந்தஸ்தின் கடமைகளைப் பிரமாணிக்கமாக நிறைவேற்ற வரமருள்வீராக.